சென்னை: தமிழக வளர்ச்சி கொள்கைக் குழுவிற்கு புதிய உறுப்பினர்களை நியமித்து முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். அக்குழுவின் துணை தலைவராக ஜெ.ஜெயரஞ்சன் நியமிக்கப்பட்டுள்ளார்.
இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: தமிழகத்தில் மாநில திட்டக்குழு முன்னாள் முதல்வர் கருணாநிதியால் 1971-ம் ஆண்டு மே 25-ல் ஏற்படுத்தப்பட்டது. மாநில திட்டக்குழு முதல்வர் தலைமையின்கீழ் ஒரு ஆலோசனை அமைப்பாக செயல்பட்டு மாநிலத்தின் பல்வேறு வளர்ச்சிக்கான செயல்பாடுகளில் தனது பரிந்துரைகளை அரசுக்கு அளித்து வருகிறது. மாநில திட்டக்குழு, துணைத் தலைவரின் கீழ் வளர்ச்சி சார்ந்த முக்கிய துறைகளின் நிபுணர்களை உறுப்பினர்களாகக் கொண்டு இந்த அமைப்பு செயல்பட்டு வருகிறது.

மாநில திட்டக்குழுவானது கடந்த 2020ம் ஆண்டு ஏப்ரலில் ‛மாநில வளர்ச்சி கொள்கைக் குழு'வாக மறுசீரமைப்பு செய்யப்பட்டு, அதன் இன்றியமையாத பணிகளான இலக்கு நிர்ணயிப்பது கண்காணிப்பு, மதிப்பீடு மற்றும் கொள்கைக்கான ஆலோசனை வழங்குதல், கொள்கை ஒத்திசைவு உருவாக்குதல், சிறப்பு திட்டங்களைச் செயல்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு முக்கியமான பணிகளை மேற்கொண்டு வருகிறது. இந்த மாநில வளர்ச்சி கொள்கைக் குழுவை திருத்தியமைத்து முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

அதன்படி, பேராசிரியர் ஜெ.ஜெயரஞ்சன் மாநில வளர்ச்சி கொள்கைக்குழுவின் துணைத் தலைவராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். பேராசிரியர் ராம.சீனுவாசன், முழு நேர உறுப்பினராகவும், பேராசிரியர்கள் ம.விஜயபாஸ்கர், சுல்தான் அஹ்மத் இஸ்மாயில், மு.தீனபந்து, மன்னார்குடி எம்எல்ஏ., டி.ஆர்.பி.ராஜா, மல்லிகா சீனிவாசன், டாக்டர் ஜோ.அமலோற்பவநாதன், சித்த மருத்துவர் கு.சிவராமன் மற்றும் முனைவர் நர்த்தகி நடராஜ் உள்ளிட்டோர் பகுதி நேர உறுப்பினர்களாகவும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இவ்வாறு அந்த செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE