புதுடில்லி: கொரோனா கட்டுப்பாடுகளால், ரயில் சேவை குறைவாக இருந்தபோதிலும், கடந்தாண்டில், ரயில் பாதைகளில் நடந்த விபத்துகளில், 8,733 பேர் உயிரிழந்துள்ளனர்.
கொரோனா பரவல் காரணமாக, கடந்தாண்டு, மார்ச் மாத இறுதியில் நாடு முழுதும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதனால், ரயில் சேவை நிறுத்தப்பட்டன. மிகவும் குறைந்த அளவில் சிறப்பு ரயில்கள், சரக்கு ரயில்கள் மட்டுமே இயக்கப்பட்டன.இந்நிலையில், 2020 ஜனவரி முதல் டிசம்பர் வரை, நாடு முழுதும், 8,733 பேர் ரயில் பாதைகளில் நடந்த விபத்துகளில் உயிரிழந்துள்ளனர்.
இதில் பெரும்பாலானோர், புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் என தெரிய வந்துள்ளது.மத்திய பிரதேசத்தை சேர்ந்த சந்திரசேகர் கவுர் என்ற சமூக ஆர்வலர், தகவல் அறியும் சட்டத்தின் கீழ் கேட்ட கேள்விக்கு அளித்த பதிலில், ரயில்வே இதை தெரிவித்துள்ளது.'முந்தைய நான்கு ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில், கடந்தாண்டு, ரயில் பாதை விபத்துகளில் உயிரிழந்தோர் எண்ணிக்கை மிகவும் குறைவு' என, பதிலில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கடந்த, 2016ல், 14 ஆயிரத்து 32 பேர்; 2017ல், 12 ஆயிரத்து 838 பேர்; 2018ல், 14 ஆயிரத்து 197 பேர்; 2019ல், 15 ஆயிரத்து 204 பேர் ரயில் பாதைகளில் நடந்த விபத்துகளில் உயிரிழந்துள்ளனர்.