பெங்களூரு: இந்தியாவின் மோசமான மொழி கன்னடம் என்று கூகுள் தேடுதல் தளத்தில் தோன்றியதால் கர்நாடக மாநிலத்தில் கன்னடத்தை தாய்மொழியாக கொண்டவர்கள் கொதிப்பு அடைந்தனர்.

இதையடுத்து கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த பலரும் கூகுள் நிறுவனத்திற்கு கண்டனம் தெரிவித்தனர். மாநிலத்தில் அனைத்து தரப்பினரும் கூகுள் நிறுவனத்திற்கு எதிர்ப்பு தெரிவித்ததையடுத்து அந்நிறுவனம் மன்னிப்பு கோரியது.
முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய கர்நாடக பண்பாடு மற்றும் வனத்துறை அமைச்சர் அரவிந்த் லிம்பாவாலி கூறியதாவது, ‛ கூகுள் நிறுவனம் கன்னட மொழியை இழிவு படுத்தி உள்ளது. கன்னட மொழி 2500 வருடங்கள் பழமை வாய்ந்தது. இது கர்நாடக மாநிலத்திற்கும் அதைச் சேர்ந்தவர்களுக்கும் பெருமையான விஷயமாக உள்ளது. கன்னட மொழியை சிறுமை படுத்திய கூகுள் நிறுவனம் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றார்.

இது குறித்து கூகுள் நிறுவன அதிகாரி ஒருவர் கூறுகையில், ‛ இது போன்று கூகுள் தேடுதல் தளத்தில் எதிர்பாராத விதமாக நடந்து விடுகிறது. கன்னட மொழி மோசமான மொழி என்பது கூகுளின் கருத்து இல்லை. இச்சம்பவத்திற்காக கூகுள் கன்னட மொழியை தாய்மொழியாக கொண்டவர்களிடம் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறது. இப்பிரச்னையையும் உடனடியாக சரி செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது' இவ்வாறு அவர் தெரிவித்தார்.