கண்டவராயன்பட்டி : திருப்புத்துார் அருகே சிறு கூடல்பட்டியில் இயற்கை முறையில் நெல், வாழை சாகுபடி செய்வதோடு,ஆண்டுக்கு 15 டன் விதை நெல் விளைவித்து சாதித்து வருகிறார் விவசாயி பழனியப்பன்.
சிறுகூடல்பட்டியைச் சேர்ந்தவர் பழனியப்பன் 68.பி.யு.சி.படித்தவர். சில ஆண்டுகளுக்கு முன் மாவட்டத்தின் சிறந்த விவசாயியாக தேர்வு பெற்றவர். 10 ஏக்கர் நிலத்தில் இயற்கை முறை விவசாயத்தில் இதைச் சாதித்துள்ளார்.இவர் 1983 ல் நெல், கடலை, கரும்பு பயிரிட்டு நல்ல மகசூல், நல்ல விலை கிடைக்காமல் தவித்துள்ளார். அப்போது இயற்கை விவசாயி நம்மாழ்வார் குறித்து அறிந்து, அவர் வழிமுறைகளால் இயற்கை விவசாயத்திற்கு மாறியுள்ளார்.
இயற்கை முறை விவசாய சாகுபடியில் இவர் நெல், வாழை, காய்கறி உற்பத்தியில் சாதிப்பதைப் பார்த்து வேளாண்துறையினர் விதை நெல் உற்பத்தியை இவரிடம் அளித்துள்ளனர். அதில் ஆண்டு தோறும் 10 ஏக்கரில் 15 டன் விதை நெல் உற்பத்தி செய்து கொடுக்கிறார். இத்துடன் வாழை பயிரிட்டு ஆண்டு தோறும் இலை, காய் விற்பனையும் செய்கிறார். மேலும் கூட்டுப் பண்ணைய முயற்சியாக பசுக்கள், கோழி வளர்ப்பிலும் வருவாய் ஈட்டி வருகிறார்.
பழனியப்பன் கூறுகையில், 'இயற்கைக்கு மாற விரும்பும் விவசாயிகள் முதல் இரண்டு ஆண்டு மண்ணைப் பக்குவப்படுத்த கஷ்டப்பட்டு ஆக வேண்டும். புரட்டாசி மாதம் நடப்புக்கு,ஆடி மாதம் புழுதி என இரு முறை உழவு ஓட்ட வேண்டும். பகந்தாள் விதைத்து 40 நாள் பயிராக வளர்க்கணும். பசுந்தாள் விதைத்த 15வது நாளில் நாற்றங்காலில் விதைக்கணும். பின்னர் உழுது மடக்க வேண்டும்.
வறட்சியான பகுதிகளில் சனப்பு பசுந்தாள் விளையும். மழை பெய்யும் போது மடக்கி உழுதால் போதும். நாற்று நடவுக்கு 15 நாள் கழித்து பஞ்ச காவ்யா போட்டால் போதும். வரப்பு உயர தண்ணீர் தேவை இல்லை. ஒரு அங்குலம் நீர் பாய்ச்சினால் போதும்,என்கிறார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE