சென்னை: ஒன்றிய அரசு என்ற வார்த்தையை திமுக.,வினர் பயன்படுத்துவது, யாரோ சில அறிவிலிகளின் ஆலோசனைபடி செய்யப்படும், சிறு பிள்ளைத்தனமான பிரசாரம் என தமிழக பா.ஜ., செய்தித் தொடர்பாளர் நாராயணன் திருப்பதி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர், நேற்று வெளியிட்ட அறிக்கை: 'யூனியன்' என்ற ஆங்கில சொல்லுக்கு, ஒன்றியம் என்று அகராதி சொல்கிறது. எனவே, அது தவறல்ல. ஆனால், ஆங்கிலத்தில் ஒரு தனி வார்த்தைக்கும், வேறு சில சொற்களை இணைத்து சொல்லப்படும் போது, அதன் பொருளுக்கும் உள்ள வேறுபாட்டை, பொது அறிவு உள்ளவர்கள் புரிந்து கொள்வர். இந்திய அரசியலமைப்பு சட்டம், 'இந்தியா என்கிற பாரதம் பல மாநிலங்கள் ஒன்றடங்கிய, நாடாக இருக்கும்' என்று, தெளிவாக குறிப்பிடுகிறது. மாநிலங்களோடு செய்து கொண்ட ஒப்பந்தங்கள் அடிப்படையில், இந்தியா இணையவில்லை. எனினும், இந்தியா கூட்டாட்சி முறையிலான நாடாக இருக்க முடிவெடுத்தது என்பதை, அரசியலமைப்பு சட்ட வரைவுக்குழு தெளிவுப்படுத்துகிறது.

எந்த மாநிலத்திற்கும், இந்தியாவிலிருந்து பிரிவதற்கு உரிமையில்லை. நிர்வாக வசதிக்காக, இந்த நாடும், நாட்டு மக்களும், பல மாநிலங்களாக பிரிக்கப்பட்டாலும், இந்தியா ஒரே நாடு தான்.மாநிலங்களால் இந்தியா உருவாக்கப்படவில்லை. இந்தியாவால் உருவாக்கப்படுபவைகளே மாநிலங்கள் என்பதை, அம்பேத்கர் தெளிவுப்படுத்தி உள்ளார். இந்திய அரசு தன் நிர்வாக வசதிக்காக, மாநிலங்களை சீரமைத்தது என்பதை கூட அறியாமல், தேவையற்ற, உண்மைக்கு புறம்பான விஷயங்களை பேசிக் கொண்டிருப்பது வீண் வேலை.
பா.ஜ., ஆட்சியில் தான் ஜார்கண்ட், சத்தீஸ்கர், உத்தரகண்ட் போன்ற, புதிய மாநிலங்கள் உருவாகின. அதுவே, வளர்ச்சிக்கான பாதை என்பதை, யாராலும் மறுக்க முடியாது.சட்டசபை தேர்தல் வெற்றிக்கு பின், திடீரென மத்திய அரசு என்ற சொல்லுக்கு பதிலாக, ஒன்றிய அரசு என்ற வார்த்தையை, தி.மு.க.,வினர் பயன்படுத்தி வருகின்றனர்.
இது, யாரோ சில அறிவிலிகளின், அவசர குடுக்கைகளின் ஆலோசனைபடி செய்யப்படும், சிறு பிள்ளைத்தனமான பிரசாரம்.ஒன்றிய அரசோ, மைய அரசோ, மத்திய அரசோ, இந்தியா என்பது, ஒரு குடையின் கீழ்தான் இயங்குகிறது என்பதை, அம்பேத்கர் விளக்கம் வழியே அறிந்து கொள்வர் என, நம்புகிறேன். இவ்வாறு, நாராயணன் திருப்பதி தெரிவித்து உள்ளார்.