கறுப்பு பூஞ்சையால் கதறும் நோயாளிகள்: உதவலாமே வெளிநாட்டு வாழ் இந்தியர்களே!| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

கறுப்பு பூஞ்சையால் கதறும் நோயாளிகள்: உதவலாமே வெளிநாட்டு வாழ் இந்தியர்களே!

Updated : ஜூன் 03, 2021 | Added : ஜூன் 03, 2021 | கருத்துகள் (15)
Share
கொரோனா தொற்றுக்கான, 'ரெம்டெசிவிர்' மருந்துக்கு தட்டுப்பாடு ஏற்பட்டதுபோல், தற்போது, கறுப்பு பூஞ்சைக்கான, 'ஆம்போடெரிசின் -- பி' மருந்துக்கும் கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.6,000 ரூபாய் மதிப்புள்ள ஒரு குப்பி மருந்து, கள்ளச்சந்தையில், 30 ஆயிரம் ரூபாய்க்கு விற்கப்படுவதோடு, மோசடியும் அரங்கேறி வருகிறது. மத்திய அரசு தடை காரணமாக, நேரடி கொள்முதல் செய்ய முடியாமல், தமிழக
black fungal, medicine, demand, ambodericin, கறுப்பு பூஞ்சை நோய், மருந்து தட்டுப்பாடு, ஆம்போடெரிசின்,

கொரோனா தொற்றுக்கான, 'ரெம்டெசிவிர்' மருந்துக்கு தட்டுப்பாடு ஏற்பட்டதுபோல், தற்போது, கறுப்பு பூஞ்சைக்கான, 'ஆம்போடெரிசின் -- பி' மருந்துக்கும் கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

6,000 ரூபாய் மதிப்புள்ள ஒரு குப்பி மருந்து, கள்ளச்சந்தையில், 30 ஆயிரம் ரூபாய்க்கு விற்கப்படுவதோடு, மோசடியும் அரங்கேறி வருகிறது. மத்திய அரசு தடை காரணமாக, நேரடி கொள்முதல் செய்ய முடியாமல், தமிழக அரசும் திணறி வருகிறது. நிலைமையை சமாளிக்க, அனைத்து கட்சிகளும் மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுத்து, சிறப்பு ஏற்பாடுகளை செய்ய வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.கொரோனாவின் கோரப்பிடியில் இருந்து மீண்டோரில் சிலர், கறுப்பு பூஞ்சை என்ற, கொடிய நோய் பாதிப்புக்கு ஆளாகி வருகின்றனர்.

உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்டோர், கட்டுப்பாடற்ற சர்க்கரை நோய் உடையோர், கொரோனா சிகிச்சையின்போது, 'ஸ்டிராய்டு' மருந்து அதிகம் எடுத்துக் கொண்டவர்களுக்கு, இந்த நோய் பாதிப்பு ஏற்படுகிறது. வட மாநிலங்களில் இருந்த இந்த நோய் பாதிப்பு, தற்போது தமிழகத்திலும் வேகமாக பரவி வருகிறது.

தமிழகத்தில் இதுவரை, 518 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்; 17 பேர் பலியாகி உள்ளனர். இந்நோயை கட்டுப்படுத்த, 13 பேர் கொண்ட நிபுணர் குழுவை, அரசு அமைத்துள்ளது. இக்குழுவின் ஆலோசனைப்படி, தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நோய்க்கு, 'ஆம்போடெரிசின் -- பி' மருந்து குணப்படுத்த கூடியதாக உள்ளது. இது, பாதிப்பின் தன்மைக்கு ஏற்ப, ஒரு நோயாளிக்கு அதிகபட்சமாக, 50 குப்பிகள் வரை தேவைப்படுகிறது.


latest tamil newsஆனால், இந்த மருந்துக்கு, தமிழகத்தில் கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. தனியார் மருத்துவமனைகள் மட்டுமின்றி, அரசு மருத்துவமனைகளில், இந்த மருந்து கையிருப்பில் இல்லை. ஏற்கனவே, 'ரெம்டெசிவிர்' மருந்துக்கு அல்லாடியதுபோல, டாக்டர்களின் பரிந்துரை சீட்டுடன், மருந்து எங்கே கிடைக்கும் என, மக்கள் அல்லாடி வருகின்றனர்.

'ஆம்போடெரிசின் - பி' மருந்து, ஒரு குப்பி விலை, 6,000 ரூபாய். ஆனால், கள்ளச்சந்தையில், ஒரு குப்பி, 30 ஆயிரம் ரூபாய் வரை விற்கப்படுகிறது. அப்படியானால், 50, 'டோஸ்' தேவைப்படும் நோயாளிக்கு, 15 லட்சம் ரூபாய் செலவாகும். அதிலும், 'கூகுள் பே'யில் பணத்தை பெற்றுவிட்டு, மோசடியும் அரங்கேறி வருகிறது.


செயற்கை தட்டுப்பாடு?

கறுப்பு பூஞ்சை நோய் புதிதல்ல; ஏற்கனவே உள்ள நோய் என்பதால், இதற்கான மருந்துகள், அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் கையிருப்பில் இருப்பது அவசியம். அவ்வாறு இருக்கையில், பாதிப்பின் துவக்க நிலையிலேயே தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது, சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

இதுகுறித்து, மக்கள் நல்வாழ்வுத் துறை செயலர் ராதாகிருஷ்ணன் கூறியதாவது: நாட்டில் மூன்று நிறுவனங்கள் மட்டுமே, 'ஆம்போடெரிசின் - பி' மருந்தை தயாரிக்கின்றன. தற்போது, இந்த மருந்துக்கு நாடு முழுதும் தட்டுப்பாடு உள்ளது. தமிழகத்திலும் தட்டுப்பாடு உள்ளது உண்மை தான். நிலைமையை சமாளிக்க, 25 ஆயிரம் குப்பி மருந்து நேரடியாக கொள்முதல் செய்ய, முயற்சி மேற்கொண்டோம்; ஆனால், கிடைக்கவில்லை.

தற்போதைய சூழல், தேவை கருதி, மாநிலங்களின் நேரடி கொள்முதலுக்கு, மத்திய அரசு தடை விதித்துள்ளது. மாநிலத்திற்கு தேவையானதை, மத்திய அரசே கொள்முதல் செய்து, பாதிப்பின் தன்மைக்கேற்ப ஒதுக்கீடு செய்கிறது. மத்திய அரசிடம் இருந்து, கூடுதல் மருந்து பெற தொடர்ந்து முயற்சித்து வருகிறோம்.எனவே தான், 'பொசக்னோசோல், ஐசாலுக்னோசோல்' ஆகிய மாத்திரைகளை, கறுப்பு பூஞ்சை நோய்க்கு பயன்படுத்தும்படி, பரிந்துரைத்துள்ளோம். இது, ஏற்கனவே உலக சுகாதார நிறுவனத்தால் அனுமதிக்கப்பட்டது தான். இவ்வாறு, அவர் கூறினார்.

உற்பத்தியாகும், 'ஆம்போடெரிசின் -- பி' மருந்துகளை, 90 சதவீதம், மத்திய அரசு கொள்முதல் செய்வதால், தனியார் மருத்துவமனைகள், வெளிமார்க்கெட்டிற்கு மருந்து வரத்து குறைந்துள்ளது. தமிழகத்திற்கு வாரத்திற்கு, 100 குப்பிகள் மட்டுமே, தனியார் மருத்துவமனைகளுக்கு வருவதாக கூறப்படுகிறது. ஒருவருக்கே, 40, 50 குப்பிகள் தேவைப்படும் நிலையில், அது எப்படி போதுமானதாக அமையும்.

தனியார் மருத்துவமனைகளும் மருந்து இல்லை என, கைவிரிக்கின்றன; அரசும் கைவிரிக்கும் நிலையில், என்ன செய்வது என தெரியாமல், தமிழகமே தவிக்கும் நிலை ஏற்பட்டு உள்ளது. மத்திய அரசிடம் அதிகம் ஒதுக்கீடு பெறுவதும், வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி முயற்சிகளை மேற்கொண்டால் மட்டுமே, மக்களின் உயிர்களை காக்க முடியும்.


சமாளிக்க என்ன வழி?


