எதிர்க்குரல் கொடுப்பதற்கு முன் சிந்திப்பது நல்லது: சூட்சமத்தைப் புரிந்து கொள்வோம், சும்மா பேசுவதை விட!| Dinamalar

சிறப்பு பகுதிகள்

சிந்தனைக் களம்

எதிர்க்குரல் கொடுப்பதற்கு முன் சிந்திப்பது நல்லது: சூட்சமத்தைப் புரிந்து கொள்வோம், சும்மா பேசுவதை விட!

Updated : ஜூன் 04, 2021 | Added : ஜூன் 02, 2021 | கருத்துகள் (56)
Share
இலங்கையில் உள்ள அம்பாந்தோட்டை துறைமுகத்தையும் அருகேயுள்ள ஏராளமான நிலத்தையும் சீனாவுக்கு, நீண்ட கால குத்தகைக்கு எழுதிக் கொடுத்துள்ளது அந்நாடு. இந்த துறைமுகத்தை அங்கே உருவாக்கிக் கொடுத்தது சீனா தான். அதற்கான கடனைத் திருப்பிச் செலுத்த முடியாது போகவே, நீண்டகால குத்தகைக்கு, துறைமுகப் பட்டணத்தையே கொடுத்துள்ளனர் அந்நாட்டு ஆட்சியாளர்கள்.இதனால், அந்தப் பகுதி, சீனாவின்
எதிர்க்குரல், சிந்திப்பது,சூட்சுமம், இலங்கை, சீனா, துறைமுகம்,

இலங்கையில் உள்ள அம்பாந்தோட்டை துறைமுகத்தையும் அருகேயுள்ள ஏராளமான நிலத்தையும் சீனாவுக்கு, நீண்ட கால குத்தகைக்கு எழுதிக் கொடுத்துள்ளது அந்நாடு. இந்த துறைமுகத்தை அங்கே உருவாக்கிக் கொடுத்தது சீனா தான்.

அதற்கான கடனைத் திருப்பிச் செலுத்த முடியாது போகவே, நீண்டகால குத்தகைக்கு, துறைமுகப் பட்டணத்தையே கொடுத்துள்ளனர் அந்நாட்டு ஆட்சியாளர்கள்.இதனால், அந்தப் பகுதி, சீனாவின் ஆளுகைக்குட்பட்ட பகுதியாக மாறிவிட்டது. அங்கே இலங்கையைச் சேர்ந்தவர்களே செல்ல முடியாது. அங்கே சீன நாணயமான ரென்மின்பி தான் புழக்கத்தில் இருக்கும்.அந்தப் பகுதியில், சீனா என்ன வேண்டுமென்றாலும் செய்யலாம். இந்தியாவைக் கண்காணிக்கும் விதத்தில், சீன கடற்படையையும், இதர உளவு அமைப்புகளையும் அங்கே நிலைநிறுத்தலாம். அதனால் இந்தியாவுக்குப் பெரிய பாதுகாப்பு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது என, தமிழக தலைவர்கள் பேசுகின்றனர்.


கடனால் சிக்கல்இந்த விஷயத்தைத் தெளிவாகப் புரிந்து கொள்ள வேண்டும். இதில் முதல் குற்றவாளி இலங்கை. விடுதலைப் புலிகளுடனான போருக்குப் பின், இலங்கையை மீண்டும் கட்டியெழுப்பும் முயற்சியில் இறங்கியபோது, அந்நாடு அமெரிக்காவோடோ, இந்தியாவோடோ அதிகம் நெருக்கம் காட்ட விரும்பவில்லை.இனப் படுகொலையில் ஈடுபட்டது இலங்கை அரசு என்ற குற்றச்சாட்டு, சர்வதேச அரங்குகளில் வலுவாக வைக்கப்பட்டது. அதன் மீது பொருளாதாரத் தடைகளை விதிக்க வேண்டும் என்றும் கோரப்பட்டது. ஐரோப்பாவிலும், அமெரிக்காவிலும் வாழும் இலங்கைத் தமிழர்கள், இந்த பிரசாரத்தை வலுவாக நடத்தியதால், அமெரிக்க அரசும், சர்வதேச அரங்கில், இலங்கைக்கு எதிர்நிலையில் நின்றே பேசியது; செயற்பட்டது.இந்தியாவையும் இலங்கை ஆட்சியாளர்கள் நம்பவில்லை. இங்குள்ள ஏழு கோடி தமிழர்கள், தங்களுக்கு ஆதரவாக நிற்கமாட்டார்கள் என்று அவர்கள் கருதினர்.

விளைவு, அவர்கள் சீனாவிடம் சென்றனர்.நாடு பிடிக்கும் பேராசையில் இருக்கும் சீனா, தானாக ஒரு இரை வந்து விழுந்தால், வேண்டாம் என்றா சொல்லும்? குறைந்தவட்டி கடன், கடனிலேயே சலுகைகள் என்று 'ரென்மின்பி' செருப்பால் அடித்தது சீனம். அப்படி உருவானது தான், அம்பாந்தோட்டா துறைமுகமும், அருகேஉள்ள நிலமும். 'இந்தியா, இலங்கைக்கு நிறைய கடன் கொடுத்து, தன் பக்கம் வைத்து இருந்திருக்க வேண்டும்; அதன்மூலம், சீனாவின் ஊடுருவலைத் தடுத்திருக்க வேண்டும்' என்று, இங்கே பேசுகின்றனர்.இந்தியாவும் செய்யாமல் இல்லை. ஏராளமான வீடுகளைக் கட்டிக் கொடுத்தது; இரயில் பாதை போட்டுக் கொடுத்தது.


புதிய சந்தை


ஆனால், நம்மை விட சீனாவையே, இலங்கை ஆட்சியாளர்கள் விரும்பினர். சுலபமான பணம்; லாபம். இதில் இந்தியாவின் தவறு எங்கே இருக்கிறது?தற்போதைய இலங்கையின் நிலை, நம் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலா? ஆம்; அதில் சந்தேகமில்லை! தமிழகத்தில் இருந்து, வெறும் 300 கி.மீ. துாரத்தில், ஆக்கிரமிப்பு ஆசையுள்ள ஒரு நாடு, கண்கொத்திப் பாம்பாக உட்கார்ந்து விட்டது என்பதை மறுப்பதற்கில்லை. அதுவும் சீனா! லேசில் நம்ப முடியாத நாடு; நம்பவும் கூடாது.அதே சமயம், சீனாவின் பார்வையில் இருந்து நீங்கள், ஓடவும் முடியாது; ஒளியவும் முடியாது. எல்லா சந்துகளிலும், ஓட்டைகளிலும் புகுந்துப் புறப்படும் குயுக்தி சீனாவுக்குத் தெரியும்.அதை பல்வேறு மட்டத்திலும், நிலைகளிலும் எதிர்கொள்வது மட்டுமே, ஒரே தீர்வு; அதைத் தான் நம் இந்தியா செய்து வருகிறது. மோடி அரசின் மிகப்பெரிய சாதனை, சீன டிராகன் வாயில், இந்தியா அரைபட்டு விடாமல் காப்பது மட்டுமே. ஒவ்வொரு முனையில் தடுப்பு அரண்கள் போடப்பட்டுள்ளன.

அமெரிக்காவின் முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப், நேரடியாக சீனாவோடு மோதத் தொடங்கிய பின், அமெரிக்கச் சந்தையில் பெரிய விரிவாக்கத்தை, சீனாவால் செய்ய முடியவில்லை. அதனால் அது, புதிய சந்தைகளைத் தேடத் தொடங்கியது. இந்தியா, மிகப் பெரிய வளமான மிடில் கிளாஸ் சந்தை. இதை வளைத்துப் போட வேண்டும் என்ற முனைப்பு சீனாவுக்கு!

* ஒரு பக்கம் இராணுவ ரீதியாக இம்சை, பல்வேறு பகுதிகளில் ஆக்கிரமிப்பு, படை குவிப்பு

* இன்னொரு பக்கம், உள்நாட்டிலேயே பல்வேறு பொருட்களுக்குச் செயற்கையாக தட்டுப்பாடுகளை ஏற்படுத்தி, சீன சார்பை மேம்படுத்துவது. உதாரணம், தாமிரம். துாத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூட வைத்ததில், மிகப் பெரிய பங்கு சீனாவுக்கு உண்டு என்ற கருத்தைத் தெரிவிக்கும் அரசியல் ஆய்வாளர்கள் உண்டு. இதனால் பயன் அடைந்த நாடு எது என்று பார்த்தாலே, உள்குத்து புரிந்து விடும்.

* மூன்றாவது வழிமுறை, 'சாப்ட் லோன்!' அதாவது, மென்மையான கடன். பாகிஸ்தான், வங்கதேசம், இலங்கை என்று, தன் கடன் வலையில் ஒவ்வொரு நாட்டையும் வளைத்துப் போட்டு சிக்க வைத்து வருகிறது சீனாஇதில் தப்பித்திருப்பது, இந்தியா மட்டுமே!எப்படி?

* சீனாவுக்கும், நமக்கும் இடையே இருக்கும், வணிக பற்றாக்குறை, 2019ல் இருந்ததை விட, 2020ல் கணிசமாக குறைக்கப்பட்டுள்ளது.ஒரு நாடு, ஏற்றுமதி செய்வதை விட அதிகமாக இறக்குமதி செய்யும் போது, வணிகப் பற்றாக்குறை ஏற்படும். சீனா நம் நாட்டில் இருந்து, பல பொருட்களை இறக்குமதி செய்து கொள்ள அனுமதிக்கவில்லை. நம் வலிமையான செயற்பாட்டின் மூலம், இந்த நிலையை மாற்றினோம்

* சீனாவின் ஆக்கிரமிப்பு மனப்பான்மையை எதிர்கொள்வதற்கு மேற்கொள்ளப்பட்ட இன்னொரு முயற்சி தான், 'குவாட்' என்பது. இந்தியா, ஜப்பான், ஆஸ்திரேலியா, அமெரிக்கா ஆகிய நான்கு நாடுகளை உள்ளடக்கிய இந்த குவாட் குழு, சீனாவுக்கு பெரிய தலைவலியாக உருவெடுத்து உள்ளது. அது உருவாக்கி வரும், 'பட்டுப் பாதை திட்ட'த்துக்கு மிகப்பெரிய இடைஞ்சலாக, இந்த நான்கு நாடுகளின் கூட்டணியைப் பார்க்கிறது இன்னும் சரியாக சொல்ல வேண்டுமென்றால், தான் மிகப் பெரிய சூப்பர் பவராக மாறுவதற்கு இந்த குவாட் அணியே இடைஞ்சல் என்றும், கருதுகிறது சீனா.சமீபத்தில், சீனாவிடம் இருந்து உதவிகளைப் பெற்று வந்த வங்கதேசம் கூட, 'இனிமேல் உன் சொல் பேச்சை கேட்க மாட்டேன்; குவாட் அணியில் சேருகிறேன்' என்று சொல்லி விட்டது. சீனாவுக்குத் தாங்கவில்லை. வங்க தேசத்தை மிரட்டத் தொடங்கி இருக்கிறது

* இந்தியாவுக்குள்ளும், சீனாவின் வர்த்தக தலையீட்டை நாம் முறியடித்து வருகிறோம். சமீபத்தில் 5ஜி அலைக்கற்றைச் சோதனையில் ஈடுபடுவதற்கு ரிலையன்ஸ் ஜியோ, பார்தி ஏர்டெல், வோடபோன் ஐடியா, எம்.டி.என்.எல்., ஆகியவற்றுக்கு இந்திய அரசு அனுமதி அளித்தது. ஆனால், இவர்கள் எவரும், சீன உதிரி பாகங்களையோ, தொழில் நுட்பத்தையோ பயன்படுத்தக் கூடாது என்று தடை விதிக்கப்பட்டு உள்ளது

* அதேபோல், அன்னிய நேரடி முதலீடுகள் விஷயத்திலும், இந்தியா உஷாராக இருக்கிறது. சீன நிறுவனங்களோ, அமைப்புகளோ இந்திய நிறுவனங்களில் முதலீடு செய்ய விரும்பினால், அதற்கு மத்திய அரசு தான் அனுமதியளிக்க முடியும் என்று விதிகளில் திருத்தம் கொண்டு வந்து விட்டது. இதனால், மறைமுகமாக உள்ளே நுழைய முயன்ற சீன நிறுவனங்கள் தடுமாறுகின்றன.இலங்கையில் ஏற்பட்டு வரும் அரசியல் மாற்றம், சீன ஆக்கிரமிப்பு ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு தான், குளச்சலில் இணையம் துறைமுக திட்டம் அறிமுகம் ஆனதோ என்ற எண்ணம் எழாமல் இல்லை.அம்பாந்தோட்டை, வணிக துறைமுகம். அதற்கு இணையாக, இணையம் துறைமுகம் உருவாக்கப்படுமானால், கொழும்புவின் வர்த்தகம் குறையும்.


தடுப்பரண்கள்


ஆனால் வழக்கம் போல், இதற்கும் பெரிய எதிர்ப்பு! அதற்குப் பின்னணியில் சீனா இருந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை!உண்மையில், சீனாவுக்குத் தேவை இந்திய சந்தை. சீனப் பட்டாசு, சீன பொம்மைகள் என்று அத்தனை இடங்களிலும், விதவிதமாக ஆக்கிரமிக்க முற்படும்போதெல்லாம், இந்தியா தடுப்பரண்களை உருவாக்கி வருகிறது.

அதேசமயம், சீனாவோடு நேரடி மோதல் போக்கையும், இந்தியா பின்பற்றவில்லை.இந்தப் பின்னணியில் இருந்து பார்க்கும்போதும், அம்பாந்தோட்டை துறைமுகம், இலங்கைக்குத் தான் பெரிய தலைவலி; நம்மைப் பொறுத்தவரை, சீனா இலவுகாத்த கிளியாக நின்று கொண்டே இருக்க வேண்டியது தான்!யாரோ ஒருவர் எதிர் குரல் கொடுக்கிறார் என்றால், விஷயம் புரியாமல் அல்லது புரியாதது போல் நடித்து, 'நானும் கொடுப்பேன்' என்று இங்குள்ள அரசியல்வாதிகள் செயலாற்றினால், சிக்கல்கள் இடியாப்பமாகி விடும்!

- நமது நிருபர் -

Advertisement
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X