இட்டாநகர்: அருணாச்சல் பிரதேச மாநிலம் சுபன்சிரி மாவட்டத்தில் உள்ள சிறிய மலைக் கிராமம் யலாலி. இங்கு மொத்தம் 12,000 பேர் மட்டுமே வசிக்கின்றனர். இவர்களில் 1,400 பேர் 45 வயதை கடந்தவர்கள்.
கோவிட் பரவலை தடுப்பதற்காக 45 வயதை கடந்தவர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணிகள் தொடங்கப்பட்ட போது, இந்த கிராம மக்கள் பெரும்பாலானோர் இதில் ஆர்வம் காட்டவில்லை. மேலும், தடுப்பூசி தொடர்பாக பரவிய வதந்திகளாலும் தடுப்பூசி செலுத்தும் பணி தொய்வுற்றது.

இதையடுத்து, வீடு வீடாக சென்று மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி தடுப்பூசி செலுத்தும் பணிகளை கிராம நிர்வாகம் மேற்கொண்டது. இதன் விளைவாக, அவர்களில் 84 சதவீதம் பேருக்கு தற்போது தடுப்பூசி செலுத்தப்பட்டது. ஆனால், 209 பேர் மட்டும் இன்னும் தடுப்பூசி செலுத்தாமல் இருந்தனர்.
இந்நிலையில், இதற்கு தீர்வு காணும் விதமாக, யலாலி வட்டாட்சியர் டாஷி வாங்சூ, ஜூன் 7 முதல் 9ம் தேதி வரை தடுப்பூசி செலுத்திக் கொள்வோருக்கு 20 கிலோ அரிசி இலவசமாக வழங்கப்படும் என, அறிவித்தார். இந்த அறிவிப்புக்கு அந்த கிராம மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்தது. நீண்ட வரிசையில் நின்று அந்த கிராம மக்கள் தடுப்பூசி செலுத்தினர். 45 வயதை கடந்தவர்கள் மட்டுமின்றி 18 வயதுக்கு மேற்பட்டோரும் தற்போது ஆர்வத்துடன் தடுப்பூசி செலுத்திக் கொள்வதாகவும் கூறப்படுகிறது.

வட்டாட்சியர் டாஷி வாங்சூ கூறுகையில், 'தடுப்பூசி செலுத்திக் கொண்டால் 2 ஆண்டுகளில் உயிரிழப்பு ஏற்படும் என கிராம மக்கள் உறுதியாக நம்பினர். அதுமட்டுமின்றி, சில நாட்கள் மதுபானம் அருந்தக் கூடாது என்பதால், தடுப்பூசி செலுத்த பல ஆண்கள் முன்வரவில்லை. எனவே 20 கிலோ அரிசியை இலவசமாக வழங்கும் திட்டத்தை அறிவித்தேன். அனைவரும் தடுப்பூசி செலுத்திக் கொண்டனர். 20 கிலோ அரிசி வாங்கும் செலவை சில செல்வந்தர்கள் ஏற்றுக்கொண்டதால் இது சாத்திய மாயிற்று' என்றார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE