சேலம்: ரேஷனில், கொரோனா நிவாரண இரண்டாம் தவணை, 2,000 ரூபாய், விலையில்லா மளிகை தொகுப்பு பெற, இன்று முதல், 'டோக்கன்' வினியோகிக்கப்படும்.
தமிழகத்தில் கொரோனா நிவாரணம், இரண்டாம் தவணை, 2,000 ரூபாய், வரும், 15 முதல் வழங்கப்பட உள்ளது. அத்துடன், தலா, 1 கிலோ கோதுமை மாவு, உப்பு, ரவை, தலா, அரை கிலோ சர்க்கரை, உளுத்தம் பருப்பு, தலா, கால் கிலோ புளி, கடலை பருப்பு உள்பட, 14 வகை மளிகை பொருட்கள் அடங்கிய தொகுப்பு வினியோகிக்கப்படும். அதன்படி, சேலம் மாவட்டத்தில், 1,591 ரேஷன் கடைகளில், பணம், மளிகை பொருட்களை ஒருசேர பெறலாம். இவை, 10 லட்சத்து, 21 ஆயிரத்து, 681 ரேஷன் கார்டுகளுக்கு கிடைக்கும். அதற்கான டோக்கன், இன்று காலை, 9:00 மணி முதல், வரும், 14 வரை, வீடுதேடி வழங்கும் பணியில் விற்பனையாளர் ஈடுபடுவர். பின், 15 முதல், ரேஷனில் நேரடியாக சென்று, பணம், மளிகை தொகுப்பை பயனாளிகள் பெற்றுக்கொள்ளலாம். ரேஷன் கடை வேலை நேரம், காலை, 9:00 முதல், மதியம், 12:30 மணி வரை, மதியம், 2:00 முதல், மாலை, 5:00 மணி வரை என்பதால், தினமும், 200 ரேஷன் கார்டுக்கு வினியோகிக்கப்படும். முக கவசம் அணியாத, சமூக இடைவெளி கடைப்பிடிக்காத நுகர்வோருக்கு, பணம், பொருள் வழங்கப்படாது என, உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. டோக்கனில் குறிப்பிட்ட நாள், நேரப்படி, நுகர்வோர், ரேஷன் கடைக்கு உரிய நேரத்துக்கு வந்து பொருட்களை பெற்றுக்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதேநேரம், நாள், நேரம் மாறி வந்தாலும் பொருட்கள் கிடைக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
விடுபட்ட 7,033 பேரும் முதல் தவணை பெறலாம்: சேலம் மாவட்டத்தில் முதல் தவணைத்தொகை, 10 லட்சத்து, 14 ஆயிரத்து, 648 நுகர்வோர் மட்டும் வாங்கினர். இது, 99.31 சதவீதம். 7,033 நுகர்வோர் பெறவில்லை. அவர்கள், இரண்டாம் தவணையுடன், முதல் தவணைத்தொகையும் சேர்த்து, 4,000 ரூபாய் ஒருசேர பெறலாம். வழங்க மறுக்கும் விற்பனையாளர் பற்றி, புகார் தெரிவித்தால் நடவடிக்கை மேற்கொண்டு நிவாரணம் கிடைக்க வழி செய்யப்படும் என, கூட்டுறவு அதிகாரிகள் கூறினர்.
தி.மு.க., தலையீடு கூடாது: ரேஷன் விற்பனையாளர்கள் கூறியதாவது: முதல் நிவாரணத்தொகை, 2,000 ரூபாய் வழங்கும்போது, உள்ளூர், தி.மு.க.,வினர் தலையீட்டால் சிரமம் இருந்தது. தங்களை முன்னிலைப்படுத்தி, கட்சியினர் மூலம் நுகர்வோருக்கு பணம் வழங்கப்பட்டு, அதை படம் எடுத்துக்கொண்டனர். அதுவும் அதிகளவில் திரண்டதால், கொரோனா தடுப்பு நடவடிக்கை மாயமானது. தற்போது இரண்டாம் தவணையுடன், மளிகை தொகுப்பும் வழங்க வேண்டியுள்ளதால், தி.மு.க.,வினர் தலையீடு இல்லாமல் இருந்தால், நல்லதாக இருக்கும். நுகர்வோர் சேவை எளிதில் முடியும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE