சேலம்: 'மாம்பழ சின்னம் பொறித்த டோக்கனுடன், வீட்டுக்கோ, அலுவலகத்துக்கோ வந்து, 2,000 ரூபாய் பெற்றுக்கொள்ளலாம்' என, பா.ம.க., எம்.எல்.ஏ., அருள் கூறியதாக, சமூக வலைதளத்தில் வெளியான நோட்டீஸ் குறித்து போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் மனு கொடுக்கப்பட்டுள்ளது.
சமூக வலைதளங்களில், பா.ம.க., தலைவர்கள், முன்னாள் முதல்வர் பழனிசாமி ஆகியோரின் படங்களுடன், சேலம் மேற்கு தொகுதி, பா.ம.க., எம்.எல்.ஏ., அருள் கும்பிடுவது போன்ற படத்துடன் கூடிய நோட்டீஸ் நேற்று முன்தினம் வெளியானது. அதில், 'சேலம் மேற்கு சட்டமன்ற தொகுதி மக்களுக்கு முக்கிய அறிவிப்பு, பா.ம.க.,வின் மாம்பழம் சின்னம் பொறித்த டோக்கனுக்கு ரூ 2,000 வழங்கப்படுகிறது. மாம்பழம் சின்னம் பொறித்த டோக்கனை வைத்திருக்கும் நபர்கள் என் வீட்டிற்கோ அல்லது அலுவலகத்திற்கோ நேரில் வந்து கொடுத்து விட்டு, மளிகை பொருட்கள் வாங்க ரூ.2,000 பெற்றுக் கொள்ளலாம். பணம் வாங்க வருவோர்கள் கண்டிப்பாக வாக்காளர் அடையாள அட்டை கொண்டு வர வேண்டும் என குறிப்பிடப்பட்டிருந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த அருள், நேற்று சேலம் போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் அளித்த புகார் மனு அளித்தார். புகாரில், 'டோக்கனோ, பணம் கொடுப்பதாகவோ எப்போதும் சொன்னதில்லை. என் வெற்றியை பொறுக்க முடியாதவர்கள், இதுபோன்ற பொய் பரப்புவதை வன்மையாக கண்டிக்கிறேன். என் பெயர், பதவி, என்னை தேர்ந்தெடுத்த வாக்காளர்களுக்கு அவமானம் ஏற்படுத்தும் செயலில் ஈடுபடுவோரை கண்டுபிடித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்' என குறிப்பிட்டுள்ளார். சேலம் மாநகர சைபர் கிரைம் போலீசார் விசாரிக்கின்றனர்.
எம்.எல்.ஏ., அருள் கூறியதாவது: நான் பப்ளிசிட்டிக்கு இதுபோன்ற செயலில் ஈடுபடவில்லை. தினமும் மக்களை சந்தித்து, குறைகளை கேட்டு நிவர்த்தி செய்கிறேன். இதை சவாலாக கூற முடியும். என் புகார் மீது நியாயமாக விசாரித்து, குற்றவாளிகள் கைது செய்யப்பட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE