தியாகதுருகம்-கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள ஏரி, குளங்களின் வரத்து வாய்க்கால் மற்றும் பாசன கால்வாய்களை சீரமைக்க வேண்டுமென விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 674 ஏரிகள் உள்ளன. இதில் 211 ஏரிகள் பொதுப் பணித்துறை கட்டுப்பாட்டிலும் 463 ஏரிகள் கிராம பஞ்சாயத்து பராமரிப்பிலும் உள்ளன. மணிமுக்தா மற்றும் கோமுகி அணைகள் மாவட்டத்தின் முக்கிய நீர் ஆதாரமாக விளங்குகிறது.அதுமட்டுமன்றி தென்பெண்ணை, கோமுகி, மணிமுக்தா ஆறுகளில் கட்டப்பட்டுள்ள 10 தடுப்பணைகள் மற்றும் 1000க்கும் மேற்பட்ட குளங்கள் உள்ளன.இதில் தேக்கி வைக்கப்படும் தண்ணீரால் மாவட்டத்தில் விவசாயம் செழிப்பதோடு நிலத்தடி நீர்மட்டம் குறையாமல் பாதுகாக்கப்படுகிறது.மாவட்டத்தின் ஜீவாதாரமாக விளங்கும் ஏரி, குளங்களை பல இடங்களில் ஆக்கிரமித்து விவசாயம் செய்து வருகின்றனர்.அதேபோன்று வரத்து வாய்க்கால், பாசன கால்வாய்களும் விளை நிலங்களாக மாற்றப்பட்டுள்ளன. ஊரை ஒட்டியுள்ள ஏரிகளின் நீர் பிடிப்பு பகுதி மற்றும் கரைகளில் வீடுகளைக் கட்டி ஆக்கிரமித்துள்ளனர்.இதனை கண்காணித்து ஆக்கிரமிப்புகளை அப்புறப்படுத்த வேண்டிய அதிகாரிகள் கண்டுகொள்ளாததால் நாளுக்கு நாள் நீர்நிலைகள் காணாமல் போகும் நிலை ஏற்பட்டுள்ளது.இதன் காரணமாக ஏரி, குளங்களின் நீர்பிடிப்பு பரப்பு குறைந்து நீரை தேக்கி வைக்க முடியாமல் போகிறது. பருவ மழை குறைவாக பெய்யும் காலங்களில் நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக குறைந்து குடிநீருக்கு மக்கள் திண்டாடும் நிலை ஏற்படுகிறது.கடந்த 2015ம் ஆண்டுக்குப் பிறகு கடந்த ஆண்டு மாவட்டத்தில் கனமழை பெய்து நீர் நிலைகள் நிரம்பின. தொடர்ந்து ஒவ்வொரு ஆண்டும் எதிர்பார்த்த மழை பெய்யாததால் நீர்நிலைகளை விளை நிலங்களாக மாற்றுவது கடந்த 10 ஆண்டுகளில் அதிகரித்துள்ளது.இதனால் ஆயக்கட்டு பாசன விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
பல ஏரிகளின் மதகுகள் சேதமடைந்து தண்ணீரைத் தேக்கி வைக்க முடியாமல் விரயமாகி வருகிறது.தற்போது தென்மேற்கு பருவமழை துவங்கியுள்ள நிலையில் வரத்து வாய்க்கால்களை செப்பனிட்டு சீரமைத்தால் மட்டுமே மழைநீர் வீணாகாமல் நீர்நிலைகளுக்குச் சென்றடையும்.மாவட்டம் முழுதும் முறையான நீர் கட்டமைப்பை நமது முன்னோர்கள் உருவாக்கி வைத்துள்ளனர்.
இதனை முழுமையாக செப்பனிட்டு பாதுகாத்தால் விவசாயம் செழிப்பதோடு மாவட்டத்தில் தண்ணீர் பஞ்சம் இன்றி மக்கள் நிம்மதியாக வாழ முடியும்.வருவாய்த் துறை, ஊரக வளர்ச்சித் துறை, பொதுப்பணித் துறை, நீர்வளத் துறை ஆகியவை இணைந்து பாரபட்சமின்றி நடவடிக்கை எடுத்து ஆக்கிரமிப்புகளை அகற்றி நீர் ஆதாரங்களைப் பாதுகாக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE