புதுடில்லி :சமூக, பொருளாதார மற்றும் சுற்றுச்சூழல் தொடர்பான பல காரணிகளில், தொடர்ந்து நீடித்த வளர்ச்சியை அடைந்து வரும் மாநிலங்கள் பட்டியலில், கேரளா மீண்டும் முதலிடத்தைப் பிடித்துள்ளது. தமிழகம் மற்றும் ஹிமாச்சலப் பிரதேசம், இரண்டாவது இடத்தில் உள்ளன.
நிடி ஆயோக்
ஐக்கிய நாடுகள் சபையின் வழிகாட்டுதலின்படி, நாட்டில் பல்வேறு அம்சங்களில் வளர்ச்சிப் பணிகளில் ஏற்படும் முன்னேற்றத்தின் அடிப்படையில், மாநிலங்களின் தரவரிசைப் பட்டியல் வெளியிடப்படுகிறது. கடந்த 2018ல் துவங்கிய இந்த பட்டியல், மூன்றாவது ஆண்டாக நேற்று வெளியிடப்பட்டது. இந்தப் பட்டியலை, நிடி ஆயோக் அமைப்பு தொகுத்து வருகிறது.
அதன்படி, 2020 - 2021ம் ஆண்டுக்கான எஸ்.டி.ஜி., எனப்படும் நீடித்த வளர்ச்சி இலக்குகளை எட்டிய மாநிலங்கள் பட்டியல், நேற்று வெளியிடப்பட்டது. அதில், கேரளா மீண்டும் முதலிடத்தைப் பிடித்துள்ளது. அந்த மாநிலத்துக்கு 100ல், 75 புள்ளிகள் கிடைத்து உள்ளன. கடந்த மார்ச் மாதத்துடன் முடிந்த ஆண்டுக்கான இந்த பட்டியலில், 74 புள்ளிகளுடன், தமிழகம் மற்றும் ஹிமாச்சலப் பிரதேசம், இரண்டாவது இடத்தில் உள்ளன.
சிறந்த புள்ளி
வளர்ச்சி இலக்கை எட்டுவதில், மிகவும் மோசமான மாநிலமாக, பீஹார், ஜார்க்கண்ட், அசாம் உள்ளன. யூனியன் பிரதேசங்களில், சண்டிகர் முதலிடத்திலும், டில்லி இரண்டாவது இடத்திலும் உள்ளன.முந்தைய ஆண்டைவிட, மிசோரம், ஹரியானா, உத்தரகண்ட் ஆகியவை சிறந்த புள்ளிகளை பெற்றுள்ளன.
வளர்ச்சி இலக்கை எட்டு வதில் முன்னிலையில் உள்ளதாக, கடந்தாண்டு பட்டியலில், 10 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் இருந்தன. புதிய பட்டியலில், மேலும், 12 மாநிலங்கள் இணைந்துள்ளன.
நாட்டின் ஒட்டுமொத்த வளர்ச்சி, 60 புள்ளிகளில் இருந்து, 66 புள்ளிகளாக உயர்ந்துள்ளது. 'பாதுகாப்பான குடிநீர், குறைந்த விலையில் எரிவாயு ஆகிய காரணிகளில் ஏற்பட்ட முன்னேற்றமே, இந்த உயர்வுக்கு காரணம்' என, நிடி ஆயோக் கூறியுள்ளது.