உலக, நாடு, தமிழக நடப்புகள் பற்றி, வாசகர்கள் தினமலர் நாளிதழில் எழுதிய கடிதம் :
கு.காந்திராஜா, சென்னையிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: சென்னையில் உள்ள பத்மா சேஷாத்ரி சி.பி.எஸ்.இ., பள்ளியை, மாநில அரசின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர ஆலோசிக்கப்படுவதாக, பள்ளிக்கல்வி துறை அமைச்சர் மகேஷ் கூறியிருக்கிறார். அந்த பள்ளியில் ஆசிரியராக பணி புரியும் ராஜகோபாலன் பாலியல் தொல்லை கொடுத்ததாக, மாணவியர் புகார் கொடுத்துள்ளனர். அதன் அடிப்படையில், ஆசிரியர் ராஜகோபாலன் கைது செய்யப்பட்டு உள்ளார். மேற்கொண்டு விசாரணை நடந்து வரும் நிலையில், அமைச்சர் இப்படி கூறியிருக்கிறார்.

குற்றச்சாட்டுக்கு ஆளானவர் மீது, சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டும். இச்சம்பவத்தில் வேறு யார் யாருக்கு தொடர்புள்ளது என்பதை கண்டறிந்து, அவர்கள் மீதும் கடும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். ஆனால், ஆசிரியர் ஒருவர் பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளாகியிருக்கிறார் என்பதற்காக, அந்த பள்ளியையே அரசின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவர ஆலோசிப்பது, ஆளுங்கட்சியின் அடாவடித்தனத்தின் உச்சமாக தெரிகிறது. இதில் சிறிது கூட நேர்மையோ, நியாயமோ இல்லை. அரசு பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர்கள் மீது கூட பாலியல் குற்றச்சாட்டுகள் கூறப்பட்டிருக்கின்றன என்பதை மறந்து விட முடியாது. தற்போது அப்படி ஒரு குற்றச்சாட்டு எழுந்தால், அரசு பள்ளிகள் அனைத்தையும் மூடிவிட முடியுமா? நடப்பதை பார்க்கும்போது, குற்றவாளியை தண்டிப்பதை விட, அப்பள்ளியை செயல்பட விடாமல் முடக்க வேண்டும் என்ற எண்ணத்தில், தமிழக அரசு செயல்படுவதாக தெரிகிறது.

அந்த பள்ளி மீது நடவடிக்கை எடுப்பதற்காகவே, தி.மு.க., அரசு திட்டமிட்டு இந்த குற்றச்சாட்டை புனைந்திருக்கிறதோ என்ற எண்ணமும் தோன்றுகிறது. சிறுபான்மையினர் நடத்தும் பள்ளிகளில், இதுபோன்ற குற்றச்சாட்டு எழுந்த போது, அவ்விஷயம் யாராலும் கண்டுகொள்ளப்படவே இல்லை. அவ்விஷயம் கல்வி நிலையம், சம்பந்தப்பட்ட மாணவியோடு முடிந்துவிட்டது. மாணவியரிடம் அத்துமீறுவோர் யாராக இருந்தாலும், கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும். குற்றவாளியிடம் ஜாதி, மத பேதம் பார்க்கக் கூடாது. பத்மா சேஷாத்ரி பள்ளியை, தமிழக அரசே எடுத்து கொள்வது என்ற ஆலோசனை சரி என்றால், தி.மு.க., பொறுப்பில் இருப்பவர் யார் மீதாவது, பாலியல் குற்றச்சாட்டு கூறப்பட்டால், கட்சியையே கலைக்க வேண்டும் என்பதும் சரி தானே!
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE