மும்பை :மஹாராஷ்டிராவில், 'கொரோனா தொற்று இல்லாத கிராமம்' என, பெயரெடுக்கும் கிராமங்களுக்கு, ரொக்கப் பரிசு தொகையை மாநில அரசு அறிவித்துள்ளது. 'முதல் பரிசாக 50 லட்சம் ரூபாய், இரண்டாம் பரிசாக 25 லட்சம் ரூபாய், மூன்றாம் பரிசாக 15 லட்சம் ரூபாய், ஆறு வருவாய் மண்டலங்களில் உள்ள, 18 கிராமங்களுக்கு வழங்கப்படும்' என, அறிவிக்கப்பட்டுள்ளது.
மஹாராஷ்டிராவில் முதல்வர் உத்தவ் தாக்கரே தலைமையில், சிவசேனா, காங்கிரஸ், தேசியவாத காங்., கூட்டணி ஆட்சி நடக்கிறது.கடந்த ஆண்டு துவங்கிய கொரோனா முதல் அலையில், இம்மாநிலம் கடுமையாக பாதிக்கப்பட்டது. முழு ஊரடங்கு பிறப்பிக்கபட்ட போதும், மும்பை நகர் முழுதும் காட்டுத் தீ போல தொற்று பரவியது.
உச்சத்தை தொட்டது
பல்வேறு நடவடிக்கைகளுக்கு பின், தொற்று பரவல் கட்டுக்குள் வந்தது. இந்நிலையில், கொரோனா இரண்டாம் அலையின் போதும், மஹாராஷ்டிராவில் தொற்று பரவல் உச்சத்தை தொட்டது.தொற்று பரவல் மிக தீவிரமாக இருந்த, 10 மாநிலங்களில், மஹாராஷ்டிரா தொடர்ந்து முதலிடம் வகித்தது. பாதிக்கப்படுவோர் எண்ணிக்கையும், உயிரிழப்புகளும் முன் எப்போதும் இல்லாத வகையில் உயர்ந்தன.
கடுமையான முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்ட பின், தொற்று பரவலின் வேகம் சற்று குறைந்தது. ஆனாலும் முழுமையாக கட்டுக்குள் வரவில்லை.நகரங்களை கடந்து, கிராமங்களிலும் தொற்று பரவல் வேகமெடுத்துள்ளது. இதை கட்டுப்படுத்த, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.
அதன் ஒரு பகுதியாக, தொற்று ஒழிப்பு நடவடிக்கையில் சிறப்பாகச் செயல்பட்டு, 'கொரோனா இல்லாத கிராமம்' என பெயரெடுக்கும் கிராமங்களுக்கு, ரொக்கப் பரிசுகளை மாநில அரசு அறிவித்துள்ளது.முதல் பரிசாக 50 லட்சம் ரூபாயும், இரண்டாம் பரிசாக 25 லட்சம் ரூபாயும், மூன்றாம் பரிசாக 15 லட்சம் ரூபாயும் அறிவிக்கப்பட்டுள்ளது.
50 மதிப்பெண்
'மொத்தமுள்ள ஆறு வருவாய் மண்டலங்களில், ஒவ்வொரு மண்டலத்திலும் தலா, மூன்று கிராமங்களுக்கு பரிசுகள் வழங்கப்படும்' என, அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே, 18 கிராமங்களுக்கு இந்த பரிசுகள் சென்றடையும். முதல், இரண்டு மற்றும் மூன்றாம் பரிசு தொகையை கூட்டினால், ஒரு மண்டலத்துக்கு 90 லட்சம் ரூபாய் வருகிறது.மொத்தமுள்ள ஆறு மண்டலங்களின் பரிசு தொகைக்காக, 5.40 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
இது குறித்து, மாநில ஊரக மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஹஸன் முஷ்ரிப் கூறியதாவது: அனைத்து கிராமங்களும், 22 விதமான அளவு கோல்களின் கீழ் தரம் பிரிக்கப்படும். செயல்பாடு களுக்கு ஏற்றது போல, அதிகபட்சமாக 50 மதிப்பெண்கள் அளிக்கப்படும். தொற்றில்லா கிராமம் என பெயரெடுத்து போட்டியில் வெற்றி பெறும் கிராமங்களுக்கு, பரிசு தொகைக்கு இணையாக ஊக்க தொகையும் கூடுதலாக வழங்கப்படும். இதை, அந்தந்த கிராமங்களின் வளர்ச்சிப் பணிகளுக்கு பயன்படுத்தலாம். இவ்வாறு அவர் கூறினார்.
தொற்று தடுப்பு நடவடிக்கைகளில் மக்களை ஆர்வத்துடன் ஈடுபடுத்த, இது போன்ற பரிசுகள் உள்ளிட்ட திட்டங்களை, பல்வேறு நாடுகளும் செயல்படுத்த துவங்கியுள்ளன.'அமெரிக்காவில், ஜூலை 4ம் தேதிக்குள், 70 சதவீத மக்களுக்கு, குறைந்த பட்சம் ஒரு 'டோஸ்' தடுப் பூசியாவது செலுத்தப் பட்டு இருக்க வேண்டும்' என, அந்நாட்டு அதிபர் ஜோ பைடன் இலக்கு நிர்ணயித்துள்ளார்.
ஆர்வம்
அப்படி செயல்படுத்தும் மாகாணங்களுக்கு சிறப்பு பரிசுகள் அறிவித்துள்ளார். தடுப்பூசி போட்டுக் கொள்வதில் ஆர்வம் காட்டும் குடிமக்களுக்கு, பல்வேறு கவர்ச்சிகரமான பரிசுகளை, அமெரிக்காவின் பல்வேறு மாகாணங்களும் அறிவித்துள்ளன.மஹாராஷ்டிராவில் துவங்கியுள்ள, 'தொற்றில்லா கிராமம்' என்ற இந்த முன்னெடுப்பை, பல்வேறு மாநிலங்களும் பின்பற்றும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தடுப்பூசி பேருந்து!
மேற்கு வங்கத்தில் கொரோனா தடுப்பூசி பேருந்தை, அம்மாநில அரசு நேற்று முதல் செயல்படுத்த துவங்கியது. மாநில சுகாதாரத்துறை மற்றும் போக்குவரத்து துறையுடன் இணைந்து, மாநகராட்சி சார்பில் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது.
கோல்கட்டாவில் உள்ள பல்வேறு மார்க்கெட்களுக்கு சென்று, அங்கு பணியில் உள்ள காய்கறி மற்றும் மீன் வியாபாரிகள், மூட்டை துாக்கும் தொழிலாளர்கள் உள்ளிட்டோருக்கு தடுப்பூசி போடும் பணி, இந்த பேருந்து வாயிலாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மார்க்கெட் வியாபாரிகள் சில மணி நேரம் தங்கள் வியாபாரத்தை நிறுத்தி, தடுப்பூசி போட்டுக் கொள்ள செல்வதில் ஆர்வம் காட்டாததை அடுத்து, இத்திட்டம் செயல்படுத்தப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.