சென்னை : தமிழகத்தில், முழு ஊரடங்கை நீட்டிப்பது மற்றும் தளர்வுகள் அளிப்பது தொடர்பான அறிவிப்பு, இன்று அல்லது நாளை வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழகத்தில், கொரோனா தொற்று பரவலை தடுக்க, மே, 24 முதல், தளர்வுகளற்ற முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. இம்மாதம், 7ம் தேதியில் இருந்து, வரும், 14ம் தேதி வரை, ஊரடங்கு நீட்டிக்கப்பட்டது.
பொதுமக்கள் வாழ்வாதாரம் கருதி, மளிகை, காய்கறி, பழக்கடைகள் திறக்க அனுமதி அளிக்கப்பட்டது. நோய் பரவல் அதிகம் உள்ள, 11 மாவட்டங்கள் தவிர்த்து, மற்ற மாவட்டங்களில், எலக்ட்ரிக் பொருட்கள் விற்பனை கடைகள், ஹார்டுவேர் கடைகள், இரு சக்கர வாகனங்களை பழுது பார்க்கும் கடைகள் போன்றவை திறக்க அனுமதி அளிக்கப்பட்டது.
அரசு பிறப்பித்த முழு ஊரடங்கு, 14ம் தேதி முடிய உள்ள நிலையில், ஊரடங்கை நீட்டிப்பது மற்றும் கூடுதல் தளர்வுகளை அறிவிப்பது தொடர்பாக, நேற்று தலைமை செயலகத்தில், ஆலோசனை கூட்டம் நடந்தது. முதல்வர் ஸ்டாலின் தலைமை வகித்தார். தலைமை செயலர் இறையன்பு, டி.ஜி.பி., திரிபாதி, சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் மற்றும் பல்வேறு துறை செயலர்கள் பங்கேற்றனர்.

கூட்டத்தில் பங்கேற்ற அதிகாரிகள், மருத்துவ குழுவினர், முழு ஊரடங்கை மேலும் ஒரு வாரம் நீட்டிக்க, பரிந்துரை செய்துள்ளதாக, தகவல் வெளியாகி உள்ளது. முழு ஊரடங்கு நீட்டிக்கப்பட்டாலும், கொரோனா நோய் பரவல் குறைந்துள்ள மாவட்டங்களில், மேலும் சில தளர்வுகளையும், டாஸ்மாக் கடைகளை திறப்பது குறித்தும், அரசு அறிவிக்க வாய்ப்புள்ளது.
ஒரு மாவட்டத்தில் இருந்து, மற்றொரு மாவட்டத்திற்கு செல்ல, தற்போதுள்ள, இ- - பதிவு முறை ரத்தாகலாம் என்றும் கூறப்படுகிறது. இது தொடர்பான அறிவிப்பு, இன்று அல்லது நாளை வெளியாகும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE