இனி 'தமிழ்நாடு'னு தான் அழைப்போம் தமிழகம்ன்னு அழைக்க மாட்டோம்; மத்திய அரசுனு சொல்ல மாட்டோம்- என, தி.மு.க.வினர் கூறுகின்றனர். அவர்களுக்கு, 'அடைந்தால் திராவிட நாடு இல்லையேல் சுடுகாடு'னு, 1960களில் முழங்கிய தி.மு.க., தலைவர்கள் இப்போது யாராவது இருந்தால் அவர்களிடம், அந்த பிரபல முழக்கத்தை ஏன் விட்டுடீங்கணு கேளுங்க!
- தமிழக பா.ஜ., செயலர் ராகவன்
'அந்த கால அலங்கார பேச்சு, அடுக்கு மொழி சொற்கள், கனல் கக்கும் பேச்சுகளை இப்போது யாராவது பேசினால், வேறு விதமாக மக்கள் நினைத்து விடுவர்...' என, சொல்லத் தோன்றும் வகையில், தமிழக பா.ஜ., செயலர் ராகவன் அறிக்கை.
கொரோனா இரண்டாவது அலையில் 1.5 லட்சத்திற்கு மேற்பட்டோர் இறந்த பிறகும், இரண்டாவது அலையை தோற்கடித்து விட்டதாக மோடி அரசு மார்தட்டிக் கொள்கிறதே!
- மார்க்சிஸ்ட் பொலிட்பீரோ உறுப்பினர் ராமகிருஷ்ணன்
'கொரோனாவை தோற்கடித்து விட்டனரா; கொரோனா நம்மை தோற்கடித்து விட்டதா என்பது, இன்னும் மூன்று மாதங்களில் தெரிந்து விடும்...' என, சொல்லத் தோன்றும் வகையில், மார்க்சிஸ்ட் பொலிட்பீரோ உறுப்பினர் ராமகிருஷ்ணன் அறிக்கை.
என் மனைவியின் மரணத்தால், வெறிச்சோடி போன என் இதயத்தில், முதல்வர் ஸ்டாலின் மட்டுமே இருக்கை போட்டு அமர்ந்துள்ளார். பகுத்தறிவாளனான நான், அவரை, 'திருவாசகத்தின்' வரிகளான, 'வேண்டதக்கது அறிவோய் நீ; வேண்ட முழுதும் தருவோய் நீ' என்ற வார்த்தைகளால் வணங்குகிறேன்.
- தி.மு.க., - எம்.பி., ஆ.ராசா

'முதல்வரிடம் ஏதோ எதிர்பார்த்து அறிக்கை விட்டது போல தெரிகிறதே...' என, கூறத் துாண்டும் வகையில், தி.மு.க., - எம்.பி., ஆ.ராசா அறிக்கை.
எனக்கு கிடைத்த தகவலின்படி, இன்னும், ஆறு மாத காலத்திற்கு, தேர்தல் கமிஷன் எந்தவொரு தேர்தலையும் நடத்தப் போவதில்லை. அதன் மூலம், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, சட்டசபைக்குள் நுழைய விடாமல் தடுக்கப்படுவார்.
- மத்திய முன்னாள் நிதியமைச்சர் யஷ்வந்த் சின்கா
'பயங்கரமான சிந்தனை வளம் சார் உங்களுக்கு... இதன் மூலம், மம்தாவை நீதிமன்றத்திற்கு செல்ல துாண்டுவது நன்கு புலனாகிறது...' என, சொல்லத் தோன்றும் வகையில், பா.ஜ.,விலிருந்து வெளியேறியுள்ள, மத்திய முன்னாள் நிதியமைச்சர் யஷ்வந்த் சின்கா அறிக்கை.
அடுத்த மாதம் 15ம் தேதிக்குள், 40க்கு வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி போடப்பட்டு விடும். இப்போது, 50 லட்சம் பேருக்கு போடப்பட வேண்டியுள்ளது. தடுப்பூசி முன்னுரிமையில், மனநலம் பாதிக்கப்பட்டவர்களும் சேர்க்கப்படுவர்.
- கேரள முதல்வர் பினராயி விஜயன்
'இப்படித் தான் முதல்வர் இருக்க வேண்டும்; மத்திய அரசு மீது பழி போடக் கூடாது; தானே தடுப்பூசியை தயாரிப்பேன் என சொல்லக் கூடாது...' என, கூறத் துாண்டும் வகையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த, கேரள முதல்வர் பினராயி விஜயன் அறிக்கை
நாட்டின் முன்னணி பயணியர் பை தயாரிப்பாளர்களில் ஒருவரான, 'விட்கோ' தொழிலை கைவிட்டுள்ளது. அதுபோல, மேலும் பல நிறுவனங்கள் தொழிலில் இருந்து விலக உள்ளன. அதற்கு காரணம், இந்த அரசு தொழில்களை எங்கே பாதுகாக்கிறது... எல்லாம் வெறும் பேச்சு தான்; வேறு ஒன்றுமில்லை!
- தமிழக காங்., - எம்.பி., கார்த்தி சிதம்பரம்
'தொழிலை கைவிட, கொரோனா தான் காரணம் என, 'விட்கோ' கூறியுள்ளது. அதற்கு ஏன் மத்திய அரசு மீது பழி போட வேண்டும்...' என, கேட்கத் தோன்றும் வகையில், தமிழக காங்., - எம்.பி., கார்த்தி சிதம்பரம் அறிக்கை.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE