திருப்பூர்:வீட்டுமனை அங்கீகாரத்தின் போது வசூலிக்கப்படும் வளர்ச்சி கட்டணத்தை, ஊராட்சி வங்கி கணக்கில் செலுத்த வழிவகை செய்ய வேண்டுமென, ஊராட்சி தலைவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.தமிழக ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் பெரியகருப்பன், நேற்று, திருப்பூரில், கொரோனா தடுப்பு பணிகளை ஆய்வு செய்தார். அவரிடம், தமிழ்நாடு ஊராட்சி மன்ற தலைவர்கள் கூட்டமைப்பின், மாவட்ட நிர்வாகிகள், அளித்த கோரிக்கை மனு:மாநில நிதிக்குழு மானியத்தை, தற்காலிக செலவினங்களுக்கு ஏற்ப உயர்த்தி வழங்க வேண்டும். அங்கீ காரமற்ற மனைப்பிரிவுகளுக்கு, அங்கீகாரம் வழங்கும் போது, வசூலிக்கப்படும் வளர்ச்சி கட்டணத்தை, கலெக்டர் அலுவலகத்தில் மட்டும் வங்கி கணக்கு துவக்கி செலுத்தப்படுகிறது.ஊராட்சிகளுக்கு சேர வேண்டிய தொகை, பகிர்ந்து அளிக்கப்படுவதில்லை. இனிமேல், சம்பந்தப்பட்ட ஊராட்சி கணக்கிலேயே, வளர்ச்சி கட்டணம் செலுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். அனைவருக்கும் வீடு திட்டம், பல ஆண்டுகளுக்கு முன் நடத்திய கணக்கெடுப்பின் அடிப்படையில் செயல்படுத்தப்படுகிறது. பயனாளிகளுக்கு முன்னுரிமை பட்டியல் தயாரிக்கப்பட வேண்டும்.வயதான குடிநீர் ஆபரேட்டர் ஓய்வு பெறும் போது, தற்காலிகமாக பணியாற்றும் நபரை நிரந்தரமாக்கி, சம்பளம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். திடக்கழிவு மேலாண்மை திட்டத்தை செயல்படுத்த, கூடுதல் துாய்மை காவலர்களை நியமிக்க வேண்டும்.பல்லடம், பொங்கலுார் ஒன்றியங்களில் உள்ள ஊராட்சிகளுக்கு, அத்திக்கடவு -பில்லுார் கூட்டுக்குடிநீர் திட்டத்தில் வழங்கும் தண்ணீர் போதுமானதாக இல்லை. 3வது திட்ட பணிகளை உடனடியாக துவக்க வேண்டும். திருப்பூர் 3வது குடிநீர் திட்டத்தை, பல்லடம், பொங்கலுார் ஒன்றியங்களில் உள்ள ஊராட்சிகளுக்கும் விரிவு படுத்த வேண்டும்.இவ்வாறு, மனுவில் தெரிவித்துள்ளனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE