
அஞ்சல் துறையின் அபார சேவை
சென்னையில் பரங்கிமலையில் உள்ள பரங்கிமலை தபால் பிரிப்பு அலுவலகத்தில் முன் எப்போதும் இல்லாத அளவிற்கு மருந்து மாத்திரை மற்றும் மருத்துவ உபகரணங்கள் பார்சல்கள் வருகை அதிகரித்துள்ளது, இவை இங்கு மலை போல குவிந்து வருகிறது.

எவ்வளவுதான் மலை போல குவிந்தாலும் அதைக்கண்டு அசராமல்,அயராமல் நுாற்றுக்கணக்கான ஊழியர்கள் இந்த மருத்துவம் தொடர்பான பார்சல் உள்பட அனைத்து பார்சல்களையும் உடனுக்குடன் பிரித்து அந்தந்த முகவரிக்கு அனுப்பும் பணியில் சுறுசுறுப்பாக பணியாற்றி வருகின்றனர்.

கூரியர் உள்ளீட்ட தனியார் தபால் நிறுவனங்கள் கொரோனா காரணமாக நேரிடையாக தபாலைக் கொடுக்கும் சேவையை நிறுத்தி வைத்துள்ளதால், இந்திய அஞ்சல் துறையினர்தான் தற்போது அனைவருக்கும் கைகொடுத்து வருகின்றனர்.

அவர்கள் எப்போதும் போல மக்களை நேரடியாக பார்த்து தபால்களை வழங்கி வருகின்றனர், அடுக்கு மாடிவீடுகள் என்றாலும் அசராது படியேறிச் சென்று பார்சல்களை கொடுக்கின்றனர்,கையெழுத்து போடத்தெரியாத வயதானவர்களின் கைகளைப் பிடித்து கைரேகை வாங்கிக் கொண்டு அவர்களுக்கான உதவித் தொகையினை வழங்கி வருகின்றனர்.

தேவையான முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்துக் கொண்டு மக்களை நேரடியாக நெருக்கமாக சந்திக்கும் இந்த ரிஸ்க்கான பணியில் ஆண் தபால் ஊழியர்கள் மட்டுமின்றி பெண் தபால் ஊழியர்களும் ஈடுபட்டுள்ளனர்.
இதற்கு காரணம் கடமை உணர்ச்சி மட்டுமின்றி பல இல்லங்களில் உள்ள உள்ளங்கள் மகிழ்வதற்கு காரணமான தபால்களை நாம் சுமந்து கொண்டு இருக்கிறோம் என்ற பொறுப்புணர்ச்சியும் ஒரு காரணம்.
167 வருட பாரம்பரியம் மிக்க நமது இந்திய தபால் துறை 1,54,000 அலுவலகங்களுடன் 5,93 878 ஊழியர்களுடன் இயங்கி வருகிறது. இயங்கி வருகிறது என்பதை விட நாட்டு மக்களின் நாடி நரம்புடன் பின்னிப் பினைந்துள்ளது என்றே கூறலாம்.
நாட்டில் எல்லோருக்குமே பிடித்த ஒருவர் உண்டு என்றால் அவர் போஸ்ட்மெனாகத்தான் இருக்க முடியும் நாட்டின் எந்த மூலை முடுக்கு என்றாலும் அதிக பட்சம் நான்கு நாட்களுக்குள் அந்த தபாலை அல்லது பார்சலை சேர்த்துவிடும் வல்லமை கொண்டவர்கள்.அதற்கேற்ப ரயில், ரோடு, விமான சேவையைப் பயன்படுத்திக் கொள்கின்றனர்.
கடந்த கொரோனா காலத்தில் வந்தே பாரத் விமானம் மூலம் வெளிநாட்டு மருந்துகளை தருவித்தனர் வெறிச்சோடிக்கிடந்த ரோடுகளில் ஆம்புலன்ஸ் வாகனம் தவிர அதிகம் ஒடியது இவர்களது மெயில் வாகனங்கள்தான்
தமிழகத்தில் மட்டும் 10,264 அஞ்சலகங்கள் உள்ளன இங்கு சேகரிக்கப்படும் தபால்கள் தமிழகம் முழுவதும் உள்ள 11 கேந்திரங்களில் சேர்க்கப்பட்டு பின் மின்னல் வேகத்தில் பிரிக்கப்பட்டு உடனடியாக டெலிவரியும் துவங்கிவிடுகிறது.
பதினொரு கேந்திரங்களில் ஒன்றான சென்னை பரங்கிமலை அலுவலகம் ஒன்று.மருத்துவ பரிசோதனைகள் ஒவ்வொரு நிமிட தாமதமும் ஒரு தொற்றாளியை உருவாக்கும் என்பதால் பரிசோதனை முடிவுகளை மின்னல் வேகத்தில் கொண்டு சேர்த்ததில் சிறப்பாக செயல்பட்டதாக அமைச்சகத்தால் பாராட்டுப் பெற்ற அலுவலகம் இது.இங்கு சென்றபோதுதான் இவர்களது மகத்தான பணியை உணரமுடிந்தது.
பேச நேரமில்லாமல் சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டு இருந்தனர் மருந்துப் பொருட்களை வேகமாக கொண்டு சேர்க்க வேண்டும் என்று ஒவ்வொரு ஊழியரிடமும் உள்ளார்ந்த ஆர்வம் தெரிகிறது.
விடுமுறை எடுக்கவும் வீட்டில் முடங்கிக் கிடக்கவும் கொரோனாவை ஒரு காரணமாகக் காட்டலாம் என்ற நிலையில், இப்போதுதான் முன்னிலும் அதிகமாக வேலை செய்ய வேண்டிய நேரம் என்று விடுமுறை கூட எடுக்காமல் கூடுதல் நேரம் உழைத்துக் கொண்டு இருக்கும் இந்திய அஞ்சல் துறை ஊழியர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்,குறிப்பாக தகவல்கள் தந்து உதவிய பரங்கிமலை அஞ்சல் துறை நிர்வாகத்திற்கு நன்றிகள்
-எல்.முருகராஜ்.