தமிழக அரசின் தலைமைச் செயலக முகப்பில், தமிழ்நாடு அரசு என்ற எழுத்துகள் ஒளிர்கின்றன. அரசின் இலச்சினையில், 'தமிழக அரசு' என்ற சொல் இடம் பெற்றிருக்கிறது.அகம் என்ற சொல்லுக்கு மனம், இல்லம், வதிவிடம் என, பல இனிய அர்த்தங்கள் உண்டு. தமிழை தன் அகத்தே கொண்ட பகுதி தமிழகம். பல மொழிகள் வழங்கும் ஒரு நாட்டில், தமிழின் இல்லம் தமிழகம் என்ற தமிழ்நாடுதான். இன்னொரு கோணத்தில், இந்த நிலப்பகுதியை தமிழின் மனம், தமிழர்களின் மனம் என்றும் கொள்ளலாம்.
இந்தச் சொல், நமக்குப் புதிது அல்ல. நுாலகம், பாலகம், தொழிலகம், உணவகம், மருந்தகம், தலைமையகம் என்ற சொற்கள் பரவலாக வழக்கில் உள்ளன. தி.மு.க., இளைஞர் அணியின் தலைமை நிலையத்தின் பெயர், அன்பகம். தமிழக அரசு அலுவலகம் ஒன்றின் பெயர், எழிலகம். முன்னாள் முதல்வர் கருணாநிதி போன்றவர்கள், தங்களது எழுத்திலும், பேச்சிலும், தமிழகம் என்ற சொல்லைப் பயன்படுத்தி இருக்கின்றனர். சட்டசபையில் கூட, தமிழகம் என்ற சொல்லை தான், கருணாநிதி பயன்படுத்துவார்.
அவ்வளவு ஏன்... சமீபத்தில் நடந்து முடிந்த தேர்தலின் போது கூட, 'வெற்றி நடை போடும் தமிழகமே' என்ற வாக்கியம் தானே பிரபலம் அடைந்தது! கிட்டத்தட்ட, 2000 ஆண்டுகளுக்கு மேலாக, உயிர்ப்புடன் இருந்து வரும் சொல் 'தமிழகம்!''நாடு' என்ற சொல்லுக்கும், 'அகம்' என்ற சொல்லுக்கும், என்ன பெரிய வித்தியாசம் என நீங்கள் கேட்கலாம். பழந் தமிழகத்தில் சேரர், சோழர், பாண்டியர், பல்லவர் ஆகியோர் தத்தம் நிலப்பகுதிகளை தங்களுக்கென தனி இறையாண்மை கொண்ட அரசு, முடி, மகுடம், கொடி, படை இவைகளை கொண்டு ஆட்சி செலுத்திய போது தங்கள் பகுதிகளை நாடு என்றழைத்தனர். நாடு என்பது பொதுவாக ஒரு நிலப்பரப்பைக் குறிக்கும் சொல். அதனால் சிற்றரசர்களும் தங்கள் பகுதியை நாடு என்று அழைத்துக் கொண்டனர். 'வேணாடு, ஆய்நாடு, அருவா நாடு, சீதநாடு, குட்ட நாடு' என பல உண்டு.
கதப்பிள்ளை சாத்தனார்
மூவேந்தர்கள் ஆண்ட நாடுகள் எல்லாவற்றிலும், தமிழ் வழங்கப்பட்டதால் அவை அனைத்தும் தமிழகம் என்ற பொதுச் சொல்லால் குறிக்கப்பட்டன. 'வையக வரைப்பில் தமிழகம் கேட்ப' என்பது, புறநானுாற்றில் ஒரு வரி - பாடல் 168, வரி 18.'பிட்டன் கொற்றன் என்ற ஒரு சிற்றரசனின் வள்ளல் தன்மையை தமிழகம் முழுக்கப் பாடுவேன்' என்று இந்த வரியின் மூலம் கூறுகிறார் கருவூர்க் கதப்பிள்ளை சாத்தனார் என்ற புலவர். 'இமிழ் கடல் வேலித் தமிழகம் விளங்க' என்று தமிழகத்திற்கு எல்லை வகுக்கும் பதிற்றுப்பத்து என்ற சங்க இலக்கியத்தின் வரியை, இளங்கோவும் சற்று மாற்றி சிலப்பதிகாரத்தில், 'இமிழ் கடல் வரைப்பில் தமிழகம் அறிய' எனத் தமிழ் மொழி வழங்கிய பகுதிகள் அனைத்தையும் குறிக்கப் பயன்படுத்துகிறார்.ஆனால் தமிழ் நாடு என்ற சொல், சங்க இலக்கியங்களில் அதிகம் பயன்படுத்தப்பட்டிருப்பதாக எனக்குத் தெரியவில்லை. தமிழ் கூறு நல்லுலகம், தமிழ் வரம்பு என்ற சொற்கள் உண்டு.

தமிழ்நாட்டகம் என்ற ஒரு சொல் பரிபாடலில் உண்டு. ஆனால் அதிலும் அகம் என்பதும் இணைந்தே குறிக்கப்படுகிறது. 'செந்தமிழ் நாடென்னும் போதினிலே' என்ற பாடலைச் சுட்டிக் காட்டி, 'பாரதியார் போன்றவர்கள் தமிழ்நாடு என்ற சொல்லைப் பயன்படுத்தியிருக்கின்றனரே...' என்று சிலர் கேட்கலாம். ஆம், பயன்படுத்தியிருக்கிறார். தமிழ்நாடு என்ற நிலப்பரப்பையும், பண்டைத் தமிழ் இலக்கியங்களையும் பெருமிதத்தோடு சுட்டிக் காட்டும் பாடல் அது. தாகூரின், 'ஜனகணமன'வைப் போன்றது. தாகூர் தன், 'ஜனகணமன'வில் திராவிடம் என்ற சொல்லைப் பயன்படுத்துகிறார். ஆனால் அது திராவிடர் கழகம் பயன்படுத்தும் அர்த்தத்தில் அல்ல.
'தென்னிந்தியா' என்ற நிலப்பரப்பைக் குறிக்கும் விதமாக அது அமைகிறது.அது போல, பாரதியார், 'தமிழ்நாடு' என்பதை, நிலப்பகுதியின் சிறப்புகளைச் சொல்வதற்காகப் பயன்படுத்துகிறார். பாரதி, அது ஒரு தனிநாடு என்ற அர்த்தத்தில், எங்கும் பயன்படுத்தவில்லை.
'வாழிய செந்தமிழ், வாழ்க நற்றமிழர், வாழிய பாரத மணித்திரு நாடு' என்பது தான் அவரது முழக்கம்; அவரது கொள்கை.தமிழ்நாடு என்ற மாநிலம் உருவாவதற்கு முன்பே, அதாவது சுதந்திரத்திற்கு முன்பே அந்தச் சொல் அரசியல் அரங்கில் வழக்கில் இருந்தது.
பிரபலமான கோஷம்
அன்றே இந்த நிலப்பகுதியில் இயங்கிய காங்கிரஸ் கமிட்டியின் பெயரே தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டிதான்.நிலப்பரப்பைக் குறித்து வந்த இந்தச் சொல், அரசியல் சொல்லாகப் பரிணாமம் பெற்றது, தி.மு.க., வளர்ச்சி கண்ட போதுதான்.'தமிழகத்தையும் தனி நாடாகப் பிரிக்க வேண்டும்' என்ற கோரிக்கையை, ஒரு காலத்தில் தி.மு.க., மேடைகளில் முழங்கி வந்தது வரலாறு. 'அடைந்தால் திராவிட நாடு, இல்லையேல் சுடுகாடு' என்பது அவர்களது பிரபலமான கோஷம். அரசியலமைப்புச் சட்டத்தின் 16வது திருத்தத்தின் மூலம், பிரிவினை வாதம் பேசும் அமைப்புகள், தடை செய்யப்படும் நிலை 1963ல் ஏற்பட்ட போது, தன் திராவிடநாடு கோரிக்கையைக் கைவிட்டது தி.மு.க., அப்போதும் கூட அண்ணாதுரை, 'கோரிக்கை கை விடப்பட்டாலும் அதற்கான காரணங்கள் அப்படியே இருக்கின்றன' என்றார்.திராவிட நாட்டை அடைய முடியாவிட்டாலும் தமிழகத்தின் ஆட்சியை அவர்கள், 1967ல் அடைந்தனர். அந்த ஆண்டே, முறிந்த கனவின் நீட்சியாக இருக்கட்டும் எனக் கருதினரோ என்னவோ, தமிழ்நாடு என்ற பெயர் மாற்றம், நம் மாநிலத்திற்கு ஏற்பட்டது.சுருக்கமாகச் சொன்னால் தமிழ்நாடு என்பது அரசியலைக் குறிக்கும் சொல். தமிழகம் என்பது தமிழ் மொழியின் தொன்மையை, பண்பாட்டை உணர்த்தும் சொல்.
தமிழ்நாடு என்ற பெயர் மாற்ற வரலாற்றைக் கேட்டால், நாம் பிரிவினை பேசிய வரலாற்றைக் கூறாமல் தவிர்க்க முடியாது. இந்திய ஒற்றுமையில் நம்பிக்கை கொண்டிருக்கும் பிற மாநிலத்தவர்கள், நம்மை சந்தேகப் பார்வையோடு நோக்குவர்; நல்லிணக்கம் கெட்டுப் போக வாய்ப்புண்டு.மாறாக, 'தமிழ்நாடு என்பதை ஏன் தமிழகம் என்று மாற்றினீர்கள்?' என பிற மாநிலத்தவர்கள் கேட்டால்... 'சங்க இலக்கியத்திலிருந்து இன்று வரை, 2,000 ஆண்டுகளாக வழங்கி வரும் சொல்' என்பதில் தொடங்கி, சங்க இலக்கியம், அதில் காணப்படும் தமிழர் பண்பாடு ஆகியவற்றை எடுத்துச் சொல்லி, பெருமைப்படலாம்; தமிழகத்தின் கவுரவத்தைக் காப்பாற்றலாம்.
தொன்மையான மொழி
பிரதமர் மோடி, தமிழ் மொழியின் பெருமையைப் பற்றி தமிழர் அல்லாதவர்களிடம் எடுத்துக் கூறி வருகிறார்.'உலகின் தொன்மையான மொழி தமிழ், சமஸ்கிருதத்தை விடவும் பழமையான மொழி' என்றெல்லாம் அவர் கூறி வருவதையடுத்து, பிற மொழியினரின் பார்வை, தமிழ் மொழி மீதும், தமிழர்கள் மீதும் மாறி வருகிறது. இந்த நல்வாய்ப்பை நாம், தமிழகத்தின் நலனுக்கு பயன்படுத்திக் கொள்ள வேண்டும். எனவே தமிழ் மரபை எடுத்துரைக்கும் வகையிலும், தமிழகம் நலம் பெறும் வகையிலும், நம் மாநிலம், 2,000 ஆண்டுகளுக்கும் மேலாக உயிர்ப்புடன் இருந்து வரும், 'தமிழகம்' என்ற சொல்லால் அழைக்கப்பட வேண்டும் என்று, அரசைக் கோருவோம். அரசு அவ்விதம் அறிவிக்கும் வரை நாம், 'தமிழ்நாடு' என்ற சொல்லைத் தவிர்த்து 'தமிழகம்' என்றே அழைத்து வருவோம்! மாநில அரசை தமிழக அரசு என்றும், மத்திய அரசை இந்திய அரசு என்றும் அழைப்போம்.
மாலன்... பத்திரிகையாளர்,
இ - மெயில்: maalan@gmail.com