ஜெனிவா: ஐ.நா. பொதுச் செயலர் பதவிக்கு அன்டோனியோ குட்டெரெஸ் பெயரை ஐ.நா., பாதுகாப்பு கவுன்சில், மீண்டும் பரிந்துரைத்து உள்ளது.
ஐ.நா.,வின் 9வது பொதுச் செயலராக இருக்கும் அன்டோனியோ குட்டெரெஸ் கடந்த 2017 ஜனவரி 1 முதல் 5 ஆண்டுகளாக அந்தப் பதவியில் இருந்து வருகிறார். அவரது பதவிக் காலம் வரும் டிசம்பர் 31ம் தேதியுடன் நிறைவடைகிறது. ஐ.நா., பொதுச் செயலர் நியமனம், ஐ.நா., பாதுகாப்பு கவுன்சில் பரிந்துரையின்பேரில் ஐ.நா., பொதுச் சபையால் மேற்கொள்ளப்படுகிறது.

இந்நிலையில், 15 உறுப்பு நாடுகளைக் கொண்ட ஐ.நா., பாதுகாப்பு கவுன்சிலின் கூட்டம் நேற்று (ஜூன் 8) நடைபெற்றது. அதில், தற்போது ஐ.நா., பொதுச் செயலராக உள்ள குட்டெரெஸ் பெயர், ஐ.நா., பொதுச் செயலர் பதவிக்கு பரிந்துரைக்கும் தீர்மானம் ஒரு மனதாக நிறைவேறியது. அடுத்து இந்தத் தீர்மானம் ஐ.நா., பொதுச் சபையில் சமர்ப்பிக்கப்பட உள்ளது.

இந்தியா வரவேற்பு
ஐ.நா.,வுக்கான இந்திய தூதர் டி.எஸ்.திருமூர்த்தி தனது டுவிட்டர் பக்கத்தில், 'ஐ.நா., பொதுச் செயலர் பதவிக்கு 2வது முறையாக அன்டோனியோ குட்டெரெஸ் பெயரை பரிந்துரைத்து ஐ.நா., பாதுகாப்பு கவுன்சில் நிறைவேற்றிய தீர்மானத்தை இந்தியா வரவேற்கிறது' எனப் பதிவிட்டுள்ளார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE