ஷிவமொகா-''மைசூரு மாவட்ட கலெக்டர் ரோகிணி சிந்துாரி, மாநகராட்சி கமிஷனர் ஷில்பா நாக் இடையிலான கருத்து வேறுபாடு நல்லதல்ல,'' என கிராம அபிவிருத்தி, பஞ்சாயத்துத்துறை அமைச்சர் ஈஸ்வரப்பா தெரிவித்தார்.ஷிவமொகாவில், அவர் நேற்று கூறியதாவது:கொரோனா நிர்வகிப்பில் அனைத்து மாவட்ட பொறுப்பு அமைச்சர்கள், மிகவும் சிறப்பாக பணியாற்றுகின்றனர். இதில் எந்த குழப்பமும் இல்லை.ஆனால் மைசூரு மாவட்ட கலெக்டர் ரோகிணி சிந்துாரி, மாநகராட்சி கமிஷனர் ஷில்பாநாக் இடையே ஏற்பட்டுள்ள, கருத்து வேறுபாட்டால் குழப்பம் ஏற்படுகிறது.பிரச்னையை சரி செய்ய அதிகாரிகள் அளவில் முயற்சி நடக்கிறது. ஒருவேளை சரியாகாவிட்டால் அமைச்சரவையில் விவாதித்து, சரியான முடிவை அரசு எடுக்கும்.அதிகாரிகள், தங்களின் கருத்து வேறுபாட்டை இது போன்று, பகிரங்கமாக வெளிப்படுத்துவது சரியல்ல.ரோகிணி சிந்துாரி எங்கள் துறையில் பணியாற்றியதில்லை. எனவே அவரது பணித்திறன் பற்றி எனக்கு தெரியாது.ஷில்பா நாக் எங்களின் கிராம அபிவிருத்தித்துறையில் பணியாற்றியவர். கேரள கிராம பஞ்சாயத்து பணிகள் பற்றி நாங்கள் ஆய்வு செய்துள்ளோம். அவரது பணித்திறன் பற்றி எங்களுக்கு தெரியும்.அதிகாரிகளுக்கிடையே என்ன நடந்தது, ஏன் நடந்தது, பகிரங்கமாக ஊடகத்தினரிடம் விவரிக்கும் அளவுக்கு, என்ன பிரச்னை என்பது தெரியவில்லை.தலைமை செயலர் மைசூருக்கு சென்று தகவல் கேட்டறிந்தார். அவர் முதல்வரிடம் அறிக்கை அளித்த பின், என்ன நடவடிக்கை எடுக்கப்படுகிறது என பார்க்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.