பெங்களூரு-கொரோனா கஷ்ட காலத்திலும் பொதுப்பணித்துறையில், கடந்தாண்டு, 99 சதவீதம் அபிவிருத்தி பணிகள் முடிக்கப்பட்டுள்ளன.பொதுப்பணித்துறை நிர்வகிக்கும் துணை முதல்வர் கோவிந்த் கார்ஜோள், பெங்களூரு விதான் சவுதாவில் நேற்று செய்தியாளர்கள் சந்திப்பு நடத்தினார்.அப்போது அவர் கூறியதாவது:கொரோனா கஷ்ட காலத்திலும் பொது பணித்துறையில் 2020 - 21 ல் ஒதுக்கப்பட்ட 10 ஆயிரத்து 893 கோடி ரூபாயில், 10 ஆயிரத்து 743 கோடி ரூபாய் அளவுக்கு பணிகள் மேற்கொள்ளப்பட்டன.இது போன்று 2019 - 20 ல் 9,033 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு 8,788 கோடி ரூபாய் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. முறையே, 99, 97 சதவீதம் பணிகள் பூர்த்தி செய்து சாதனை படைத்துள்ளோம்.வெவ்வேறு திட்டங்களின் கீழ் 12 ஆயிரத்து, 125 கி.மீ., துாரம் சாலைகள் அமைக்க, 12 ஆயிரத்து 122 கோடி ரூபாயும்; 2,961 கி.மீ., மாநில நெடுஞ்சாலை, 9,164 கி.மீ., மாவட்ட நெடுஞ்சாலை, 621 மேம்பாலங்கள் அபிவிருத்தி செய்யப்பட்டன.255 கோடி ரூபாய் செலவில், 48 நீதிமன்றங்கள், நீதிபதிகள் குடியிருப்பு கட்டடங்கள், 15 போக்சோ நீதிமன்றங்கள் அமைக்கப்பட்டன.எஸ்.சி., - எஸ்.டி., காலனிகளில், 3,668 சிமென்ட் சாலைகள் 2,779 கோடி ரூபாயிலும்; முதல்வர் கிராமிய மேம்பாட்டு திட்டத்தின் கீழ், 302 கோடி ரூபாயில், 933 கி.மீ., சாலையும் அமைக்கப்பட்டன.இரண்டு ஆண்டுகளுக்கு முன் ஏற்பட்ட வெள்ள பெருக்கால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் 500 கோடி ரூபாயில் 1,850 பணிகள் முடிக்கப்பட்டன. 2020 ல் ஏற்பட்ட வெள்ள பாதிப்பு பகுதியில் 615 கோடி ரூபாயில் 1,553 பணிகள் முடிக்கப்பட்டன.பெங்களூரு ஆனந்த்ராவ் சதுக்கத்தில், 1,251 கோடி ரூபாயில் 50 மாடி கொண்ட இரட்டை கோபுரங்கள் அமைக்க ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளன.இவ்வாறு அவர் கூறினார்.