புதுடில்லி: தடுப்பூசிகளை மத்திய அரசே கொள்முதல் செய்து மாநிலங்களுக்கு இலவசமாக வழங்கும் என பிரதமர் மோடி கூறியுள்ளார்.
நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி ஆற்றிய உரையில் கூறி உள்ளதாவது: தடுப்பூசியை உருவாக்கும் பணியில் இன்று 7 நிறுவனங்கள் ஈடுபட்டுள்ளன. மூன்று சோதனைகள் நடைபெற்று வருகின்றன. மூக்கு வழியாக செலுத்தும் தடுப்பூசிகள் குறித்தும் நாம் ஆராய்ச்சி செய்து வருகிறோம். குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்துவது பாதுகாப்பானதா என்பதை அறிந்து கொள்வதற்கான சோதனைகளை நாம் துவங்கி உள்ளோம். வைரசுக்கு எதிரான நமது போராட்டத்திற்கு இது பெருமளவு உதவும். உற்பத்தியாளர்களுக்கு மத்திய அரசு தொடர்ந்து ஆதரவு அளித்து வருகிறது.
வெளிநாடுகளில் இருந்தும் தடுப்பூசி பெற்று செலுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு
உள்ளது. சிறுவர்களுக்கும் தடுப்பூசி போட நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.வர உள்ள நாட்களில் தடுப்பூசி விநியோகம் பல மடங்கு அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.
நமது மருத்துவ பணியாளர்கள் மற்றும் மருத்துவர்களுக்கு அனைவருக்கும் தடுப்பு மருந்து வழங்கப்பட்டுள்ளது.அவர்கள் இரண்டாம் அலையில் மக்களுக்கு சேவையாற்றி வருகிறார்கள்.இரண்டாவது அலை உருவாவதற்கு முன்பே பெரும்பாலான மருத்துவப் பணியாளர்களுக்குத் தடுப்பூசி செலுத்தப்பட்டுவிட்டது. முன்கள ஊழியர்கள், மருத்துவர்கள், இதர மருத்துவப் பணியாளர்களுக்குத் தடுப்பூசி போடப்படவில்லையெனில் என்ன நிகழ்ந்திருக்கும் என்று நம்மால் நினைத்து பார்க்க முடியுமா?

மாநிலங்கள் ஊரடங்குகளை அமல்படுத்துவது தொடர்பாக மத்திய அரசு வழிகாட்டி வருகிறது. ஊரடங்கில் மாநிலங்கள் தளர்வு அளித்த போதும் மத்திய அரசு வழிகாட்டுகிறது. தடுப்பூசிகள் பற்றாக்குறை விரைவில் முடிவுக்கு வரும். தடுப்பூசி கொள்கையை, மாநிலங்களுக்கு ஏற்கனவே வகுத்தளித்துள்ளோம். மாநிலங்களின் தடுப்பூசி தேவையை அறிந்திருக்கிறோம். அதனை பூர்த்தி செய்வோம். தடுப்பூசி கொள்கையில் தளர்வு வேண்டும் என மாநில அரசுகள் கோரிக்கை வைத்துள்ளன. அதனை மத்திய அரசு ஏற்று கொண்டு உள்ளது. நாங்கள் ஏன் தடுப்பூசியை தயாரிக்கவில்லை என மாநிலங்கள் கேள்வி எழுப்புகின்றன. மத்திய அரசு, தடுப்பூசி விஷயத்தில் மாநிலங்களுக்கு வகுத்துள்ள விதிகளின் படியே தொடர்ந்து செயல்படுகிறது.
அரசியல் செய்கிறார்கள்
தடுப்பூசி இயக்கம் தொடர்பாக சிலர் அரசியல் செய்கிறார்கள் அது கண்டனத்திற்குரியது. தடுப்பூசி கொள்கை தொடர்பாக பல்வேறு கேள்விகள் வைக்கப்படுகின்றன.கேள்வி எழுப்பபவர்கள் ஒன்றும் தெரியாதவர்கள். அவர்களிடம் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். நமது குடிமக்கள் பாதிக்கப்படக்கூடாது என்பது எங்களது விருப்பம். ஒவ்வொரு குடிமகனின் பாதுகாப்பும் முக்கியம். அதில், சமரசமில்லை.
மே மாதம் முதல் தடுப்பூசி கொள்கையில் மாநிலங்களுக்கு சுதந்திரம் அளிக்கப்பட்டுள்ளது. தடுப்பூசி வினியோகத்தில் இனி மத்திய அரசே முடிவெடுக்கும். தடுப்பூசி வினியோகத்தை மத்திய அரசே முழுமையாக நடத்தும். மாநிலங்களின் கோரிக்கையை ஏற்று அனைத்து மாநிலங்களுக்கும் தடுப்பூசிகள் இலவசமாக வழங்கப்படும். மாநிலங்கள் இனிமேல் தடுப்பூசிக்கு செலவு செய்ய தேவையில்லை.
ஜூன் 21-ல் இருந்து 18 மற்றும் அதற்கு மேல் உள்ள வயதினருக்கான இலவச தடுப்பூசிகளை மாநிலங்களுக்கு மத்திய அரசு வழங்கும்.25 சதவீத தடுப்பூசிகளை தனியார் மருத்துவமனைகள் வாங்கிக் கொள்ளலாம்.
தடுப்பூசி திட்டத்திற்காக 75 சதவீத தடுப்பூசியை மத்திய அரசு கொள்முதல் செய்யும். மாநில அரசுகளின் 25 சதவீத பங்கையும் மத்திய அரசே ஏற்கும். . 75 சதவீதத்தை மாநிலங்களுக்கு மத்திய அரசு இலவசமாக வழங்கும்.தடுப்பூசிக்காக, எந்த மாநில அரசும் எதுவும் செலவழிக்க வேண்டாம். நாட்டு மக்கள் அனைவருக்கும் மத்திய அரசு இலவச தடுப்பூசி வழங்கும்.
நாட்டு மக்கள் அனைவருக்கும் அரசு இலவசமாக தடுப்பூசி செலுத்தினாலும், கட்டணம் செலுத்தி போட்டு கொள்ள விரும்புவோர் தனியார் மருத்துவமனைகளில் தடுப்பூசி செலுத்திக் கொள்ளலாம்.ஏழைகள், நடுத்தர மற்றும் மத்திய தர மக்கள் அனைவருக்கும் இலவசமாக தடுப்பூசி போடப்படும். அனைவருக்கும் தடுப்பூசி கிடைக்க தடுப்பூசி இயக்கத்தை விரைவுபடுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.
பெருந்தொற்று இன்னும் முடிந்துவிடவில்லை. நமது மொத்த சக்தியையும் பயன்படுத்தி கோவிட்டிற்கு எதிராக நாம் போராட வேண்டும். வைரசை நாம் கட்டாயம் வெல்வோம் என்ற நம்பிக்கை உள்ளது. கோவிட் தடுப்பூசிகள் தொடர்பாக விழிப்புணர்வை பரப்பும்படி நாட்டு மக்களை நான் வலியுறுத்துகிறேன். நாம் நமது பாதுகாப்பை கைவிட முடியாது.
தடுப்பூசிக்கான விலை நிர்ணயம் செய்யப்பட்ட பிறகு, ஒரு டோசுக்கு ரூ. 150ஐ அதிகபட்ச சேவை கட்டணமாக தனியார் மருத்துவமனைகள் விதிக்க முடியும். அதனை கண்காணிக்கும் பணி மாநில அரசுகளிடம் ஒப்படைக்கப்படும்.இவ்வாறு அவர் பேசினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE