ஆட்சி மாற்றம் ஏற்பட்டதை தொடர்ந்து, அதிகாரிகள் மாற்றம், பல மட்டத்திலும் நடந்து வருகிறது. சென்னை தலைமை செயலகத்தில், அதிகாரமிக்க மற்றும் வளமான பதவிகளுக்கு வர, தி.மு.க., ஆதரவு அலுவலர்கள் இடையே கடும் போட்டி ஏற்பட்டு உள்ளது. இதன் காரணமாக, அனைத்து துறைகளிலும் குடுமிப்பிடி நடப்பதாக, கோட்டை வட்டாரத்தில் பேசப்படுகிறது.
அரசுத்துறை செயலர்கள் சமீபத்தில் மாற்றப்பட்டனர். அ.தி.மு.க., ஆட்சியில் பசையான துறையில் இருந்தவர்களுக்கு, மீண்டும் வளமான துறைகள் ஒதுக்கப்பட்டு உள்ளன. கடந்த ஆட்சியில், அதிகாரமில்லாத 'டம்மி' துறைகளில் பணியாற்றியவர்கள், அதே துறையில் பணியாற்றுகின்றனர். இது, தி.மு.க., ஆதரவு அதிகாரிகளிடம் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.அதேபோல, அமைச்சர்களின் நேர்முக உதவியாளர்கள், அலுவலக உதவியாளர் பணிக்கு, ஊழியர்கள் இடையே கடும் போட்டி ஏற்பட்டுள்ளது. தற்போது, தற்காலிகமாக பொதுத்துறை சார்பில் நியமிக்கப்பட்ட ஊழியர்கள், அப்பணியில் உள்ளனர்.
அந்த இடங்களுக்கு வர, தி.மு.க., ஆதரவு அலுவலர்கள், அமைச்சர்களை சுற்றி வருகின்றனர். அலுவலக உதவியாளர், ஜூனியர் பி.ஏ., சீனியர் பி.ஏ., தட்டச்சர் என, அனைத்து பணிகளுக்கும் கடும் போட்டி நிலவுகிறது. பல அலுவலர்கள், பணி நியமன உத்தரவு வராமலே, அமைச்சர்களின் உதவியாளர்களாக பணியாற்றி வருகின்றனர்.
தடுமாற்றம்
ஒரு பதவிக்கு ஏராளமானோர் போட்டியிடுவதால், யாரை நியமிப்பது என்பதில் அமைச்சர்களும் தடுமாறி வருகின்றனர். இதே நிலை செய்தி தொடர்புத் துறையிலும் உள்ளது. கடந்த ஆட்சியில், முதல்வர் அலுவலகத்தில் பணியாற்றிய செய்தி தொடர்புத் துறை அதிகாரிகளுக்கு, இன்னமும் பணியிடம் ஒதுக்கப்படவில்லை. அவர்கள் இடத்தில், பணி நியமன உத்தரவு வராமலே, பலர் பணியாற்ற துவங்கினர். மேலும், தலைமை செயலகத்தில் உள்ள பணியிடங்களுக்கு வர, தி.மு.க., ஆதரவு அலுவலர்களிடம் கடும் போட்டி எழுந்துள்ளது.
அதிர்ச்சி
ஒவ்வொருவரும் ஒவ்வோர் அமைச்சரை சிபாரிசு செய்யும்படி கூற, செய்தித்துறை அமைச்சருக்கு யாரை நியமிப்பது என்ற குழப்பம் ஏற்பட்டுள்ளது. இதனால், துறை அலுவலர்கள் இடமாற்றம் இன்னமும் நடக்கவில்லை.அதேபோல, சட்டசபை செயலராக சீனிவாசன் உள்ளார். இவர், கடந்த ஆட்சியில் நியமிக்கப்பட்டவர். அவரை அகற்றி விட்டு அந்த பதவிக்கு வர, அந்த துறை துணை செயலர்கள் பலமாக முயற்சித்து வருகின்றனர்.ஒருவர், முதல்வர் அலுவலக செயலர் உதவியுடன், முதல்வர் மற்றும் அமைச்சர்களை சந்தித்து பேசி உள்ளார்.
இந்த தகவல் தெரிய வந்ததும், அவருக்கு ஆகாதவர்கள், புகார் மனுக்களை முதல்வருக்கு அனுப்பி வருகின்றனர்.இதே கதை தான், எல்லா துறைகளிலும் நடப்பதால், கோட்டை வட்டாரமே ஆடிப்போய் இருக்கிறது. இதற்கிடையில், பல்வேறு துறைகளில் அதிகாரம் மிகுந்த மற்றும் வருமானம் வரும் பதவிகளை பிடிக்க, தி.மு.க., ஆதரவு அலுவலர்களிடம் குடுமிப்பிடி சண்டை நடந்துவருகிறது. இது, நேர்மையான அலுவலர்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
பொதுப்பணித் துறையில் சர்ச்சை!
அமைச்சரின் உதவியாளர் நியமனம் தொடர்பாக, பொதுப்பணித் துறையில் சர்ச்சை ஏற்பட்டுள்ளது.பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சராக வேலு பொறுப்பேற்று, பணிகளை கவனித்து வருகிறார். நீர்வளத்துறை தனியாக பிரிக்கப்பட்டு விட்டதால், அனைத்து துறைகளின் கட்டட கட்டுமானங்கள், பராமரிப்பு உள்ளிட்ட பணிகளை மட்டுமே, பொதுப்பணித் துறை மேற்கொள்ள உள்ளது.அமைச்சர் வேலுவின் உதவியாளராக, அருப்புகோட்டையைச் சேர்ந்த செயற்பொறியாளர் செல்வராஜ் நியமிக்கப்பட்டுள்ளார். முதல்வர் ஸ்டாலின் ஒப்புதலுக்காக, இது தொடர்பான கோப்பு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது.
மதுரை, ராஜாஜி அரசு சிறப்பு மருத்துவமனையில் 2018ல், ஆக்சிஜன் படுக்கை வசதிகளை ஏற்படுத்துவதற்கான, குழாய்கள் அமைக்கும் பணி நடந்துள்ளது. இதில் முறைகேடு செய்ததாக செயற்பொறியாளர் செல்வராஜ், ஒப்பந்ததாரர் அகமது உள்ளிட்ட ஐந்து பேர் மீது புகார் எழுந்தது.
இது தொடர்பாக, ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு விசாரணை நடக்கிறது.
இதில் தொடர்புடைய கண்காணிப்பு பொறியாளர் மற்றும் மற்றொரு செயற்பொறியாளர் ஆகியோர் ஓய்வு பெறும் நாளில், 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டுள்ளனர்.செல்வராஜ் மீதான விசாரணை நிலுவையில் உள்ள நிலையில், அதிலிருந்து தப்புவதற்கான முயற்சிகளில் அவர் ஈடுபட்டு வந்தார். இந்த நிலையில், பொதுப்பணித் துறை அமைச்சரின் நேர்முக உதவியாளராக அவர் நியமிக்கப்பட்டது, சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
துறையில் பெரிய அளவில் அனுபவம் இல்லாத நிலையில், நன்கு தெலுங்கு பேசுவார் என்பதால், அவரை அமைச்சரின் நேர்முக உதவியாளராக நியமித்துள்ளதாக கூறப்படுகிறது. இப்பிரச்னையில் முதல்வர் ஸ்டாலின் தலைமையிட்டு, அனைத்து துறைகளின் அமைச்சர்களுக்கும் தகுதியான, திறமையான, நேர்மையானவர்களை, நேர்முக உதவியாளர்களாக நியமிக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. - நமது நிரு
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE