சென்னை: பொதுமக்களிடம் அதிக கட்டணம் வசூலித்து லாபம் அடைய நினைக்கும் மருத்துவமனைகளின் உரிமத்தை ரத்து செய்யவும் அரசு தயங்காது என தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் எச்சரித்துள்ளார்.
இது தொடர்பாக மா.சுப்பிரமணியன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: சில நோயாளிகளின் உயிர் இழக்க நேரிடும்போது மருத்துவமனைகளில் பணியாற்றிவரும் மருத்துவர்கள் மற்றும் பிற பணியாளர்களை அந்நோயாளிகளின் உறவினர்கள் தாக்கியுள்ள சம்பவங்கள் சில இடங்களில் நடந்துள்ளது. மருத்துவமனைகளில் உயிரைக் காப்பாற்ற அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டாலும், சில தருணங்களில் உயிரிழப்பு தவிர்க்க இயலாததாகிறது.

இச்சூழலில் உணர்ச்சிவசப்பட்டு மருத்துவர்களிடமும், மருத்துவமனைப் பணியாளர்களிடமும் தரக்குறைவாக நடந்துக்கொள்வது அவர்கள் ஆற்றிவரும் சேவையை இழிவுபடுத்துவதாக அமையும். இத்தகைய செயல்களை தமிழக அரசு ஒருபோதும் அனுமதிக்காது. இச்செயல்களில் ஈடுபடுபவர்கள்மீது காவல்துறை மூலமாக கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
சில மருத்துவமனைகள் இப்பேரிடர் சூழலைத் தவறாகப் பயன்படுத்திக்கொண்டு நோயாளிகளிடம் அதிகக் கட்டணம் வசூலிப்பதாகவும், காப்பீட்டுத்திட்டப் பயனாளிகளுக்கு இலவசமாக சிகிச்சை அளிக்காமல் அவர்களிடம் கட்டணம் கேட்பதாகவும் சில செய்திகள் வந்துள்ளன.
மருத்துவமனைகளையும், மருத்துவர்களையும் பாதிக்காது அவர்களின் நற்பணி தொடர்ந்திட உறுதுணையாக இருக்கக்கூடிய அதேநேரத்தில், பொதுமக்களிடம் அதிகக் கட்டணம் கோரி லாபம் அடைய நினைக்கும் மருத்துவமனைகள் மீதும், மருத்துவர்கள் மீதும் நடவடிக்கை எடுப்பதற்கும் தமிழக அரசு தயங்காது.
தமிழ்நாடு மருத்துவ நிறுவனங்கள் (முறைப்படுத்துதல்) சட்டத்தின்படி இந்த மருத்துவமனைகளின் உரிமம் ரத்து செய்யப்படுவதோடு சம்பந்தப்பட்டவர்கள் மீதும் சட்டபூர்வமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்பதை முதல்வர் வழிகாட்டுதலின்படி தெரிவித்துக்கொள்கிறேன். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.