கோவை: ஊரடங்கு நேரத்தில் பசியால் தவிக்கும் சாலையோரவாசிகளுக்கும், ஆதரவற்றோருக்கும் பல தன்னார்வலர்கள் உதவி வரும் நிலையில், தன் நகைகளை அடகு வைத்து, பெண் ஒருவர் தெரு நாய்களுக்கு, உணவு வழங்கி வருகிறார்.
ராமநாதபுரம் பகுதியில் வசிக்கும் சுமதி, 52 நாய்கள் மீது பெரும் பாசம் உடையவர். தினமும் வீடுகள், ஓட்டல்களில் பாத்திரம் தேய்த்து, அதில் வரும் பணத்தில், பசியில் இருக்கும் நாய்களுக்கு உணவு அளித்து வந்தார்.தற்போது ஊரடங்கால் வேலை இல்லாததால் தன் நகை, வீட்டில் இருக்கும் பொருட்களை அடகு வைத்து, உணவு வழங்கி வருகிறார்.தினமும் ஆறு முதல் எட்டு கிலோ ரேஷன் அரிசி வைத்து சமைத்து, ராமநாதபுரம் பகுதியில், 50க்கும் மேற்பட்ட நாய்களின், பசியை போக்கி வருகிறார். சாதாரண குடும்பத்தை சேர்ந்த இவர், தினமும் சமைத்த உணவை 'பக்கெட்டில்' எடுத்துக்கொண்டு, நடந்து சென்று, நாய்களுக்கு அளிப்பதை வழக்கமாக கொண்டுள்ளார்.
சுமதி கூறுகையில், ''தினமும் கோழி தலை, ஈரல் கலந்து சோறு போடுறது வழக்கம். இப்ப கறிக்கடைகள் பூட்டியிருக்கறதால, பால் அல்லது தயிர் கலந்து கொடுக்கிறேன்.ஆறு கிலோ அரிசியில், குறைஞ்சது மூனு அல்லது நாலு லிட்டர் பால் கலக்கணும். அதுக்கே நுாறு ரூபாக்கு மேல செலவாயிருது.ஊரடங்கால வேலை இல்லை. சில சமயங்கள்ல நகை, பொருட்களை அடகு வெச்சு, எதாவது வாங்கி கொடுப்பேன்.இதை தவிர, வேற யாராவது பிஸ்கட், பால் வாங்கி குடுப்பாங்க. இன்னும் பல நாய்ங்க பசியோட திரியுதுங்க. என்னால முடிஞ்ச அளவுக்கு பசியாத்துறேன். இன்னும் உதவி கிடைச்சா, எல்லா தெரு நாய்ங்களுக்கும் குடுக்க முடியும்,'' என்றார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE