ஆறுகளில் மீண்டும் மணல் குவாரிகள்: மூன்று நிறுவனங்கள் ரகசியமாக தேர்வு| Dinamalar

எக்ஸ்குளுசிவ் செய்தி

ஆறுகளில் மீண்டும் மணல் குவாரிகள்: மூன்று நிறுவனங்கள் ரகசியமாக தேர்வு

Updated : ஜூன் 07, 2021 | Added : ஜூன் 06, 2021 | கருத்துகள் (18) | |
சென்னை- நீர்வளத்துறை வாயிலாக மணல் குவாரிகளை நடத்த, மூன்று நிறுவனங்கள் ரகசியமாக தேர்வு செய்யப்பட்டு உள்ளன.பொதுப்பணி துறையின் கீழ் இயங்கும் நீர்வளத்துறை வாயிலாக, மணல் விற்பனை நடந்து வருகிறது. குவாரிகளில் மணல் அள்ளி, கிடங்குகளில் கொட்டி விற்பனை செய்ய தனியார் நிறுவனங்கள் தேர்வு செய்யப்படுகின்றன. மணல் அதிகம் அள்ளியதால், பல ஆறுகளில் நீரோட்டம் பாதித்தது. இது தொடர்பாக
திமுக, ஆறுகள், மணல் குவாரிகள், ரகசிய தேர்வு

சென்னை- நீர்வளத்துறை வாயிலாக மணல் குவாரிகளை நடத்த, மூன்று நிறுவனங்கள் ரகசியமாக தேர்வு செய்யப்பட்டு உள்ளன.

பொதுப்பணி துறையின் கீழ் இயங்கும் நீர்வளத்துறை வாயிலாக, மணல் விற்பனை நடந்து வருகிறது. குவாரிகளில் மணல் அள்ளி, கிடங்குகளில் கொட்டி விற்பனை செய்ய தனியார் நிறுவனங்கள் தேர்வு செய்யப்படுகின்றன. மணல் அதிகம் அள்ளியதால், பல ஆறுகளில் நீரோட்டம் பாதித்தது. இது தொடர்பாக தொடரப்பட்ட வழக்குகளால், அரசுக்கு நெருக்கடி ஏற்பட்டது. மணலுக்கு மாற்றாக 'எம் - சாண்ட்' விற்பனையை அரசு ஊக்குவித்து வருகிறது.

அதுமட்டுமின்றி, மலேஷியாவில் இருந்து கப்பலில் மணல் இறக்குமதி செய்து, விற்பனை செய்ய, இரண்டு தனியார் நிறுவனங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது. இதனால், கடந்த அ.தி.மு.க., ஆட்சியில் மணல் குவாரிகள் அதிகம் இயக்கப்படவில்லை.


ஒப்பந்தங்கள்

தி.மு.க., ஆட்சிக்கு வந்துள்ள நிலையில், மணல் குவாரிகளை இயக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. இதற்கு அவசர அவசரமாக மூன்று நிறுவனங்கள் தேர்வு செய்யப்பட்டு உள்ளன.நீர்வளத்துறை அமைச்சர்துரைமுருகன் வீட்டிலேயே, இதற்கான ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி உள்ளதாக தெரிகிறது.

கடந்த ஆட்சியில், பணமாற்ற சர்ச்சையில் சிக்கிய தொழிலதிபர் ஒருவரின் நிறுவனத்திற்கும், அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. அதுமட்டுமின்றி, மதுரை, வேலுார் மாவட்டத்தைச் சேர்ந்த இருவருக்கும் அனுமதி கிடைத்துள்ளது.இருவரும் அமைச்சருக்கும், அவரது மகனுக்கும் நெருக்கமானவர்கள் என, கூறப்படுகிறது. இவர்கள் மூவருக்கும் மணல் அள்ள, மாவட்டங்கள் பிரித்து கொடுக்கப்பட்டு உள்ளன.

இவர்கள், அந்தந்த மாவட்டங்களில் சிறிய ஒப்பந்ததாரர்கள் வழியாக, பிரச்னையின்றி ஆறுகளில் குவாரிகள் அமைத்து, மணல் அள்ள அறிவுறுத்தப்பட உள்ளது. மணல் குவாரிகளை விரைந்து திறக்க வசதியாக, நீர்வளத்துறை வாயிலாக, சில மாவட்டங்களில், சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையத்தின் அனுமதி பெறப்பட்டு உள்ளது.சில ஆண்டுகளாக குவாரிகளில் மணல் அள்ளாததால், மழையால், அனைத்து மாவட்ட ஆறுகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.இதனால், பாசனம், குடிநீர் உள்ளிட்டபிரச்னைகள் தீர்ந்துள்ளன.


மக்கள் அதிருப்தி

மீண்டும் ஆறுகளில் மணல் அள்ளுவதால் நீரோட்டம் பாதிக்கப்படும். இது சமூக ஆர்வலர்கள், விவசாயிகள், பொதுமக்கள் மத்தியில், ஆரம்பத்திலேயே அரசின்மீது அதிருப்தியை ஏற்படுத்தும். எனவே, மணல் குவாரி களுக்கு மாற்றாக, எம் - சாண்ட், வெளிநாட்டு மணல் விற்பனையை ஊக்குவிக்க, முதல்வர் ஸ்டாலின் நடவடிக்கை எடுக்க வேண்டிய அவசியம் எழுந்துள்ளது.

Advertisement
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X