இதுகுறித்து, பொது சுகாதாரத் துறை முன்னாள் இயக்குனர் குழந்தைசாமி கூறியதாவது: தேவைக்கேற்ப மருந்து உற்பத்தியை அதிகரிக்க வேண்டும். அவற்றின் உற்பத்தி அளவு; விற்பனை; மருத்துவமனைகளில் பயன்பாடு ஆகியவற்றை, மத்திய - மாநில மருந்து கட்டுப்பாட்டு வாரியங்கள், ஆரம்பத்திலேயே கண்டறிய வேண்டும். செயற்கை தட்டுப்பாட்டை குறைக்கும் வகையில், மாவட்ட வாரியாக கண்காணிப்பு குழு அமைத்து, அரசு தடுப்பு நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும்.

'ஆம்போடெரிசின் -- பி' மருந்து, இந்தியாவில் மட்டுமல்ல, பிற நாடுகளிலும் உற்பத்தி செய்யப்படுகிறது. அங்கிருந்து இறக்குமதி செய்யலாம். அதற்கு, எந்த தடையும் இல்லை. அதற்கான முயற்சிகளில், மாநில அரசு உடனடி கவனம் செலுத்த வேண்டும். இது, அவசர தேவை. இவ்வாறு அவர் கூறினார்.


தமிழக பா.ஜ., என்ன செய்கிறது?

தமிழகத்தில், கறுப்பு பூஞ்சை மருந்துக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. தமிழகத்திற்கு, மத்திய அரசு வாரி வழங்கி வருகிறது என, பட்டியலிடும், மாநில தலைவர் முருகன் உள்ளிட்ட, தமிழக பா.ஜ., மூத்த தலைவர்கள், இந்த பிரச்னைக்கு தீர்வு காண, ஏன் சிறப்புக்கவனம் செலுத்தக் கூடாது? மத்திய அரசுக்கு தொடர்ந்து அழுத்தம் கொடுத்து, 'ஆம்போடெரிசின் - பி' மருந்து போதிய அளவில் கிடைக்க, ஏற்பாடு செய்ய வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.


ஒருங்கிணைய வேண்டும்!

தமிழக அரசியல் கட்சிகளிடம், கருத்து வேறுபாடுகள் இருக்கலாம்; ஆனால், அவற்றை எல்லாம் ஒதுக்கி வைத்துவிட்டு, கொரோனா, கறுப்பு பூஞ்சை நோயால், உயிருக்கு போராடும் மக்களை காக்க, அரசியல் கட்சிகள் ஒன்றிணைய வேண்டும்.மத்திய அரசுக்கு தொடர்ந்து அழுத்தம் தரும் வகையில், கடிதம் எழுத வேண்டும்; தங்கள் எம்.பி.,க்கள் வாயிலாக, நெருக்கடி கொடுத்து, போதிய மருந்துகள் கிடைக்க, அனைத்து கட்சிகளும் முயற்சி மேற்கொள்வது, அவசர தேவை.


latest tamil newsவெளிநாடு வாழ் தமிழர்களே தாராளமாக உதவுங்கள்!

கொரோனா பரவலை தடுக்க, பல்வேறு நிறுவனங்கள், சமூக ஆர்வலர்கள், வெளிநாடு வாழ் தமிழர்கள் ஆகியோர், ஆக்சிஜன் செறிவூட்டிகள், மருத்துவ கருவிகள் உள்ளிட்ட, பல்வேறு உதவிப்பொருட்களை, தமிழக அரசுக்கு அனுப்பி வருகின்றனர்.தற்போது, 'ஆம்போடெரிசின் -- பி' மருந்துக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில், வெளிநாடுகளில் உள்ள தமிழர்கள், தொண்டு நிறுவனங்கள், இந்த மருந்தை வாங்கி, தமிழக அரசுக்கு அனுப்பலாம். இது, தமிழக மக்களின் உயிர் காக்க பேருதவியாக இருக்கும்.

யார் கொடுத்தாலும், மருந்தை பெற்றுக் கொள்ள தயாராக இருப்பதாக, மக்கள் நல்வாழ்வுத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அரசின் மருத்துவ சேவை மையத்தை, 104 என்ற எண்ணிலும், மருத்துவ சேவை பணிகள் கழகத்தை, 044 - 2819 1890 என்ற எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம்.https://tnhealth.tn.gov.in/என்ற முகவரியிலும் தொடர்பு கொள்ளலாம்.

-நமது நிருபர்-

Advertisement
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X