புதுடில்லி: அமெரிக்காவைச் சேர்ந்த மூன்று நிறுவனங்களின் கொரோனா தடுப்பூசி மருந்தை கொள்முதல் செய்வதுடன் அவற்றை இந்தியாவில் தயாரிப்பதற்கான முயற்சியில் மத்திய அரசு தீவிரமாக ஈடுபட்டுள்ளது.
இந்தியாவில் சீரம் நிறுவனத்தின் 'கோவிஷீல்டு', பாரத் பயோடெக் நிறுவனத்தின் 'கோவாக்சின்', ரஷ்யாவின் கமாலியா ஆய்வு நிறுவனத்தின் 'ஸ்புட்னிக்' தடுப்பூசி மருந்துகள் மக்களுக்கு செலுத்தப்படுகின்றன. இதில் கோவிஷீல்டு, கோவாக்சின் ஆகியவையும், கமாலியா ஆய்வு நிறுவனத்தின் உரிமத்துடன் ஸ்புட்னிக் தடுப்பூசியும் இந்தியாவில் தயாரிக்கப்படுகின்றன.
இதேபோல அமெரிக்காவின் பைசர், ஜான்சன் அண்டு ஜான்சன், மாடர்னா ஆகிய மூன்று நிறுவனங்களின் கொரோனா தடுப்பூசி மருந்துகளையும் அவற்றின் உரிமம் பெற்று இந்தியாவில் தயாரிக்க மத்திய அரசு முயற்சித்து வருகிறது.

இது குறித்து மத்திய வெளியுறவு துறை செய்தி தொடர்பாளர் அரிந்தம் பக்சி கூறியதாவது: ரஷ்யாவின் ஸ்புட்னிக் வி தடுப்பூசி மருந்தை இந்தியாவில் டாக்டர் ரெட்டிஸ் லேபாரட்டரீஸ் தயாரிக்க வெளியுறவு அமைச்சகம் உதவி செய்துள்ளது. அமெரிக்காவின் பைசர், ஜான்சன் அண்டு ஜான்சன், மாடர்னா ஆகியவற்றின் தடுப்பூசி மருந்துகளை கொள்முதல் செய்வது தொடர்பாகவும் அந்நிறுவனங்களிடம் உரிமம் பெற்று இந்தியா வில் தடுப்பூசிகளை தயாரிப்பது குறித்தும் பேசி வருகிறோம்.இவ்வாறு அவர் தெரிவித்தார்.
இதற்கிடையே உள்துறை இணை அமைச்சர் கிஷன்ரெட்டி பேசும் போது ''இந்தாண்டுக்குள் அனைத்து மக்களுக்கும் தடுப்பூசி போட இலக்கு நிர்ணயித்துள்ளோம். இதற்காக 250 கோடி 'டோஸ்' தடுப்பூசி மருந்து தயாரிப்பது தொடர்பாக பல மருந்து நிறுவனங்களுடன் பேச்சு நடக்கிறது'' என்றார். அமெரிக்க மருந்து நிறுவனங்கள் அவசர கால பயன்பாட்டிற்கு அனுமதி கோரி விண்ணப்பித்தால் அவற்றின் தடுப்பூசி மருந்துக்கு அனுமதி அளிக்கப்படும் என மத்திய அரசு அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE