புதுடில்லி:பிளஸ் 2 பொதுத் தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில், மதிப்பெண்கள் எப்படி கணக்கிடப்படும் என்பதற்கான வழிமுறைகளை இரண்டு வாரத்துக்குள் தெரிவிக்க, சி.பி.எஸ்.இ., எனப்படும் மத்திய இடைநிலை கல்வி வாரியத்துக்கு, உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கொரோனா வைரஸ் பரவல் இரண்டாவது அலை நாடு முழுதும் தீவிரமாக உள்ளது.அதனால், 10ம் வகுப்பு தேர்வை ரத்து செய்து, சி.பி.எஸ்.இ., மற்றும் சி.ஐ.எஸ்.சி.இ., எனப்படும் இந்திய பள்ளி சான்றிதழ் தேர்வு கவுன்சில் அறிவித்தன. அப்போது, பிளஸ் 2 தேர்வுகளை ஒத்திவைப்பதாக அறிவிக்கப்பட்டது.
வைரஸ் பரவல் அதிகமாக உள்ளதால், சி.பி.எஸ்.இ., பிளஸ் 2 பொதுத் தேர்வை ரத்து செய்யக் கோரி, டில்லியைச் சேர்ந்த மம்தா சர்மா என்ற பெண் வழக்கறிஞர், உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துஇருந்தார்.இதற்கிடையே பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடந்த உயர்நிலை கூட்டத்தில், பிளஸ் 2 தேர்வுகளை ரத்து செய்வதாக அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில் இந்த வழக்கு, நீதிபதிகள் ஏ.எம்.கன்வில்கர், தினேஷ் மகேஷ்வரி அமர்வு முன் நேற்று விசாரணைக்கு வந்தது.அப்போது அமர்வு உத்தரவிட்டதாவது: தேர்வுகளை ரத்து செய்யும் நல்ல முடிவு எடுக்கப்பட்டுள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. மாணவர்கள் உயர் கல்விகளில் சேர வேண்டியுள்ளது. அதனால் இந்த மாணவர்களுக்கு, எந்த அடிப்படையில் மதிப்பெண்கள் வழங்கப்பட உள்ளது என்பதையும், அதற்கான வழிமுறைகளையும் இரண்டு வாரங்களுக்குள் தெரிவிக்க வேண்டும்.இவ்வாறு அமர்வு உத்தரவிட்டுள்ளது.
மாநிலங்களிலும் ரத்து?வழக்கின் விசாரணையின் போது மனுதாரர் மம்தா சர்மா, 'சி.பி.எஸ்.இ., மற்றும் சி.ஐ.எஸ்.சி.இ., வாரியங்கள் தேர்வை ரத்து செய்துள்ளன. மாநில கல்வி வாரியங்கள் நடத்தும் தேர்வை, 1.2 கோடி மாணவர்கள் எழுதுவர். தேர்வை நடத்த பல மாநிலங்கள் திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. அதையும் ரத்து செய்ய உத்தரவிட வேண்டும்' என, வாதிட்டார்.'சி.பி.எஸ்.இ., தேர்வு குறித்து மட்டுமேநீங்கள் வழக்கு தொடர்ந்திருந்தீர்கள். முதலில் மதிப்பெண்கள் கணக்கிடும் முறை குறித்து, சி.பி.எஸ்.இ., தெரிவிக்கட்டும். அதன்பின், மாநில வாரியங்கள் குறித்து பார்ப்போம்' என, அமர்வு தெரிவித்தது.