இன்றைய ‛கிரைம் ரவுண்ட் அப்'

Updated : ஜூன் 10, 2021 | Added : ஜூன் 10, 2021
Share
Advertisement
இந்திய நிகழ்வுகள்கான்பூர் அருகே பேருந்து கவிழ்ந்து 17 பேர் பலிகான்பூர்: உத்தர பிரதேசத்தில் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், 17 பேர் உயிரிழந்தனர். அவர்களின் குடும்பத்திற்கு பிரதமர் மோடி, ரூ.2 லட்சம் நிவாரணம் வழங்குவதாக அறிவித்துள்ளார்.உத்தர பிரதேச மாநிலம் கான்பூர் அருகே நேற்றிரவு (ஜூன் 8) பேருந்து ஒன்று, லக்னோவில் இருந்து டில்லி நோக்கி
today, crime, round up, இன்றைய கிரைம், ரவுண்ட் அப்


இந்திய நிகழ்வுகள்latest tamil news


கான்பூர் அருகே பேருந்து கவிழ்ந்து 17 பேர் பலி
கான்பூர்: உத்தர பிரதேசத்தில் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், 17 பேர் உயிரிழந்தனர். அவர்களின் குடும்பத்திற்கு பிரதமர் மோடி, ரூ.2 லட்சம் நிவாரணம் வழங்குவதாக அறிவித்துள்ளார்.
உத்தர பிரதேச மாநிலம் கான்பூர் அருகே நேற்றிரவு (ஜூன் 8) பேருந்து ஒன்று, லக்னோவில் இருந்து டில்லி நோக்கி சென்றுக்கொண்டிருந்தது. அப்போது சச்சேந்தி என்ற பகுதியில் லோடு ஏற்றும் ஜே.சி.பி., வாகனத்தின் மீது வேகமாக வந்து மோதி விபத்துக்குள்ளானது. இதில் பேருந்து கவிழ்ந்தது. இந்த பயங்கர விபத்தில் பேருந்தில் பயணித்த 17 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர், 5 பேர் படுகாயம் அடைந்தனர். விபத்தில் காயம் அடைந்தவர்கள் தற்போது ஹல்லேட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

.விமான கடத்தல் மிரட்டல்

போபால்: மத்திய பிரதேசத்தின் போபால் விமான நிலைய அதிகாரிகளை, நேற்று முன்தினம் தொலைபேசியில் தொடர்பு கொண்ட மர்ம நபர், போபால் மற்றும் இந்துாரில் இருந்து விமானங்களை, பாகிஸ்தானுக்கு கடத்துவதாக மிரட்டல் விடுத்தார். புகாரின் பேரில் மிரட்டல் விடுத்த, 34 வயது நபரை சுஜல்பூரில் கைது செய்த போலீசார், விசாரணையை தொடர்கின்றனர்


தமிழக நிகழ்வுகள்

மின்சாரம் தாக்கி ஊழியர் பலி

செங்கல்பட்டு-திருக்கழுக்குன்றம் அடுத்த, ஈச்சங்கரணை டாக்டர் அம்பேத்கர் தெருவைச் சேர்ந்த ஏழுமலை மகன் பாபு, 46. அஞ்சூர் மின்பகிர்மானத்தில், மின் வாரிய ஒயர் மேனாக பணிபுரிந்தார்.செங்கல்பட்டு அடுத்த, பட்டரவாக்கம் கிராமத்தில், மின்மாற்றியில் ஏற்பட்ட பழுதை நீக்க, நேற்று, பாபு ஈடுபட்டார். அப்போது, அவர்மீது, மின்சாரம் பாய்ந்தது. இதில், படுகாயமடைந்த அவர், அதே இடத்திலேயே இறந்தார். செங்கல்பட்டு போலீசார், சடலத்தை மீட்டு விசாரிக்கின்றனர்.

பள்ளியை திறக்க சொல்லி சிறுவன் போராட்டம்

மாமல்லபுரம்-மாமல்லபுரம் அரசு பள்ளி சிறுவன், பள்ளியை திறக்க கோரி, பள்ளி வாசல் முன் நின்று அடம் பிடித்தான்.மாமல்லபுரத்தைச் சேர்ந்த தம்பதி மதியழகன் - லட்சுமி ஆகியோரின் இளையமகன் நிதின்ராஜ், 5. மாமல்லபுரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில், முதல் வகுப்பில், கடந்த ஆண்டு சேர்க்கப்பட்டார்.கொரோனா தொற்று பரவல் சூழலில், பள்ளிகள் ஓராண்டிற்கும் மேலாக திறக்கப்படவில்லை.இந்நிலையில், தன்னை பள்ளிக்கு அழைத்துச் செல்ல, பெற்றோரிடம் சில நாட்களாக வற்புறுத்தியுள்ளான். பள்ளி துவக்காதது குறித்து அவர்கள் கூறியும், சிறுவன் கேட்கவில்லை.இந்நிலையில், நேற்று முன்தினம் காலை பெற்றோரை எதிர்பார்க்காமல், சகோதரனின் சீருடையை அணிந்து, புத்தக பை சுமந்து, வீட்டிற்கு அருகில் உள்ள பள்ளிக்கு புறப்பட்டான்.பெற்றோர் தடுத்தும் அடம்பிடித்து, விறுவிறுவென நடந்து பள்ளிக்கு சென்றான். பள்ளி நுழைவாயிலில் நின்று, பள்ளியை திறக்குமாறு, அழுகையுடன் கதவை தட்டினான். அவ்வழியே சென்றோர், சிறுவன் ஆர்வம் கண்டு வியந்தனர்.

பாதுகாப்பு படை வீரர் என்று சொல்லி ஆன்லைனில் மோசடி

வடபழநி-மத்திய தொழில் பாதுகாப்பு படைவீரர் எனக் கூறி, வீட்டு உபயோக பொருள் விற்பனையாளரிடம் பண மோசடியில் ஈடுபட்ட நபர் குறித்து, போலீசார் விசாரிக்கின்றனர்.விருகம்பாக்கத்தில் உள்ள, வீட்டு உபயோக பொருட்கள் விற்பனை கடையில், கிளை மேலாளராக பணிபுரிந்து வருபவர் மணிகண்டன், 35.இவரை மொபைல் போனில் தொடர்பு கொண்ட ஒருவர், தான், மத்திய தொழில் பாதுகாப்புப்படை அலுவலகத்தில் பணிபுரிந்து வருவதாகவும், தனக்கு புதிய, 'டிவி' வேண்டும் எனவும் தெரிவித்தார்.அண்ணாநகரில் உள்ள தன் வீட்டில், 'டிவி'யை, 'டெலிவரி' செய்யும் படி கூறிய அவர், ஆன்லைன் செயலி மூலம் பணம் அனுப்பி விடுவதாக கூறினார்.நம்பிக்கை வர வேண்டும் என்பதற்காக, அடையாள அட்டை ஒன்றையும், 'வாட்ஸ் ஆப்' செயலியில் அனுப்பினார்.பின், மணிகண்டனின் எண்ணிற்கு பணம் அனுப்புவதாக கூறி முதலில், 5 ரூபாய் அனுப்பச் சொல்லியுள்ளார். மீண்டும், 5,000 ஆயிரம் அனுப்ப சொன்னதால், மணிகண்டனும் நம்பி அனுப்பியுள்ளார். சிறிது நேரத்தில் மணிகண்டனின் வங்கி கணக்கில் இருந்து மொத்தம், 66 ஆயிரம் ரூபாய் பணம் எடுக்கப்பட்டதாக குறுஞ்செய்தி வந்துள்ளது.இதையடுத்து மத்திய தொழிற்படை வீரர் என, அறிமுகம் செய்த நபரின் மொபைல் எண்ணை தொடர்பு கொண்ட போது, 'சுவிட்ச் ஆப்' செய்யப்பட்டிருந்தது தெரியவந்தது.அதிர்ச்சி அடைந்த மணிகண்டன், இதுகுறித்து, வடபழநி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்படி, போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

அரசின் விதிமுறையை பின்பற்றாத தனியார் மருத்துவமனைக்கு பூட்டு

கடலுார்-கடலுாரில் கொரோனா அரசு வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றாத தனியார் மருத்துவமனைக்கு அதிகாரிகள் பூட்டு போட்டு நடவடிக்கை எடுத்தனர்.கடலுார் திருப்பாதிரிபுலியூர் வண்டிப்பாளையம் ரோட்டில் செயல்படும் தனியார் மருத்துவமனையில், அரசு அனுமதியுடன் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. செலவுகள் குறைவு என்பதால் அதிகளவில் கொரோனா நோயாளிகள் சிகிச்சை பெற்று வந்தனர். இந்நிலையில், கொரோனா சிகிச்சை அளிப்பது, தனிமைப்படுத்துதல் உள்ளிட்ட விபரங்கள் அரசுக்கு தெரிவிப்பதில்லை என்ற புகார் எழுந்தது. இதையடுத்து, நலப்பணிகள் இணை இயக்குனர் ரமேஷ்பாபு, தாசில்தார் பலராமன் ஆகியோர் திடீரென மருத்துவமனையில் நேற்று ஆய்வு மேற்கொண்டனர்.அப்போது அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றாதது தெரிந்தது. உடனே அந்த மருத்துவ மனையை பூட்டினர். அப்போது மருத்துவ மனையில் உள்நோயாளிகள் யாரும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மருந்து கடைக்கு சீல்

ரிஷிவந்தியம்-ரிஷிவந்தியத்தில் மருத்துவம் பார்த்ததாக மருந்து கடைக்கு அதிகாரிகள் 'சீல்' வைத்தனர்.கள்ளக்குறிச்சி மாவட்ட சுகாதாரப் பணிகள் துணை இயக்குனர் சதீஷ்குமார், ரிஷிவந்தியம் வழியாக சென்றார். அப்போது, ரிஷிவந்தியம் கடைவீதியில் உள்ள ராம் மெடிக்கல்சில் கடையில் அதிகளவு பொதுமக்கள் இருப்பதைப் பார்த்து கடையில் சோதனை செய்தார்.அதில், கடை உரிமையாளர் ராதாகிருஷ்ணன் டி.பார்ம் படித்து விட்டு, பொதுமக்களுக்கு மருத்துவ சிகிச்சை அளித்தது தெரியவந்தது.இது குறித்து ரிஷிவந்தியம் சுகாதாரத் துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்து விசாரணை நடத்தும்படி கூறிவிட்டு சென்றார்.ரிஷிவந்தியம் வட்டார மருத்துவ அலுவலர் ஜெயபாலன், மருத்துவர் கோகுல், சுகாதார மேற்பார்வையாளர் ஜெயபால், சுகாதார ஆய்வாளர் தெய்வீகன் ஆகியோர் அங்கு வருவதற்குள், ராதாகிருஷ்ணன் கடையை மூடிவிட்டு சென்று விட்டார்.இருப்பினும், சுகாதாரத் துறையினர் மெடிக்கல் கடைக்கு 'சீல்' வைத்து, மூன்று நாட்களுக்குள் விளக்கம் அளிக்குமாறு நோட்டீஸ் ஒட்டிச் சென்றனர்.


latest tamil news
மாணவியருக்கு பாலியல் தொல்லை ஆசிரியர்களிடம் விசாரணை

சென்னை:பாலியல் குற்றச்சாட்டு தொடர்பாக, கேந்திரிய வித்யாலயா பள்ளி முதல்வர் மற்றும் ஆசிரியரிடம், குழந்தைகள் உரிமை பாதுகாப்பு கமிஷன் நிர்வாகிகள், ஆறு மணி நேரம் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர்.

சென்னை அடையாறு பகுதியில், மத்திய அரசின் கேந்திரிய வித்யாலயா பள்ளி செயல்படுகிறது. இப்பள்ளியின், இந்நாள் மற்றும் முன்னாள் மாணவியர், தங்களுக்கு பாலியல் தொல்லை கொடுக்கப்பட்டது தொடர்பாக, சமூக வலைதளத்தில் தகவல் வெளியிட்டனர். சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள மாநில குழந்தைகள் உரிமை மற்றும் பாதுகாப்பு கமிஷனில் புகார் அளித்தனர்.

இது குறித்து, கமிஷன் நிர்வாகிகள் விசாரித்தனர்.பாலியல் குற்றச்சாட்டு தொடர்பாக விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என, அடையாறு கேந்திரிய வித்யாலயா பள்ளி முதல்வர் ராம்பிரசாத், ஹிந்தி ஆசிரியர் மகேந்திர குமார் ஆகியோருக்கு 'சம்மன்' அனுப்பினர்.இதையடுத்து இருவரும், நேற்று காலை 10:30 மணிக்கு ஆஜராகினர்.

இவர்களிடம், ஆறு மணி நேரம் குழந்தைகள் உரிமை பாதுகாப்பு கமிஷன் தலைவர் சரஸ்வதி ரங்கசாமி மற்றும் உறுப்பினர் சரண்யா ஜெயகுமார் உள்ளிட் டோர் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர்.அவற்றை வாக்குமூல மாகவும் பதிவு செய்தனர். அதேபோல, புகார்தாரரிடமும் மிகவும் ரகசியமாக விசாரணை நடத்தப்பட்டுள்ளது.

கொரோனாவுக்கு நோயாளி பலி: சிகிச்சை வழங்கிய டாக்டரை தாக்கிய உறவினர்கள்

கோவை:கோவை அருகே கொரோனா நோயாளி இறந்ததால், டாக்டரை உறவினர்கள் தாக்கினர். இது தொடர்பாக, ஒருவர் கைது செய்யப்பட்டார்.

கோவை, விசுவாசபுரத்தை சேர்ந்தவர் விவேக், 31. இவருக்கு கொரோனா தொற்று உறுதியாகி, மே 30ம் தேதி கீரணத்தத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.கடந்த, 6ம் தேதி அவரது உடல்நிலை மோசமானதை அடுத்து, டாக்டர்கள், மற்றொரு தனியார் மருத்துவ மனைக்கு கொண்டு செல்லும்படி கூறியுள்ளனர். விவேக்கை, கோவை இ.எஸ்.ஐ., மருத்துவமனையில், உறவினர்கள் சேர்த்தனர்.அன்று இரவே விவேக் இறந்தார்.

இதையடுத்து உறவினர்கள், சிகிச்சையளித்த தனியார் மருத்துவமனைக்கு சென்று, வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். டாக்டர் சாரநாத் என்பவரை சிலர் தாக்கினர். இது குறித்து, மருத்துவமனை நிர்வாகம் புகார் அளித்தது. கோவில்பாளையம் போலீசார், ஜான் ஐசக், 35, என்பவரை கைது செய்தனர்.


உலக நிகழ்வுகள்

10 ஊழியர்கள் சுட்டுக்கொலை

காபூல்: தெற்காசிய நாடான ஆப்கானிஸ்தானின் பாக்லான் மர்காஸி மாவட்டத்தில், 'ஹாலோ' என்ற அறக்கட்டளை இயங்கி வருகிறது. இதன் ஊழியர்கள், போரினால் கைவிடப்பட்ட கண்ணிவெடி போன்றவற்றை அப்புறப்படுத்தும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு, அறக்கட்டளையின் முகாமில் புகுந்து, ஆயுதம் ஏந்திய மர்ம நபர்கள் சிலர், துப்பாக்கிச்சூடு தாக்குதல் நடத்தினர். இதில், ஹாலோ ஊழியர்கள், 10 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்; 14 பேர் காயமடைந்தனர்

சிங்கப்பூரில் பெண் கைது

சிங்கப்பூர்: தென்கிழக்கு ஆசிய நாடான சிங்கப்பூரில், ரக்காயா ராம்லி, 34, என்ற பெண், வசித்து வருகிறார். முன்னாள் மத ஆசிரியரான இவர், 'ஆன்லைன்' வாயிலாக, ஐ.எஸ்., பயங்கரவாத அமைப்பின் ஆதரவாளர்களுடன், கலந்துரையாடி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இந்நிலையில், ஐ.எஸ்.ஏ., எனப்படும் உள்நாட்டு பாதுகாப்பு சட்டத்தின்கீழ், அவரை போலீசார் நேற்று கைது செய்துள்ளனர். இவரது கணவர் மொகமது பிர்தாஸ் ஏற்கனவே கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது

Advertisement
வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X