உலக, நாடு, தமிழக நடப்புகள் பற்றி, வாசகர்கள் தினமலர் நாளிதழில் எழுதிய கடிதம் :

கிருஷ்ணவேணி, மதுரையிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்:
என் கணவர், தினக்கூலி வேலை பார்த்து வருகிறார். எனக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர்.கொரோனா தொற்று காரணமாக, நாம் எவ்வளவோ பாதிக்கப்பட்டுள்ளோம். வேலை, வருமானம் இல்லாமல், அன்றாடம் வாழ்வை கடந்து போவதே மிக சிரமமாக உள்ளது.என் கணவருக்கு தினமும் 300 ரூபாய் சம்பளம் கிடைக்கும். சம்பளம் வாங்கி வரும் வழியிலேயே, 'டாஸ்மாக்' கடையில் ஒரு சரக்கு பாட்டிலை வாங்கி குடித்த பின் தான் வீட்டிற்கு வருவார். மீதி, 125 ரூபாய் தான் குடும்ப செலவுக்கு கிடைக்கும்.
இதில் பால், அரிசி, பருப்பு, காய்கறி வாங்க, 100 ரூபாய் செலவு ஆகும். மறுநாள் என் கணவர் வேலைக்கு போக, பஸ்சுக்கு 25 ரூபாய் எடுத்து வைக்க வேண்டும். ஆக மொத்தம் கையில் இருப்பது, வெறும் பூஜ்யம் தான்.இதற்கிடையில் குழந்தைக்கு சுகமில்லை என்றால், ஒரு மாத்திரை கூட வாங்க முடியாது.அவர், ஒரு நாள் வேலைக்கு செல்லவில்லை என்றாலும், குடும்பமே பசியில் தான் கிடக்கணும். என் கணவர், ஒரு 'குடி' அடிமை. தற்போது, 20 நாட்களாக டாஸ்மாக் இல்லாமல், அவர் மதுவை மறந்து இருக்கிறார்.

தொடர்ந்து டாஸ்மாக் கடை திறக்காமல் இருந்தால், 'குடி'க்கு அடிமையானோர், அதில் இருந்து மீண்டு விடுவர்.ஒரு ஏழை குடும்ப பெண்ணாக இருந்து, முதல்வர் ஸ்டாலினை கெஞ்சி கேட்கிறேன். டாஸ்மாக்கை மூடுங்கள். என் கணவரின் சம்பளம் முழுமையாக குடும்பத்திற்கு கிடைத்தால், எங்கள் வாழ்க்கை நல்லாயிருக்கும். நாங்கள் மனதார வாழ்த்தினால், உங்கள் குடும்பமும் நல்லாயிருக்கும்.'குடி'யை ஒழித்து, குடிசைக்கு ஒளி ஏற்றுங்கள் முதல்வரே.