சிறப்பு பகுதிகள்

சிந்தனைக் களம்

புதிய அரசின் தவறுகள் திருத்தப்பட வேண்டும்!

Updated : ஜூன் 08, 2021 | Added : ஜூன் 06, 2021 | கருத்துகள் (27)
Share
Advertisement
ரொம்பவே சோதனையான காலத்தில், ஸ்டாலின் தலைமையில் பொறுப்பேற்றுள்ளது தமிழக அரசு. ஏராளமான சிக்கல்களில் தானாக போய் சிக்கிக் கொண்டுள்ளது இந்த அரசு.முதல்வராக பதவிக்கு வந்த முதல், 10 நாட்களில் ஸ்டாலின் செயல்பாடுகள் அருமை என்ற ரகத்திலேயே இருந்தன. ஆனால், அதன் பின், அமைச்சர்கள் சிலரின் செயல்பாடுகள்; கட்சி பிரமுகர்களின் அராஜகங்கள், தமிழகத்தை அதிர்ச்சிக்கு
CM Stalin, MK Stalin, Stalin, DMK, ஸ்டாலின், முக ஸ்டாலின், திமுக, முதல்வர் ஸ்டாலின்

ரொம்பவே சோதனையான காலத்தில், ஸ்டாலின் தலைமையில் பொறுப்பேற்றுள்ளது தமிழக அரசு. ஏராளமான சிக்கல்களில் தானாக போய் சிக்கிக் கொண்டுள்ளது இந்த அரசு.முதல்வராக பதவிக்கு வந்த முதல், 10 நாட்களில் ஸ்டாலின் செயல்பாடுகள் அருமை என்ற ரகத்திலேயே இருந்தன.

ஆனால், அதன் பின், அமைச்சர்கள் சிலரின் செயல்பாடுகள்; கட்சி பிரமுகர்களின் அராஜகங்கள், தமிழகத்தை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளன.அதுவும் நிதியமைச்சராக இருக்கும் தியாகராஜன் போன்றோர், வெளிப்படையாகவே மத்திய அரசை எதிர்க்கின்றனர். 'நாங்கள் இன்றி நீங்கள் இல்லை' என, சவடால் பேசுகின்றனர். அதுபோல, ஆங்காங்கே கிராமப்புறங்களிலும், நகர்புறங்களிலும், தி.மு.க.,வின் மூன்றாம் மற்றும் நான்காம் மட்டத் தலைவர்கள், அந்தந்த பகுதியை தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வந்து, 'எங்களை கேட்காமல் எதுவும் செய்யக் கூடாது' என, அரசு அதிகாரிகளை மிரட்டுகின்றனர்.

தடுப்பூசி போடுவது ஆகட்டும்; வீடு வீடாக கொரோனா பரிசோதனை செய்வது ஆகட்டும்; இலவச ரேஷன் பொருட்கள் வினியோகத்திற்கான, 'டோக்கன்' விவகாரம் ஆகட்டும், ஊழியர்களுடன் அவர்களும் செல்கின்றனர்; 'டோக்கனை' அவர்கள் தான் மக்களிடம் கொடுக்கின்றனர்; அதிகாரத்தை தங்கள் கையில் எடுத்துள்ளனர். மக்கள், 'நம்ம கதி, இன்னும் ஐந்தாண்டுகளுக்கு அதோகதி தான்' என எண்ணத் துவங்கி விட்டனர்.

முதல்வர் ஸ்டாலினிடம் சமீப காலமாக காணப்படும் நிதானம், அமைதியான போக்கு, இரண்டாம் மட்டத் தலைவர்கள் துவங்கி, கீழ் மட்டம் வரை இல்லை என்பதே நிதர்சனம். தி.மு.க., எதிர்க் கட்சியாக இருந்த போது, ஸ்டாலின் திட்டித் தீர்த்த, பா.ஜ.,வையும், மோடியையும், இப்போது அவர் விமர்சிப்பதில்லை. ஆனால், அந்த வேலையை அமைச்சர்கள் சிலர் ஏற்றுள்ளனர் போலும். முதல்வராக பதவி ஏற்றதும், 'கட்டப் பஞ்சாயத்துக்கள் மற்றும் ஆட்சியின் பெயரைக் கெடுக்கும் செயல்களை யார் செய்தாலும் கடும் நடவடிக்கை எடுப்பேன்' என, அவர் எச்சரிக்கை விடுத்தார். ஆனாலும், கட்சிக்காரர்கள் கண்டுகொள்ளவில்லை.

கொரோனாவை கட்டுப்படுத்த மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் சுறுசுறுப்பாக செயல்பட, சம்பந்தமே இல்லாத உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, 'உங்களால் தான் கொரோனா பரவியது' என, பத்திரிகையாளர்கள் மீது பாய்கிறார்.முதல்வர் ஸ்டாலினும் எதற்கெடுத்தாலும் விழா; எப்போதும் தன்னைச் சுற்றி, 50 பேர்; 100க்கும் மேற்பட்ட கார்களில் உலா என, மன்னர் போல மாறி வருகிறார்.

ஆட்சிக்கு வந்த ஒரு மாதத்திற்குள் இவ்வளவு குறைகளை காண்பது தவறு தான் என்றாலும், ஆட்சி, அதிகாரத்திற்கு அவர் புதியவர் இல்லையே... அதனால், இவற்றை வெளிச்சம் போட்டு காட்டத் தான் வேண்டியிருக்கிறது.கொரோனா ஊரடங்கு உத்தரவு அமலாக்கத்தில் ஏகப்பட்ட குளறுபடிகள். ஊரடங்கு உத்தரவை பிறப்பித்து, அனைத்து கடைகளையும், ஒன்றரை நாட்களுக்கு திறந்து, அனைத்து பஸ்களையும் இயக்கி, கொரோனாவை பரப்பி விட்டது இந்த அரசு.

கொரோனா தொற்று இன்னும் முழுமையாக ஒழியாத நிலையில், தொற்று எண்ணிக்கை வெகுவாக குறையான நிலையில், ஒரு வாரத்திற்கும் மேலாக, ரேஷன் கடைகள் முன் மக்கள் கூட்டம் காணப்படுகிறது. அத்தியாவசிய பொருட்களை வாங்க, ரேஷன் கடைகள் முன் குவியும் மக்களை கட்டுப்படுத்த எந்த அறிவியல்பூர்வ நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

இந்த கொரோனா நேரத்தில் வீடு வீடாக சென்று, கொரோனா நிவாரண தொகையை பெறுவதற்கான டோக்கன் வழங்கியது; மக்களை ரேஷன் கடைகளுக்கு வரவழைத்தது போன்றவற்றை தவிர்த்திருக்கலாம்.அதற்குப் பதில், பயனாளர்களின் வங்கிக் கணக்கில் பணத்தை செலுத்தி இருக்கலாமே!

கொரோனா நிவாரண நிதியாக, 4,000 ரூபாய் கொடுக்க முடிவு செய்து விட்டீர்கள். 20 நாட்கள் இடைவெளியில், 2,000 ரூபாயாக இரு முறை ஏன் கொடுக்க வேண்டும்... இரண்டு முறை கூட்டத்தில் மக்கள் இடிபட வேண்டியுள்ளது. இதை பார்க்கும் போது, அரசே கொரோனா பரவலை ஊக்குவிப்பதாக உள்ளது.

ஒரு ரேஷன் கடையில் ஆயிரம் கார்டுகள் இருந்தால் பெரும்பாலும் மாதாமாதம் முதல் தேதியே, திமுதிமுவென்று மக்கள் ரேஷன் கடைக்கு திரள்கின்றனர்.முதல் ஒரு வாரம் கொரோனா தொற்று வாரம் தான் என்பதை, ஒன்றாம் தேதி முதல், ஏழாம் தேதி வரை ரேஷன் கடைக்கு சென்று பார்த்தால் நாம் உணர முடியும்.

இதைத் தவிர்க்க, இரண்டு வழிகள் உள்ளன. முதல் வழி, வீடுகளுக்கே சென்று பொருட்கள் வழங்குவது. இதில் சில நடைமுறை சிரமங்கள் இருந்தால், ஆயிரம் கார்டுகளை நம்பர் வாரியாக, இந்த நம்பர் முதல் இந்த நம்பர் வரை, மாதாமாதம், இந்த இந்த தேதிகளில் வழங்கப்படும் என்று அறிவித்துவிடலாம். இதனால் ஒரே நாளில் நுாற்றுக் கணக்கானோர் கடையில் குவிவது தடுக்கப்படும். மாதம் முழுதும் கடை ஊழியர்களுக்கு சமமான வேலைப்பளு இருக்கும்.

இன்னொரு மிகபெரிய தவறை, முந்தைய அரசு போலவே இந்த அரசும் செய்கிறது. ஊரடங்கு போடப் போகிறீர்கள். சரி. அதன் நோக்கம் என்ன... ஒரே இடத்தில் கூட்டமாக மக்கள் கூடுவதைத் தடுப்பது தானே...பின் ஏன், பதினைந்து நாள் தளர்ந்த ஊரடங்குக்குப் பின், இனி கடும் ஊரடங்கு என்று கூறி, ஊரடங்குக்கு முன், ஒன்றரை நாட்கள் அனைத்து கடைகள், வர்த்தக நிறுவனங்களையும் திறந்து, மக்களை பதற்றத்துடன், ஒரே இடத்தில் கூடச் செய்தீர்கள்?இதனால் பதினைந்து நாட்கள் கடைப்பிடித்த ஊரடங்கு வீணாகப் போய், ஒரே நாளில் பலருக்கும் தொற்று பரவி விடாதா? ஒரே நாளில் பலருக்கும் தொற்றைக் கொடுத்துவிட்டு, அடுத்த ஒரு வாரம் ஒரு கடை கூட திறக்காமல் மக்களை வீட்டில் அடைத்து வைப்பதில் பலன் என்ன?

நாளை முதல் ஊரடங்கு, இன்றே அவரவர் ஊருக்கு செல்ல சிறப்பு பேருந்துகள் என்று கூறி மக்களை முண்டியடிக்க வைத்து, கொரோனா ஒரே நாளில் பலருக்கும் பரவ அரசே காரணமாகி விட்டது.ஊரடங்கை போட்டுவிட்டு, அதே நேரம் ஒரே நாளில் கூட்டம் கூட வைப்பது என்பது, பிள்ளையையும் கிள்ளிவிட்டு தொட்டிலையும் ஆட்டும் செயல் இல்லையா? ஒன்று தெரியுமா உங்களுக்கு... நமக்கு தேவை மக்களை ஒரே இடத்தில் கூடாமல் செய்வது மட்டுமே. அதற்கு இத்தனை ஊரடங்கு ஏற்பாடு களை விட, கூட்டம் கூடும் சில விஷயங்களை மட்டும் தடை செய்தால் போதும்.

தியேட்டர்கள், மூடிய அரங்குகளை கொரோனா ஒழியும் வரை அல்லது அனைவருக்கும் தடுப்பூசி போட்டு முடியும் வரை தடை செய்யலாம். இப்போது போலவே திருமணம், இறுதிச் சடங்கு இவற்றிற்கு கட்டுப்பாடுகள் தொடரலாம். மேலே கூறியது போல ரேஷன் கடைகளை ஒழுங்குபடுத்தலாம். பொது போக்குவரத்தை குறிப்பிட்ட காலம் தயங்காமல் தடை செய்யலாம். முக்கியமாக, 100 சதவீதம் மூடிய வாகனமான, காற்று வெளியேற வழியற்ற, விமானப் போக்குவரத்தை தடை செய்யலாம். ஒரு கடைக்கும், மற்றொரு கடைக்கும் குறிப்பிட்ட இடைவெளி இருக்குமாறு கட்டட விதிகளை நிரந்தரமாக மாற்றலாம்.

