திருப்பூர்:''நிதி நெருக்கடியில் தவிக்கும், குறு, சிறு, நடுத்தர பின்னலாடை ஏற்றுமதி நிறுவனங்களுக்கு, மத்திய அரசு கைகொடுக்கவேண்டும்'' என, திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்க தலைவர் ராஜாசண்முகம், மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு அனுப்பியுள்ள கடிதம்:மத்திய நிதி அமைச்சரின், நிதி சார்ந்த பல்வேறு அறிவிப்புகள், ஏற்றுமதி ஆடை உற்பத்தி நிறுவனங்களுக்கு, வர்த்தகத்தை மேம்படுத்துவதற்கான ஊக்கத்தையும், உற்சாகத்தையும் அளித்துள்ளது.மூலப்பொருட்கள் விலை உயர்வு, ஜாப்ஒர்க் கட்டணங்கள் உயர்வால், சர்வதேச அளவில் போட்டி தன்மையை எதிர்கொள்வது, திருப்பூர் பின்னலாடை ஏற்றுமதி துறைக்கு சவால் நிறைந்ததாக மாறியுள்ளது; இதனால், தொழில் மிகவும் பாதிப்படைந்துள்ளது.கொரோனா இரண்டாவது அலை உருவாகியுள்ளதால், ஆடை உற்பத்தி துறையில் தொழிலாளர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதனால், வெளிநாட்டு வர்த்தகர் வழங்கிய ஆர்டர் மீது, ஆடை தயாரிப்பை பூர்த்தி செய்வதில் சிரமங்கள் ஏற்படுகிறது.கடந்த 2020ல் அறிவிக்கப்பட்ட அவசர கால கடன் திட்டம், திருப்பூரில் உள்ள குறு, சிறு, நடுத்தர பின்னலாடை ஏற்றுமதி ஆடை உற்பத்தி நிறுவனங்களுக்கு பெருமளவு கைகொடுத்தது. இந்த கடன் திட்டம், வரும் செப்., 30ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.பண நெருக்கடியை கருத்தில் கொண்டு, எந்த ஒரு நிபந்தனையும் இன்றி, அனைத்து குறு, சிறு, நடுத்தர நிறுவனங்களும், பழைய கடன்களை மறுசீரமைப்பு செய்துகொள்ள அனுமதிக்க வேண்டும். அதேபோல், மொத்த கடன் நிலுவையில், கூடுதலாக 10 சதவீதம் புதிய கடன் வழங்கி உத்தரவிட வேண்டும்.உலகளாவிய ஆடை வர்த்தக சந்தையில், கடுமையான போட்டி நிலவுகிறது. இதை எதிர்கொள்ள, அரசு சலுகைகள் இன்றியமையாததாக உள்ளன. ஆர்.ஓ.டி.டி.இ.பி., சலுகை திட்டத்தில், ஜி.கே.பிள்ளை கமிட்டி அளித்துள்ள பரிந்துரைகளை, எவ்வித மாற்றமும் இன்றி, அப்படியே அமல்படுத்த வேண்டும்.நிலுவையில் உள்ள சலுகை தொகைகளை, ஏற்றுமதி நிறுவனங்களுக்கு விரைந்து வழங்கவேண்டும்.ஏற்றுமதி நிறுவனங்களுக்கான வட்டி சமன்பாட்டு திட்டத்தின் கால அவகாசம், கடந்த ஜூன் மாதத்துடன் நிறைவடைந்துள்ளது; இந்த திட்டத்தை, அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு நீட்டிக்கவேண்டும்.இவ்வாறு, அவர் அந்த கடிதத்தில் தெரிவித்துள்ளார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE