சென்னை:'ஓமந்துாரார் அரசு பல்நோக்கு மருத்துவமனையை, அங்கிருந்து, கிங்ஸ் மருத்துவ வளாகத்திற்கு மாற்றுவது ஏற்கக் கூடியதல்ல' என, அ.தி.மு.க., ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம்., வலியுறுத்தி உள்ளார்.
அவரது அறிக்கை:தமிழகத்தில் உள்ள அனைத்து தரப்பு மக்களும், தரமான உயரிய சிகிச்சையை, இலவசமாக பெற, சென்னை, அண்ணா சாலையில் அமைந்துள்ள, ஓமந்துாரார் அரசினர் தோட்டத்தில், பல்துறை உயர் சிறப்பு மருத்துவமனையை, ஜெயலலிதா உருவாக்கினார். அத்துடன் மருத்துவ கல்லுாரியையும் ஏற்படுத்தினார்.
ஜெயலலிதா, 2011ல் முதல்வராக பொறுப்பேற்றதும், ஓமந்துாரார் கட்டடம், சட்டசபை மற்றும் அனைத்து துறை அலுவலகங்கள் செயல்பட போதுமானதாக இல்லை என்பதால், அந்த கட்டடத்தில் பல்துறை உயர் சிறப்பு மருத்துவமனை மற்றும் அரசு மருத்துவ கல்லுாரியை உருவாக்கினார். இது, மக்கள் நலன் கருதி எடுக்கப்பட்ட முடிவு.இந்த சூழ்நிலையில், 'கிண்டியில் உள்ள கிங்ஸ் ஆய்வக வளாகத்தில், 250 கோடி ரூபாயில், பல்நோக்கு மருத்துவ மனை அமைக்கப்படும்' என, முதல்வர் அறிவித்தார்.
மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் ஆய்வு செய்ததைத் தொடர்ந்து, ஓமந்துாரார் அரசு பல்நோக்கு மருத்துவமனை, கிண்டிக்கு மாற்றப்பட இருப்பதாகவும், அந்த கட்டடம் மீண்டும் சட்டசபையாகவோ அல்லது சட்ட மேல்சபையாகவோ மாற்றி அமைக்கப்படும் என, செய்திகள் வருகின்றன.இது, மிகவும் வருத்தத்தை அளிக்கிறது.
அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக, இதுபோன்ற நடவடிக்கை எடுக்கப்படுகிறதோ என்ற சந்தேகம் எழுகிறது. புதிதாக, கிண்டி கிங்ஸ் மருத்துவ வளாகத்தில், புதிய பல்நோக்கு மருத்துவமனை அமைவதை வரவேற்கிறோம். அதே நேரம், ஓமந்துாரார் மருத்துவமனை, அங்கிருந்து மாற்றப்படுவது ஏற்கக்கூடியதல்ல; அதை கைவிட வேண்டும்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
பிரதமருக்கு கடிதம்!
'நீட்' தேர்வு உட்பட, அனைத்து பொது நுழைவு தேர்வுகளையும் ரத்து செய்யும்படி, பிரதமருக்கு பன்னீர்செல்வம்., கடிதம் எழுதி உள்ளார்.கடிதத்தில், அவர் கூறியிருப்பதாவது:தேசிய அளவில் கல்வி தரத்தில், தமிழகம் முதலிடத்தில் இருப்பதாக, மத்திய கல்வித்துறை அறிவித்துள்ளது. இந்த சூழ்நிலையில், தொழில்நுட்பக் கல்வி மற்றும் மருத்துவக் கல்வியின் மாணவர் சேர்க்கைக்கு, பொது நுழைவுத் தேர்வு நடத்துவது தேவையில்லை.
எனவே, 'நீட்' தேர்வு உட்பட, அனைத்து பொது நுழைவு தேர்வுகளையும், மத்திய அரசு ரத்து செய்யவேண்டும்.தமிழகத்தில், மேல்நிலை பள்ளியில் மாணவர்கள் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில், இந்த ஆண்டு அனைத்து உயர் கல்வியிலும் மாணவர்களை சேர்க்க, அனுமதி அளிக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
அறிவிப்பு தெரியாமல் அறிக்கை
நுழைவு தேர்வு ரத்து அறிவிப்பு வெளியான பின், அதை ரத்து செய்யக்கோரி, ஓ.பி.எஸ்., அறிக்கை வெளியிட்டது, கட்சியினரிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.தமிழகத்தில், பிளஸ் 1 மாணவர் சேர்க்கைக்கு, நுழைவு தேர்வு நடத்தப்படும் என, இம்மாதம் 8ம் தேதி பள்ளிக் கல்வித்துறை அறிவித்தது. பல்வேறு தரப்பினரின் எதிர்ப்பை தொடர்ந்து, நேற்று முன்தினம், தேர்வு நடத்தும் திட்டத்தை தமிழக அரசு வாபஸ் பெற்றது.
ஆனால், நேற்று காலை, 'நுழைவுத் தேர்வை ரத்து செய்ய வேண்டும். விண்ணப்பங்களுக்கு ஏற்ப, கூடுதல் இடங்களை உருவாக்க வேண்டும்' என, முதல்வருக்கு வேண்டுகோள் விடுத்து, ஓ.பி.எஸ்., அறிக்கை வெளியானது.நுழைவுத் தேர்வு ரத்து செய்தது தெரியாமல், ஓ.பி.எஸ்., அறிக்கை வெளியானது, கட்சியினர் உட்பட அனைத்து தரப்பினரிடமும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.நேற்று முன்தினம் ஓ.பி.எஸ்., வழங்கிய அறிக்கையை, காலதாமதமாக நேற்று வெளியிட்டுவிட்டனர் என, அவரது ஆதரவாளர்கள் தெரிவித்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE