கடந்த மே மாதம் மட்டும் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர், தமிழகத்தில், கொரோனாவால் உயிரிழந்து உள்ளனர். அதற்கு முன்பு ஓராண்டில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 14 ஆயிரம். தற்போது 500க்கும் சற்றே குறைவாக தினப்படி மரண எண்ணிக்கை இருக்கிறது. கொரோனா மரணங்களை நிமோனியா மரணங்களாக கணக்கு காட்டுவதையும் சேர்த்துக் கொண்டால் எண்ணிக்கை 700ல் இருந்து ஆயிரம் வரை இருக்கும் என தெரிகிறது.
போகிற போக்கில், ஜூன் மாதம் மேலும் 15 ஆயிரம் தமிழர்களை அதிகாரப்பூர்வமாகவே கொரோனாவிற்கு இழக்க வேண்டி இருக்கும். அரசு என்ன தான் செய்கிறது என்ற கேள்வி, தினமும் பாதிக்கப்படும் ஏறத்தாழ 30 ஆயிரம் பேரிடம் இருக்க; கள நிலவரத்தை 'நன்கு அறிந்த' நீதிபதி ஒருவர், சினிமா நடிகர்கள், சமூக வலைதளபிரபலங்கள் உள்ளிட்டோர் தமிழக அரசின் கொரோனா பணிக்கு, நற்சான்று வழங்கி வருகின்றனர். முதல்வர் கூட கிருமி கவசம் அணிந்து கொரோனா நோயாளிகளை நேரில் பார்த்து வந்தாரே... இனியும் என்ன தான் செய்ய முடியும்?
இரண்டாவது அலையின் பாரத்தை தாங்க முடியாமல் தமிழகத்தின் மருத்துவ கட்டமைப்பு, விழி பிதுங்கிக் கொண்டு இருக்கிறது. சீனா போல அசுர வேகத்தில் புதிய மருத்துவ கட்டமைப்பை உருவாக்குவதற்கு, தமிழக அரசுக்கு திறன் கிடையாது.தமிழர்களின் உயிர் காக்க, அரசு உடனடியாக செய்யக் கூடியது இரண்டு விஷயங்கள் தான். அதில் முதலாவது, தடுப்பூசியை அடுத்த ஆறு மாதங்களுக்குள் அனைத்து தமிழர்களுக்கும் போட்டு முடிப்பது.
ஏற்ற இறக்கம்
தடுப்பூசிகளை சுற்றி பல சர்ச்சைகள் இருந்தாலும், ஆபத்துக்கு பாவம் இல்லை என்ற வகையில் உடனடி தீர்வாக அது ஒன்றே இப்போதைக்கு கையில் உள்ளது. நம் மாநிலத்தில், 18 வயதுக்கு மேற்பட்ட தமிழர்களின் எண்ணிக்கை 6.30 கோடி. தடுப்பூசியின் முழுமையாக பாதுகாப்பு கிடைப்பதற்கு, வீணடிப்பு கணக்கையும் சேர்த்து 13 கோடி ஊசிகள் தேவை.
இதுவரை தமிழகத்தில் 92 லட்சம் ஊசிகள் போடப்பட்டு உள்ளன. இந்த மாதம் மேலும் 42 லட்சம் ஊசிகளை மத்திய அரசு அனுப்ப உள்ளது. ஆனால், இது அனைத்தையும் ஒரு மாதத்தில் தமிழக அரசால் போட முடியாது.
ஏனெனில் தினப்படி போடப்படும் ஊசிகளின் எண்ணிக்கை நாளொரு மேனியாக உள்ளது. சில நாட்கள் 90 ஆயிரம், சில நாட்கள் 30 ஆயிரம் என்று கடுமையான ஏற்ற இறக்கங்களோடு உள்ளது. தினமும் 1.40 லட்சம் ஊசிகள் போட்டால் தான், 42 லட்சம் ஊசிகளை ஒரு மாதத்தில் போட்டு முடிக்க முடியும்.
இந்த வேகத்தில் ஊசி போட்டாலே அனைவருக்கும் ஊசி போட்டு முடிக்க, 28 மாதங்களாகி விடும். அதற்குள் கொரோனா பல முறை உருமாறி புதிய ஊசிகளுக்கான தேவை வந்துவிடும். இந்த ஆண்டு இறுதிக்குள் வேலையை முடிக்க வேண்டுமானால், மாதம் இரண்டு கோடி ஊசி அதாவது தினமும் ஏழு லட்சம் ஊசி போட வேண்டும். இது, போலியோ சொட்டு மருந்து போல், வீடுவீடாக சென்றால் தான் சாத்தியமாகும். இல்லையெனில், நடிகர் விவேக் மரணத்தால் ஆழமாக பாதிக்கப்பட்ட நம்மவர்கள் முன்வர மாட்டார்கள்.
ஆனால், இப்படி ஒரு திட்டமிடல் எதுவும், தமிழக அரசிடம் இருப்பதாக தெரியவில்லை. மாதம் இரண்டு கோடி ஊசி போடுவதற்கு எங்கே கையிருப்பு? மற்ற மாநிலங்களை போல், வெளிநாட்டில் இருந்து 3.50 கோடி ஊசிகள் இறக்குமதி செய்வோம் என முதல்வர் சொல்லி, 20 நாட்களாகிறது; இன்னும் இது பற்றி வேறு தகவல் இல்லை.
உலகில் 15 கொரோனா தடுப்பூசிகள் புழக்கத்தில் உள்ளன. மேலும் 10 ஊசிகள் உற்பத்திக்கு முந்தைய நிலையை எட்டிவிட்டன. அரசு நினைத்தால், சுலபமாக இறக்குமதி செய்யலாம். செங்கல்பட்டில் உள்ள தடுப்பூசி தொழிற்சாலை மத்திய அரசு நிறுவனமான ஹெச்.எல்.எல்.,லுக்கு சொந்தமானது. ஒன்பது ஆண்டுகளாக பயன்பாட்டில் இல்லை. அதை புனரமைத்து கொரோனா தடுப்பூசி தயாரிப்புக்கு ஆயத்தமாக்க, 300 கோடி ரூபாய் செலவு செய்ய வேண்டும். இதற்கு மத்திய அரசு, தனியாரை அழைத்தும் யாரும் ஆர்வம் காட்டவில்லை.
தனியார் பள்ளிகளை அரசு உடைமையாக்குவதற்கு ஆர்வம் காட்டும் தமிழக அரசு, இதில் ஏனோ அவ்வளவு ஆர்வம் காட்டவில்லை. தடுப்பூசிகளுக்கு காப்புரிமை இருப்பதால், அவற்றுக்கு உரிமம் பெற உள்நாட்டு வெளிநாட்டு நிறுவனங்களோடு பேச்சு நடத்த வேண்டும். ஒப்புதல் பெற இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலிடம் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். இவ்வளவு பணிகள் இருக்க, தமிழகத்திலேயே தடுப்பூசி உற்பத்தி செய்ய மத்திய அரசுக்கு கடிதம் எழுதினால் மட்டும் போதாது என்பது, கடிதம் எழுதியவர்களுக்கும் நன்கு தெரியும். இதிலும், சற்று முனைப்பு காட்டினால் நல்ல பலன் பெறலாம்.
'ஐவர்மெக்டின்'
இரண்டாவதாக, மரணங்களை தவிர்க்க தமிழக அரசு செய்யக்கூடியது, பாரம்பரிய மருத்துவத்தை பயன்படுத்துவது. ஆந்திராவில் தைரியமாக நாட்டு வைத்தியத்தை ஆதரித்து, கொரோனா சிகிச்சைக்கு பயன்படுத்த அந்த அரசு முனைந்துஉள்ளது. நமது சித்த- - ஆயுர்வேத வைத்தியர்களும், கடந்த ஓராண்டாக, கொரோனாவிற்கு ஏதுவான பல மருந்துகளை கண்டறிந்து உள்ளனர்.
இருப்பினும், அது பற்றி எந்த ஆய்வும் செய்யாமல், முக்கிய பொறுப்புகளில் உள்ள தி.மு.க.,வினர் 'சித்த மருத்துவம் அறிவியல் பூர்வமானது அல்ல. முற்போக்கு கொள்கை உடைய தி.மு.க., அதனை ஆதரிக்கக் கூடாது' என்ற பாணியில் பேசி வருகின்றனர். பேசுவதோடு நிறுத்திக் கொள்ளாமல், ஆக்சிஜன் உதவியோடு சிகிச்சை அளித்து வந்த பாரம்பரிய மருத்துவர்களுக்கு, ஆக்சிஜன் கிடைப்பதையும், 'உங்களுக்கு எதற்கு ஆக்ஸிஜன்? கஷாயம் கொடுங்கள் போதும்' என்று சொல்லி நிறுத்தி இருக்கின்றனர்.
கொரோனா சிகிச்சையை பொறுத்தவரை, அலோபதியில் மருந்து இல்லை என்பது தான் உண்மை. 'ரெம்டெசிவிர்' வாங்குவதற்கு ஏற்பட்ட பரபரப்பும், நோயாளிகளின் உறவினர்கள் சிரமப்பட்டதும் அனைவருக்கும் நினைவிருக்கும். இதே ரெம்டெசிவிர், கொரோனாவிற்கு ஏற்ற மருந்து அல்ல என்று உலக சுகாதார அமைப்பு பல முறை சொல்லிவிட்டது.
இருப்பினும் அது ஏன் கொடுக்கப்படுகிறது? அது அறிவியல் பூர்வமான அணுகுமுறையா? இது தான், ஐவர்மெக்டின் உள்ளிட்ட மருந்துகளின் நிலையும். உண்மை என்னவென்றால், கொரோனா பற்றி இன்னும் யாருக்கும் முழுமையாக தெரியாது. அப்போது பாரம்பரிய மருத்துவத்தை ஆதாரம் இல்லாமல் வெறுப்பது தான், அறிவியலுக்கு புரம்பான நடைமுறை.
தமிழக அரசு, பாரம்பரிய மருந்துகளின் பயனை, அறிய பெரிய அளவில் ஆய்வு நடத்த வேண்டும். இந்த நிலையில் எந்த மருந்து கைகொடுத்தால் என்ன? தமிழர்களின் உயிரை காப்பது முக்கியமா அல்லது கொள்கை பிடிப்பு முக்கியமா என்பதை அரசு முடிவு செய்ய வேண்டும்.
-ஆர். கிருஷ்ணமூர்த்தி, இணை ஆசிரியர், தினமலர்