மக்கள் நல்வாழ்வுத் துறை வழிகாட்டுதல் படி, 100 சதுர அடியில் இத்தனை நபர்கள் தான் புழங்கவோ, வசிக்கவோ வேண்டும் என்ற விதிகள் உள்ளன. அந்த விதிகள் எல்லாம் தொற்றுகளை தவிர்க்கவே. ஆனால் அவை நடைமுறையில் கடைப்பிடிக்கப்படுவது இல்லை.இப்போதைக்கு அவசர நடவடிக்கையாக, ஊரடங்கில் மக்களை 'உள்ளே அனுப்பும்' அமைப்பில் உள்ள குளிர்சாதன கடைகளை மட்டும் மூடலாம். மக்கள் வெளியிலும், கடைக்காரர் உள்ளேயும் உள்ள கடைகளை தடையின்றி முழு நேரமும் திறக்கலாம்.

இன்னும், 144 தடை உத்தரவு மூலம், ஒரே இடத்தில் ஐந்து பேருக்கு மேல் கூடாமல் இருப்பதை உறுதி செய்ய, போலீசுக்கு முழு சுதந்திரம் கொடுக்கலாம்.தடுப்பூசி முயற்சியில் மாநில அரசின் பங்கு குறைவே. ஏனெனில், உற்பத்தி பற்றாக்குறை உள்ள போது, தமிழக அரசை குறை கூற முடியாது. இருப்பினும், 'ஈகோ' பார்க்காமல் மத்திய அரசிடம் கேட்டுப் பெறவேண்டும்.அரசின் அனைத்து சலுகைகளும், இலவசங்களும் உண்மையான ஏழைகளுக்கு மட்டுமே கிடைக்க வேண்டும்.

தேவை இல்லாதோருக்கும் கூட இலவசங்கள், மாதம், 50 ஆயிரம் ரூபாய்க்கு மேல் சம்பாதிப்பவர்களுக்கும் கூட ரேஷன் அரிசி, பஸ்சில் இலவச பயணம் போன்ற வரிப்பணத்தை வீணடிக்கும் திட்டங்களை நிறுத்த வேண்டும்.மக்களை பிச்சைக்காரர்களாக்கும் திட்டங்களைத் தவிர்த்து, தன் கட்சிக்காரர்களின், 'மைண்ட்செட்'டை முதலில், முதல்வர் மாற்ற வேண்டும். எப்போதும் உடன் வரும் மூத்த தலைவர்களுக்கு கட்சியை ஒழுங்குபடுத்தும் பணியை வழங்கி, கட்சியினரை ஒழுக்கமானவர்களாக, நியாயமானவர்களாக மாற்ற முயற்சிக்கலாம்.

பெரு நகரங்களை சுற்றியே தொழில்களை துவக்க உரிமம் கொடுப்பதை நிறுத்தி, பரவலாக எல்லா இடங்களிலும் துவங்க வேண்டும். முக்கியமாக, இன்னும் ஒன்றிரண்டு ஆண்டுகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்குகிறேன் பேர்வழி என கூட்டத்தை கூட்டி, வழக்கமான முறையில், போட்டோ எடுத்து, பயனாளிகளை சென்னைக்கு வரவழைத்து... என்பன போன்றவற்றை நிறுத்தி விட வேண்டும்.

கொரோனா தொற்று முழுமையாக நாட்டை விட்டு ஓடும் வரை, நான்கு பேருக்கு மேல் எந்த இடத்திலும் கூடாத வகையில் சமூக திட்டங்கள், அரசு விழாக்களை நடத்த வேண்டும். சொல்லப் போனால் விழாக்களே தேவையில்லை; செயல்பாடுகளே முன்னிலை வகிக்க வேண்டும்.ஒடிசா, பீகார், உ.பி., போன்ற முதல்வர்களின் எளிமையான செயல்பாடுகளை பின்பற்றி, முன்னுதாரணமாக தமிழகம் மாற, முதல்வர் முயற்சிக்க வேண்டும்.

கடைசியாக, மதம், ஜாதி, இனம் போன்ற தனிநபர் சம்பந்தப்பட்ட விஷயங்களைப் பற்றி, சமூக வலைதளங்களில் அதிகம் பேசி மக்களை உசுப்பேற்றும் கட்சியினரையும், பிற முன்னணியினர், அமைப்பினருக்கு வாய்ப்பூட்டு போட வேண்டும்.கடந்த சில நாட்களாக, உங்கள் மகன் உதயநிதியின் செயல்பாடுகளை பார்க்க முடிகிறது. அடிமட்டத்தில், மக்களுடன் மக்களாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறார். அதுபோல நீங்களும், பிற அமைச்சர்களும் கீழ்மட்டத்தில் இறங்கி செயல்பட வேண்டும்.

கொஞ்ச காலத்திற்கு, 'இன்னோவா, பிராடா, பார்ச்சூனர், பென்ஸ்' போன்ற கார்களை விட்டு இறங்கி, காலாற நடந்து, மக்களுக்கு தொண்டாற்ற வேண்டும்.இவை சில ஆலோசனைகள் மட்டுமே. இவற்றை செயல் படுத்தும் பொன்னான வாய்ப்பு ஐந்து ஆண்டுகளுக்கு ஸ்டாலினுக்கு கிடைத்திருக்கிறது.

இவற்றை துணிந்து செய்யும் போது, வித்தியாசத்தை விரும்பும் இப்போதைய இளைஞர்களின் மனதில் ஸ்டாலின் நீங்காத இடம் பெற முடியும்.செய்வாரா அவர்? மெஜாரிட்டி இருக்கிறது. செய்தால், கட்சிக்கு அப்பாற்பட்ட மக்கள் தலைவர் ஆவார். பார்ப்போம். இன்னும் ஐந்து ஆண்டுகள் இருக்கிறது!

- ராஜன், எழுத்தாளர் 96883 32233

Advertisement
வாசகர் கருத்து (27)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
p.n.aandi - maruthoor,இந்தியா
12-ஜூன்-202109:46:19 IST Report Abuse
p.n.aandi சரியான நேரத்தில் சரியான கட்டுரையை எழுதியவருக்கு மிக்க நன்றி,முதலில் எந்த பதவியில் இருந்தாலும் எதிர்க்கட்சி உறுப்பினர் என்டரிலும் சரி இல்லை பொது மக்கள் என்றாலும் கட்சியை விட்டு விட்டு எல்லோருக்கும் பொதுவான முதல்வராக இருந்து எப்போதும் தவிர செய்பவர்களை தட்டி கேட்பதுடன் மத்திய அரசுடன் நட்பாக இருந்து தமிழகத்தை முன்னேற்றுவதாகி விட்டு விட்டு மீண்டும் பிரிவினை வாதம் கதைத்து தமிழகத்தை பின்னோக்கி தள்ளி விடாதீர்கள்.
Rate this:
Cancel
unmaitamil - seoul,தென் கொரியா
09-ஜூன்-202101:41:31 IST Report Abuse
unmaitamil முன்பு கொரோனா தோற்று ஐந்தாயிரமாக இருந்தபோது திறமை இல்லாத அரசு என ஊளை இட்டனர். ஆனால் இன்று, இருபதினாயிரம் தாண்டி போய்க்கொண்டிருக்கும்போது , இந்த அரசு, தொற்றை கட்டுக்குள் வைத்துள்ளது என உளறி கொட்டுகின்றனர் இந்த தீய திருட்டுக்கூட்ட அடிமைகள். இவர்களுக்கு வெட்கமே இல்லையா ??
Rate this:
Cancel
sankaseshan - mumbai,இந்தியா
07-ஜூன்-202117:52:14 IST Report Abuse
sankaseshan டிராவிடனுங்ககிட்ட ஆயிரம் ஓட்டை இருக்கு அதை அடைக்க துப்பில்லை இன்னொருத்தனை குறைசொல்ல வந்துட்டான் . பதவி ஏற்று 1 மாசம் முடிஞ்சிருக்கு சர்டிபிகேட் கொடுத்துட்டான் Nallaarasaam
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X