நம் முன்னோர்களான சங்க கால தமிழர்கள், நாகரிக வளர்ச்சியில் உச்சம் தொட்டவர்களாக வாழ்ந்திருக்கின்றனர். ஒரு மிகச்சிறந்த சமுதாய கட்டமைப்பை உருவாக்கி, அறிவு வளமும், செல்வ வளமும் மிகுந்த வாழ்க்கையை வாழ்ந்து இருக்கின்றனர்.
மொழி ஆளுமை, கலை, இலக்கியம், நிர்வாகம், விவசாயம், வணிகம், மருத்துவம், விஞ்ஞானம், கணிதம், அரசியல், ஆன்மிகம் என்று எல்லா துறைகளிலும் உலக முன்னோடியாக இருந்து இருக்கின்றனர்.
அரசியல் ஆளுமை
வரலாற்று சான்றுகளின் படி, 2,000 ஆண்டுகளுக்கு முன்பே, ரோம், எகிப்து, சீனா உள்ளிட்ட பல நாடுகளுடன் கடல் வாணிபம் மூலமாக தொழில் வளர்ச்சியில் வெற்றிக்கொடி நாட்டி இருக்கின்றனர்.
கரிகாலன் கட்டிய கல்லணையும், ராஜராஜ சோழன் கட்டிய தஞ்சை பெரிய கோவிலும், ராஜேந்திர சோழன் வைத்திருந்த கடற்படையும், யானைப்படையும் இன்றளவும் வியப்பை ஏற்படுத்துகின்றன.சேர மற்றும் பாண்டிய மன்னர்களின் துறைமுக கட்டமைப்புகளும், இன்றைக்கும் இருக்கும் எண்ணற்ற கற்கோவில்களும், மிகப்பெரிய ஏரி கட்டமைப்புகளும், உத்திரமேரூர் கல்வெட்டுகளும், தமிழர்களின் அறிவிற்கும், உழைப்பிற்கும் சான்றாக விளங்குகின்றன.
கிழக்கு ஆசியாவை வெற்றி கொண்ட ராஜேந்திர சோழனும், கம்போடியா நாட்டில் உலகின் மிகப்பெரிய கோவிலை நிர்மாணித்த சூரிய வர்மனும், தமிழ் மண்ணின் அரசியல் ஆளுமைக்கும், வீரத்திற்கும் சான்று பகிர்கின்றனர்.வீரத்திற்கும், விவேகத்திற்கும் இவை எல்லாம் சான்று என்றால், ஞானத்திற்கும் சான்று தரும் சரித்திரமும் இங்கே இருக்கிறது. தொல்காப்பியர், திருமூலர், திருவள்ளுவர், அவ்வையார் என்று துவங்கி, கணியன் பூங்குன்றனார், இளங்கோவடிகள், கம்பர் என்று பழங்கால பட்டியல் நீளுகிறது.மேலும், பாரதியார், பட்டுக்கோட்டையார், கண்ணதாசன் என்று இறையருள் பெற்ற, நிறை அறிவு மாந்தர் நிறைய பேர் இங்கு வாழ்ந்து இருக்கின்றனர்.
மிக சமீபகாலத்தில் சுதந்திர போராட்டத்தில் கூட தன்னை விட, தன் குடும்பத்தை விட, நாட்டை அதிகமாக நேசித்த தலைவர்கள் பல ஆயிரம் பேர் இங்கே பிறந்து வாழ்ந்து இருக்கின்றனர். வ.உ.சி., ராஜாஜி, தீரர் சத்தியமூர்த்தி, பெருந்தலைவர் காமராஜர், கக்கன், பசும்பொன் தேவர் உள்ளிட்ட பல தலைவர்கள், நம் பாரத தேசத்திற்கே முன்னோடியாக வாழ்ந்துஇருக்கின்றனர்.
சுதந்திர பாரதத்தில் கூட, எல்லா மாநிலங்களிலும், குறிப்பாக தலைநகர் டில்லி, மும்பை மற்றும் வெளிநாடுகளில் சிங்கப்பூர், மலேஷியா, பர்மா, அமெரிக்கா, பிரிட்டன் துவங்கி ஐரோப்பிய நாடுகள், ஆப்பிரிக்க நாடுகள், அரபு நாடுகள் என்று எல்லா நாடுகளிலும், தமிழன் தன் அறிவாலும், உழைப்பாலும், நேர்மையாலும் உயர்வடைந்தான்; தான் வாழ்ந்த நாடுகளையும் உயர்த்தினான். இப்படி, தமிழன் என்றால் உலகமே வியக்கும் அறிவும், ஆற்றலும் கொண்ட ஆளுமை மிக்க ஒரு இனம் என்ற பெயரை எடுத்தது ஒரு காலம். அது வரலாறு.
காலம் மெல்ல மெல்ல மாறியது. காட்சிகளும் மெல்ல மெல்ல மாறின. உலகமே வியந்த தமிழன் இன்று உலகை பார்த்து பயந்து நிற்கிறான். போட்டிகளை சந்திக்கும் துணிவு குறைந்து, புதிய முயற்சி களை முன்னெடுக்கும் முயற்சி குறைந்து, ஊக்கமும் உற்சாகமும் இன்றி தயங்கியே நிற்கிறான்.அறிவில் தெளிவு இல்லை; ஆற்றலில் நம்பிக்கை இல்லை; உழைப்பில் விருப்பமில்லை; முயற்சி செய்ய ஆசை இல்லை; மொத்தத்தில் வளர்ச்சிக்கான எந்த அறிகுறியும் தெரியவில்லை. புதிய நம்பிக்கையை விதைக்க போவது யார் என்றும் தெரியவில்லை.
சங்கிலித்தொடர்
இந்த நிலை ஏன் வந்தது; எப்படி வந்தது; எப்போது வந்தது; யாரால் வந்தது... என்று ஆழமாக ஆராய்ந்து பார்த்தோமேயானால், கடந்த 60 ஆண்டுகளாக நம் மாநிலத்தில் தாக்கத்தை ஏற்படுத்திய, நம்மை வழி நடத்திய தலைவர்கள் தான், முழு வீழ்ச்சிக்கும் காரணமாக இருக்கின்றனர்.அறிவு என்பது ஒரே தலைமுறையில் வந்துவிடுவது அல்ல; அது பல தலைமுறைகளின் தொடர்ச்சி ஆகும். வழிவழியாக மரபணுவில் கலந்து வருவதாகும்.
அந்த சங்கிலித்தொடர் அறுந்து விட்டால் மீண்டும் அதை பெறுவதற்கு நீண்ட காலம் பிடிக்கும். கல்விமுறை மூலமாகவும், வாழ்க்கைமுறை மூலமாகவும், அனுபவங்கள் மூலமாகவும், அடுத்தடுத்த தலைமுறைகளில் தான் அந்த இயற்கை அறிவு பெருகும்; அது ஆற்றலாக மாறும்; வளர்ச்சியாக உருவாகும்.நம்மை வழிநடத்திய தலைவர்கள் பகுத்தறிவு என்ற பெயரில், பண்பாட்டை சிதைத்து விட்டனர். சுயமரியாதை என்ற பெயரில் அடக்கத்தை சிதைத்து விட்டனர். போராட்டங்கள் என்ற பெயரில் சிந்திக்கும் திறனை மழுங்கடித்து விட்டனர். இலவசங்கள் என்ற பெயரில் தன்மானத்தை புதைத்து விட்டனர்.
மொழி உணர்வை துாண்டி, மொழி அறிவையும் ஆளுமையையும் குறைத்து விட்டனர். குறைகளை மட்டுமே பேசி, குழப்பத்தை ஏற்படுத்தி விட்டனர். பொய்களை மட்டுமே பேசி, நம் இனத்தின் வளர்ச்சியை தடுத்து விட்டனர். எதிர்மறை சிந்தனைகளை துாண்டி, இளைஞர் சக்தியை திசை திருப்பி விட்டனர்.இன்றைய தமிழினம், திராவிட மயக்கம், மது மயக்கம், சினிமா மயக்கம் என்ற மூன்று விதமான மயக்கத்தில் மூழ்கி கிடக்கிறது; நம் இளைய தலைமுறையினர் நேரம் வீணடிக்கப்படுகிறது.
ஒரு அறிவார்ந்த சமூகம், உணர்ச்சிகளுக்கு அடிமையாகும் சமூகமாக மாறிவிட்டது. பிரபலமானவர்கள் எதை சொன்னாலும், அதை அப்படியே நம்புவது; தன் சொந்த புத்தியை பயன்படுத்தி உண்மையை தேடி, தெளிய மறுப்பது என, பகுத்தறிய தெரியாத இளைஞர்களின் எண்ணிக்கை இங்கே அதிகமாகிவிட்டது.இப்படி நிர்வாக புரிதல்கள் மட்டுமல்ல, அன்றாட வாழ்க்கையில் கூட நம் சிந்தனை மழுங்கி விட்டது.
நம்மில் பெரும்பான்மையினருக்கு தர்மத்தின் மீது நம்பிக்கை இல்லை; சட்டத்தின் மீதும் நம்பிக்கை இல்லை. பாவ புண்ணியங்கள் மீது நம்பிக்கை இல்லை; அறிவையும் ஞானத்தையும் தேடுவதில் விருப்பமில்லை; இயற்கையை பாதுகாக்க வேண்டும் என்ற அக்கறை இல்லை.சுருக்கமாக சொன்னால் எனக்கான வசதிகள் அனைத்தையும் யாராவது செய்து தர வேண்டும். ஆனால், நான் யாருக்கும் எதுவுமே செய்ய மாட்டேன். நான் எதற்கும் பொறுப்பு அல்ல; எல்லாவற்றிற்கும் அரசு தான் பொறுப்பு. நான் என் கடமைகள் எதையும் செய்ய மாட்டேன்; ஆனால் கேள்விகள் மட்டும் கேட்பேன்.இப்படி முரண்பட்ட, சாத்தியமே இல்லாத சிந்தனைப் போக்கு நம் மூளையில் பதிவாகி நிலைபெற்று விட்டது.உழைக்காமல் லஞ்சம், ஊழல் மூலம் செல்வம் சேர்ப்பது புத்திசாலித்தனம் என்றும் தலைக்கனம் மிகுந்த புதிய இலக்கணம் நிலைத்துவிட்டது.
துரதிருஷ்டம்
அறிவையும், ஞானத்தையும் தேட வேண்டிய கல்விக் கூடங்களில் பொழுதுபோக்கை தேடுகிறோம். பொழுதுபோக்க வேண்டிய சினிமாவில் அறிவையும் ஞானத்தையும் தேடுகிறோம். மதிக்கப்பட வேண்டிய பெரியவர்களையும், ஆசிரியர்களையும், கேலிப் பொருளாக பார்க்கிறோம்.'ஜாலி'க்காக பார்க்க வேண்டிய சினிமா நடிகர்களை கடவுளாக கருதுகிறோம். உடலுக்கு கேடு தரும் மதுவை ரசித்து குடிக்கிறோம். ரசித்து குடிக்க வேண்டிய இளநீரையும், பதநீரையும் ஏளனமாக பார்க்கிறோம்.
உள்நாட்டு வணிகர்கள் மீது வெறுப்பை உமிழ்கிறோம். வெளிநாட்டு வணிகர்களை வணங்கி வரவேற்கிறோம்.நல்லவர்களின் செயல்களில் உள்ள தவிர்க்க முடியாத சிறு குறைகளை பெரிது படுத்துகிறோம். கெட்ட அரசியல் தலைவர்களின் வெற்றி பேச்சுக்கு முக்கியத்துவம் தருகிறோம். நம்மை காக்கின்ற பணிகளை செய்யும் காவல்துறை மற்றும் ராணுவம் மீது கறார் காட்டுகிறோம்.இப்படி முரண்பாடுகளின் மொத்த உருவமாக நாம் மாறிவிட்டோம்.
எல்லா நாடுகளிலும் சமூகத்தில் இரண்டு விதமான குரல்கள் எழும். ஒன்று சுயநலக்காரர்களின் பலம் மிகுந்த குரல். இன்னொன்று எண்ணிக்கையில் அதிகமான சாமானியர்களின் பலம் குறைந்த குரல். முதல் வகை குரல் ஓங்கி ஒலிக்கும்; மிரட்டலாக ஒலிக்கும்.இரண்டாம் வகை குரல் மெல்லியதாக ஒலிக்கும். வீடுகளிலும், அலுவலகங்களிலும், தெருக்களிலும், கடை வீதிகளிலும், பூங்காக்களிலும், வழிபாட்டு தலங்களிலும் ஒலிக்கும். ஊடகத்தையோ அதிகாரவர்க்கத்தையோ எட்டும் அளவு வலிமை, அந்த குரலுக்கு இருக்காது.
அதே நேரம் அந்த குரலில் சுயநலம் இருக்காது; பொதுநலம் இருக்கும்; தேசநலன் இருக்கும். தமிழ் சமூகம் இழந்த தன் பெருமைகளை மீண்டும் பெற வேண்டும். கல்வியில், வேலைவாய்ப்பில், வணிகத்தில், விஞ்ஞானத்தில், மருத்துவத்தில் வாய்ப்புகளை தேடித் தேடி கண்டுபிடிக்க வேண்டும். தன்னுடைய திறமைகளை வளர்த்துக் கொள்ள வேண்டும். அறிவாலும் உழைப்பாலும், தொடர் முயற்சிகளினாலும் முன்னேற வேண்டும்.பாழாய்போன அரசியல் வேண்டாம். அதிலும், பிரிவினைவாதம் பேசும் இப்போதைய சில கட்சிகளின் அரசியல் அறவே வேண்டாம். அத்தகையோருக்கு இளைஞர்கள் ஆதரவு அளிக்கக் கூடாது.
நாம் ஆடுகள் என்ற கற்பனையில் இருந்து வெளியில் வந்து, நாம் சிங்கங்கள் என்ற உண்மையை உணர வேண்டும்.நம்மை திராவிடர் என்பர். ஆனால், அவர்கள் திருமணம் செய்து கொண்டது வேறொரு இனமாக இருக்கும்; ஒன்றியம் என்பர். ஆனால் அவர்கள் வேறொரு நாட்டின் மருமகனாக இருப்பர். இப்படி நாட்டுப்பற்று இல்லாதவர்கள் தான், நம் தலைவர்களாக வாய்த்தது துரதிருஷ்டம்.நம்மை பிரித்தாள நினைக்கும் அரசியல் சூழ்ச்சிகளை கண்டுகொள்ள வேண்டும். நேர்மையும், தொலைநோக்கு பார்வையும் கொண்ட தெளிவான தலைவர்களை ஆதரிக்க வேண்டும். உண்மையும் உறுதியும் கொண்ட தலைவர்களை ஊக்குவிக்க வேண்டும்; பிறரை புறம்தள்ள வேண்டும்.
சிந்திப்போம்
நல்ல தலைவர்களை தேடித் தேடி ஆதரிக்க வேண்டும். அந்த தலைவர் நல்லவரா, கெட்டவரா என்பதை அவரின் பேச்சை வைத்து எடை போடக்கூடாது; அவரின் செயலை வைத்து எடை போட வேண்டும்.காமராஜர், கக்கன் போன்ற நேர்மையான அரசியல்வாதிகளை தோற்கடித்து, நாட்டிற்கு நஷ்டத்தை ஏற்படுத்தியது போல, இனியும் நம் செயல்பாடு இருக்கக் கூடாது. எப்படியோ ஆகி விட்டது. இனிமேலாவது சிந்திப்போம்.
'தமிழன் என்றொரு இனம் உண்டு; தனியே அவர்க்கொரு குணம் உண்டு' என்றார் நாமக்கல் கவிஞர். அதை நிரூபித்து காட்டுவோம். எல்லாவற்றிற்கும் தலையாட்டாமல், நாட்டின் வளர்ச்சிக்கு ஒத்துழைப்போம்; பிரிவினை வாதம், பிற்போக்குத்தனங்களை எதிர்ப்போம். ஏனெனில், நாம் தமிழர். தமிழகத்தில் பிறந்த அனைவரும் தமிழரே. நம்மை பிரிக்க நினைக்கும் சக்திகளின் உள்ளர்த்தத்தை அறிந்து, அவர்களை நாம் புறக்கணிப்போம்!
தொடர்புக்கு:
எஸ்.ஆர்.,ரத்தினம்
சமூக ஆர்வலர்
இ - மெயில்: bjprathnam@gmail.com
மொபைல்: 98408 82244