விழுப்புரம்-விழுப்புரம் மாவட்டத்தில் 'மியூகோர் மைகோசிஸ்' எனப்படும் கருப்பு பூஞ்சை தொற்றால், இறப்பு அதிகரித்துள்ளதால் இந்நோய் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
விழுப்புரம் மாவட்டத்தில், கொரோனா இரண்டாவது அலையால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். நாள் தோறும் சராசரியாக 400க்கும் மேற்பட்டோருக்கு பாதிப்பு உறுதி செய்யப்படுகிறது.மேலும், தினமும் 4 பேருக்கு மேல் இறக்கின்றனர். கொரோனா தொற்று நுரையீரல் வரை சென்று பாதிப்பை ஏற்படுத்துவதால், கடந்த 2 மாதங்களில் 200க்கும் மேற்பட்டோர் மூச்சுத் திணறலால் உயிரிழந்துள்ளனர்.இந்நோயின் தாக்கத்தில் இருந்து மீள முடியாமல் மக்கள் பரிதவிக்கும் நிலையில், விழுப்புரம் மாவட்டத்தில் 'மியூகோர் மைகோசிஸ்' எனப்படும் கருப்பு பூஞ்சை தொற்று பரவத் துவங்கியுள்ளது.மாவட்டத்தில் 12 பேர் கருப்பு பூஞ்சையால் பாதிப்படைந்து, அதில் 4 பேர் இறந்தனர். இந்நோயால் பாதிக்கப்பட்ட அனைவரும் சிகிச்சைக்காக விழுப்புரம் மற்றும் புதுச்சேரி மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்களுக்கு தலைவலி, மூக்கடைப்பு, கருப்பு நிற சளி, மூக்கு மற்றும் வாய் பகுதியில் கருப்பு புள்ளிகள் தென்பட்டாலோ அல்லது கண்ணில் வலி, வீக்கம், பார்வை குறைபாடு, பல் வலி, பல் ஆடுதல் ஆகிய அறிகுறிகள் இருந்தாலோ கருப்பு பூஞ்சையாக இருக்கலாம் என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.
குறிப்பாக, நீரிழிவு மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்களுக்கு கருப்பு பூஞ்சை தொற்று ஏற்படுகிறது. இந்நோய்க்காக வழங்கப்படும் 'ஆம்போடெரிசின்-பி' என்ற தடுப்பு மருந்துக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.ஆரம்ப கட்டத்திலேயே சிகிச்சைக்காக மருத்துவமனைக்குச் சென்றால், இந்நோயில் இருந்து தப்பிக்கலாம் எனவும், இல்லையெனில், தொண்டை, கண், மூளை பாதிப்புக்குள்ளாகி உயிரிழக்கும் நிலை ஏற்படும் எனவும் மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.கருப்பு பூஞ்சை தொற்று குறித்து பொதுமக்களிடையே போதிய விழிப்புணர்வு இல்லாததால் அச்சத்தில் உள்ளனர்.சுகாதாரத் துறையினர் தற்போது கொரோனா தொற்றில் கவனம் செலுத்தி வரும் நிலையில், கருப்பு பூஞ்சை தொற்றுக்கென தனி குழு அமைத்து நோய் தடுப்பு நடவடிக்கை எடுத்து மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தி, தொற்று பரவலைத் தடுக்க வேண்டும்.
மாவட்டத்தில் மேலும்382 பேருக்கு கொரோனாவிழுப்புரம் மாவட்டத்தில் நேற்று 382 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால், மாவட்டத்தில் பாதிப்பு 39 ஆயிரத்து 665 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 35 ஆயிரத்து 544 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.கொரோனாவால் பாதிக்கப்பட்டு அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டிருந்த மயிலம் தழுதாளியைச் சேர்ந்த 55; வயது பெண், பிடாகத்தில் 63 வயது மூதாட்டி என 2 பேர் இறந்தனர். இதனால், மாவட்டத்தில் இறப்பு எண்ணிக்கை 304 ஆக உயர்ந்துள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE