கொரோனா ஒழியும் வரை கட்டுப்பாடுகள் அவசியம்

Added : ஜூன் 07, 2021
Share
Advertisement
தமிழகத்தில் கொரோனா தொற்றின் இரண்டாம் அலை பரவல், சில நாட்களாக கோரத்தாண்டவம் ஆடி வந்தது. அதனால், மே 24 முதல், இன்று காலை வரை தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கை, மாநில அரசு அமல்படுத்தியது. அந்த ஊரடங்கு, சில தளர்வுகளுடன், 14ம் தேதி வரை நீடிக்கும் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது. முழு ஊரடங்கை அமல்படுத்தியதால், மே முற்பகுதியில், 35 ஆயிரத்திற்கும் மேல் இருந்த கொரோனா தொற்று பாதிப்பு,
 கொரோனா ஒழியும் வரை  கட்டுப்பாடுகள் அவசியம்

தமிழகத்தில் கொரோனா தொற்றின் இரண்டாம் அலை பரவல், சில நாட்களாக கோரத்தாண்டவம் ஆடி வந்தது. அதனால், மே 24 முதல், இன்று காலை வரை தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கை, மாநில அரசு அமல்படுத்தியது. அந்த ஊரடங்கு, சில தளர்வுகளுடன், 14ம் தேதி வரை நீடிக்கும் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது.

முழு ஊரடங்கை அமல்படுத்தியதால், மே முற்பகுதியில், 35 ஆயிரத்திற்கும் மேல் இருந்த கொரோனா தொற்று பாதிப்பு, தற்போது, 21 ஆயிரம் அளவுக்கு குறைந்துள்ளது. அதேநேரத்தில், மனிதர்களை மட்டுமே தாக்கி வந்த கொரோனா பாதிப்பு, தற்போது விலங்குகளுக்கும் பரவத் துவங்கியுள்ளது. வண்டலுார் உயிரியல் பூங்காவில் உள்ள ஒன்பது சிங்கங்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு, அதில், ஒரு பெண் சிங்கம் இறந்து விட்டதை கவனத்தில் கொள்ள வேண்டும். இதற்கிடையில், கொரோனா தொற்றின், ௩வது அலை தாக்கும் வாய்ப்பும் உள்ளது. அப்படி தாக்கினால், அது தீவிரமாக இருக்கும். குழந்தைகள் அதிகளவில் பாதிக்கப்படலாம் என்ற எச்சரிக்கை தகவல் வெளியாகியுள்ளது. எனவே, மூன்றாம் அலை பாதிப்பு ஏற்படாமல் தடுக்கவும், இரண்டாம் அலை பாதிப்பை முழுமையாக ஒழிக்கவும், மத்திய - மாநில அரசுகள் எடுத்து வரும் அதிரடிகள் தொடர வேண்டும்.

அதே நேரத்தில், 18 - 44 வயது உள்ளவர்களுக்கு, கொரோனா தடுப்பூசி போடும் பணிகளை விரைவுபடுத்த வேண்டும்.நம் நாட்டில் தடுப்பூசி தயாரிக்கும் நிறுவனங்கள், தங்களின் உற்பத்தி முழுவதையும், உள்நாட்டிற்கே வழங்க, மத்திய அரசு ஏற்பாடு செய்ய வேண்டும். உள்நாட்டில் உள்ளவர்கள் எல்லாம், தடுப்பூசி போட்டு விட்டனர்; இனி பயமில்லை என்ற நிலை உருவானால் மட்டுமே, தடுப்பூசி ஏற்றுமதிக்கு அனுமதி தர வேண்டும். அத்துடன், வெளிநாடுகளில் இருந்தும், தேவைப்படும் தடுப்பூசிகளை இறக்குமதி செய்து, ஒவ்வொரு மாநிலத்திற்கும் பகிர்ந்து அளிக்க வேண்டும்.

சமீபத்திய தகவல்படி, தடுப்பூசி போடும் பணி துவங்கிய, நான்கரை மாதங்களுக்கு பின், இதுவரை, 4.45 கோடி பேர் மட்டுமே, முழுமையாக இரண்டு டோஸ் தடுப்பூசி போட்டுள்ளனர்; 17.92 கோடி பேர் முதல் தவணை தடுப்பூசி போட்டுள்ளனர். இவர்களில், 2.58 கோடி பேர் மட்டுமே, 18 முதல், 44 வயதிற்கு உட்பட்டவர்கள்.இந்த நிலை நீடித்தால், 18 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும், தடுப்பூசி போட்டு முடிக்க,பல மாதங்களாகும். இந்த நிலைமையில் மாற்றம் அவசியம். கொரோனா தீவிரத்தால், தற்போது தடுப்பூசி போட்டுக் கொள்ள முன்வருவோர் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், பற்றாக்குறை இல்லாமல் தடுப்பூசிகளை வழங்க, மத்திய அரசு முன்வர வேண்டும். மாநில அரசும் சர்வதேச அளவிலான டெண்டர்கள் வாயிலாக, தேவையான தடுப்பூசிகளை விரைவாக பெற வேண்டும்.

மேலும், செங்கல்பட்டில் உள்ள தடுப்பூசி மையத்தில் உற்பத்தியை துவங்கினால், ஆண்டுக்கு, 10கோடிக்கும் மேலான தடுப்பூசிகள் கிடைக்கும் என்ப தால், அந்த நிறுவனத்தை செயல்பட வைப்பதில், மத்திய அரசு முனைப்புடன் செயல்பட வேண்டும். தடுப்பூசி விஷயத்தில், என்ன தான் அசுர வேகத்தில், மத்திய - மாநில அரசுகள் செயல்பட்டாலும், அனைவருக்கும் போட்டு முடிக்க குறிப்பிட்ட காலமாகும் என்பதால், அதுவரை, பொதுமக்கள் கட்டுப்பாடுகளுடன் நடந்து கொள்வது அவசியம். அத்துடன், மக்கள் அதிக அளவில் கூடும் நிகழ்ச்சிகளான, பொதுக்கூட்டங்கள், கருத்தரங்குகள், திருமண நிகழ்ச்சிகள், இறப்புகள், திருவிழாக்கள், அரசியல் ரீதியான நிகழ்ச்சிகள் போன்றவற்றுக்கு, இன்னும் சில மாதங்களுக்கு கட்டுப்பாடுகள் நீடிக்க வேண்டும்.

திருமணங்கள், துக்க நிகழ்ச்சிகளில் குறிப்பிட்ட நபர்கள் மட்டுமே, கொரோனா பாதுகாப்பு வழிமுறைகளுடன் பங்கேற்பது தொடர வேண்டும். மேலும், பொது போக்குவரத்து விஷயத்திலும் எச்சரிக்கையான அணுகுமுறை அவசியம். ரேஷன் பொருட்கள் வாங்க, பொதுமக்கள் ஒரே நேரத்தில் கடைகளில் கூடுவதை தவிர்க்க, பொருட்கள் வாங்க குறிப்பிட்ட அளவு நபர்களை, குறிப்பிட்ட நேரத்திற்கு வரச்சொல்லும் வகையில், 'டோக்கன்' வழங்கும் நடைமுறையை பின்பற்றலாம். மதுபான பார்கள் செயல்படவும் சில மாதங்கள் தடை விதிக்கலாம். அத்துடன், வெளிநாடுகள், வெளிமாநிலங்களில் இருந்து வருவோருக்காக கட்டுப்பாடுகளை தொடரலாம்.

குறிப்பாக, வெளிநாடுகளில் இருந்து வருவோர் கொரோனா பரிசோதனை செய்ததற்கான சான்றிதழ்களுடன் வரவேண்டும்.மேலும், மருத்துவ நிபுணர்களுடன் கலந்து ஆலோசித்து, பொதுமக்கள் பெரிதும் பாதிக்காத வகையில், வேறு என்னென்ன கட்டுப்பாடுகளை விதிக்கலாம் என்பதை கேட்டறிந்து நடைமுறைப்படுத்த வேண்டும். பொதுமக்களும் முக கவசம் அணிவது, சமூக இடைவெளி கடைப்பிடிப்பதை, சில மாதங்களுக்கு தொடர வேண்டும். இவற்றை எல்லாம் செய்தால், கொரோனா முற்றிலும் ஒழியும் என்பதில் சந்தேகமில்லை. அதை, மத்திய - மாநில அரசுகள் செய்யும் என நம்புவோமாக.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X