மதுக்கடைகளுக்கு மட்டும் அனுமதியா; வியாபாரிகள் எதிர்ப்புக்கு பணிந்தது அரசு: டீக்கடைகளை திறக்க அனுமதி| Dinamalar

மதுக்கடைகளுக்கு மட்டும் அனுமதியா; வியாபாரிகள் எதிர்ப்புக்கு பணிந்தது அரசு: டீக்கடைகளை திறக்க அனுமதி

Updated : ஜூன் 13, 2021 | Added : ஜூன் 13, 2021 | கருத்துகள் (81) | |
சென்னை: மதுக்கடைகளுக்கு மட்டும் அனுமதி வழங்கி டீ கடைகளை மூடுவதா என வியாபாரிகள் எதிர்ப்பு தெரிவித்தற்கு தமிழக அரசு பணிந்தது. தமிழகத்தில் 27 மாவட்டங்களில் மட்டும் நாளை முதல் டீக்கடைகளை திறக்க தமிழக அரசு அனுமதி வழங்கி உள்ளது.முதல்வர் ஸ்டாலின் ஆட்சிப் பொறுப்பேற்றவுடன் கொரோனா நிவாரண நிதியாக மே மாதம் ரேஷன் கார்டுதாரர்களுக்கு ரூ.2000, மளிகைப் பொருட்கள் வழங்கி மக்களின்
Tasmac, Relaxation, TeaShop, TN, டாஸ்மாக், டீக்கடை, அனுமதி

சென்னை: மதுக்கடைகளுக்கு மட்டும் அனுமதி வழங்கி டீ கடைகளை மூடுவதா என வியாபாரிகள் எதிர்ப்பு தெரிவித்தற்கு தமிழக அரசு பணிந்தது. தமிழகத்தில் 27 மாவட்டங்களில் மட்டும் நாளை முதல் டீக்கடைகளை திறக்க தமிழக அரசு அனுமதி வழங்கி உள்ளது.

முதல்வர் ஸ்டாலின் ஆட்சிப் பொறுப்பேற்றவுடன் கொரோனா நிவாரண நிதியாக மே மாதம் ரேஷன் கார்டுதாரர்களுக்கு ரூ.2000, மளிகைப் பொருட்கள் வழங்கி மக்களின் அபிமானத்தை பெற்றார். அடுத்த மாதமும் வழங்கப்படும் என்றதும் பெண்கள் சந்தோஷப்பட்டனர். அந்த சந்தோஷத்திற்கு முதல்வர் ஸ்டாலினே டாஸ்மாக் கடைகளின் வடிவில் வேட்டு வைத்துள்ளார். இந்த மாதத்திற்கான ரூ.2000 தருவதற்கு டோக்கன் மட்டுமே வழங்கப்பட்டுள்ளது.ஜூன் 15 முதல் பணம், மளிகைப்பொருட்கள் வழங்கப்படும் என அறிவித்துள்ளது.அதேநாளில் 27 மாவட்டங்களில் டாஸ்மாக் கடைகளும் காலை 10:00 மாலை 5:00 திறக்கப்படும் என அறிவித்து பெண்களுக்கு அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது.

அதே நேரத்தில் காபி, டீ வர்த்தகர்களிடம் அதிருப்தியையும் ஆத்திரத்தையும் ஏற்படுத்தியுள்ளது. டாஸ்மாக் கடைகள் மூலம் பரவாத கொரோனா வைரஸ் காபி, டீ கடைகள் மூலமாகவா பரவி விடும் என கேள்வி எழுப்புகின்றனர். அவர்கள் கூறியதாவது:


latest tamil news


கடனில் மூழ்கி தவிக்கிறோம்


மீனாட்சி சுந்தரேஷ், செயலாளர், மதுரை காபி டீ வர்த்தகர் சங்கம்: மதுரை மாவட்டத்தில் 5000 கடைகள் உள்ளன. 1800 பேர் சங்கத்தில் உறுப்பினர்களாக உள்ளனர். ஒரு கடையில் குறைந்தது 4 - 10 பேருக்கு வேலை தருகிறோம். 30 ஆயிரம் பேருக்கு வேலை கிடைத்தது. கடை மூடப்பட்டதால் அவர்களும் வேலை இல்லாமல் உள்ளனர். மனிதாபிமான அடிப்படையில் நாங்கள் கடன் வாங்கி தொழிலாளர்களுக்கு குறைந்தபட்ச தொகையை தருகிறோம். சுயமாக தொழில் செய்து நாலு பேருக்கு வேலை வாய்ப்பு தந்த நாங்கள் ஊரடங்கால் வாழ முடியாமல் கடனில் மூழ்கி தவிக்கிறோம்.

வங்கியில் நிதித் தள்ளுபடி கிடையாது. கடை வாடகை கொடுக்க வேண்டும். மின் கட்டணம் செலுத்த வேண்டும். ஒரு மாதமாக எங்கள் நிலையை சொல்லி அழுவதற்கு ஆளில்லை. இந்த நிலையில் டாஸ்மாக் கடைகளுக்கு முதல்வர் அனுமதி அளித்துள்ளார். அதை வேண்டாம் என்று சொல்லவில்லை. எங்களையும் திறக்க அனுமதிக்க வேண்டும் என்பது தான் எங்கள் கோரிக்கை. கொரோனா அலைகளில் சிக்கி தவிப்பது நாங்கள் தான்.

ஆனந்தன், தலைவர், சென்னை பெருநகர டீக்கடை உரிமையாளர்கள் சங்கம்: சென்னையில் 10 ஆயிரம் டீக்கடைகள் உள்ளன. இதன் மூலம் 50 ஆயிரம் தொழிலாளர்கள் வேலை செய்கின்றனர். ஒரு மாதமாக எந்த தளர்வும் இல்லாததால் நாங்களும் தொழிலாளர்களும் மனதளவில் தளர்ந்து விட்டோம். 2020ல் கொரோனா முதல் அலையின் போது மார்ச் 24 முதல் தொடர்ந்து ஆறு மாதங்களாக கடைகள் செயல்படவில்லை. இப்போது தான் வியாபாரம் கொஞ்சம் நடக்கிறது. மறுபடியும் மே 10 முதல் ஒரு மாதமாக கடைகள் மூடியுள்ளன. திறமையான வேலைக்காரர்கள் ஊருக்கு சென்று விட்டனர்.


latest tamil news


மே 7 ம் தேதி முதல்வர் ஸ்டாலினுக்கு தபால் மூலமும் இமெயில் மூலமும் மனு அனுப்பினோம். கடைக்குள் வாடிக்கையாளர்களை அனுமதிக்காவிட்டாலும் வெளியில் நின்று டீ விற்பனை செய்வதற்கு அனுமதி கோரினோம். இதுவரை அனுமதி தரவில்லை. ஆனால் டாஸ்மாக் கடைகளுக்கும், சலுான் கடைகளுக்கும், பூங்காக்களுக்கும் அனுமதி அளித்துள்ளது. இங்கெல்லாம் கொரோனா வைரஸ் பரவாதா. லட்சக்கணக்கான தொழிலாளர்களின் வேலைவாய்ப்பை கருத்தில் கொண்டு டீ கடைகளை திறக்க முதல்வர் அனுமதி தர வேண்டும்.பிஸ்கட், மிட்டாய், குளிர்பானங்கள் வீணானது


ராவுத்தர் ஷா, நிறுவனர், திருச்சி டீக்கடை சங்கம்: திருச்சி மாவட்டத்தில் 6000 கடைகள் மூலம் 20 ஆயிரம் தொழிலாளர்கள் வேலையை நம்பியிருந்தனர். தினக்கூலியாக சம்பளம் வாங்குகிறவர்கள் இவர்கள். கடந்த கொரோனாவிலும் பெரிய பாதிப்பு. நிறைய பொருட்களை வாங்கி வைத்து வீணாகி விட்டது. கடந்த ஆட்சியிலும் நிவாரணம் கிடைக்கவில்லை. இப்போதோ ஒருவாரம் என்று சொல்லி ஒரு மாதமாகி விட்டது. டீக்கடை ஓனர்கள் ஒன்று சேர்ந்து ஆலோசனை கூட்டம் நடத்தியுள்ளோம். 20 சதவீதம் பேர் கை முதல் போட்டு வியாபாரம் செய்கின்றனர். 80 சதவீதம் பேர் கடன் வாங்கி தான் பொருட்களை வாங்கி தொழில் செய்கிறோம்.

இப்போது கடை திறந்தாலும் கடைக்குள் உள்ள பிஸ்கட், மிட்டாய், குளிர்பானங்கள் அனைத்தும் காலாவதி ஆகிவிடும். பொருட்கள் எதையும் பயன்படுத்த முடியாது. பழைய சரக்கை கம்பெனிகாரர்கள் திருப்பி எடுக்கவும் மாட்டார்கள். அடுத்து உணவு பாதுகாப்பு அதிகாரிகள் இதை பார்த்து அபராதம் விதிப்பார்கள். திரும்பவும் கடன் வாங்கி முதல் போடவேண்டும். இது எங்களுக்கு எவ்வளவு பெரிய இழப்பு என்பதை அரசு உணர வேண்டும். மீண்டும் கடைகள் திறப்பதற்கு குறைந்த வட்டிக்கு கடன் தர வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.


ஜூன் 30 வரை


மத்திய அரசு ஊரடங்கு அறிவித்துள்ளதை நடைமுறைப்படுத்தும் வகையில் டாஸ்மாக் கடைகளையும் ஜூன் 30 வரை திறக்கக்கூடாது. அதன் மூலமே இந்த மாத கொரோனா நிவாரண நிதி குடும்பங்களின் செலவுக்கு மட்டும் முதலீடாக அமையும்.


டீ கடையில் பார்சலுக்கு மட்டும் அனுமதி

இந்நிலையில், தமிழக அரசு வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது:பல்வேறு தரப்பினரிடம் இருந்த வந்த கோரிக்கைகள் பரிசீலனை செய்யப்பட்டு, 11 மாவட்டங்கள் தவிர்த்து, தமிழகத்தின் இதர 27 மாவட்டங்களில் நாளை (ஜூன் 14) முதல் டீக்கடைகளை காலை 6:00 மணி முதல் மாலை 5:00 மணி வரை பார்சல் முறையில் மட்டும் வழங்க அனுமதி வழங்கப்படுகிறது. பார்சல் முறையில் டீ வாங்க வரும் போது மக்கள் பாத்திரங்களை கொண்டு வந்து பெற்று செல்ல வேண்டும். பிளாஸ்டிக் பைகளில் டீ பெற்று செல்வதை தவிர்க்க வேண்டும், கடைகளின் அருகே நின்று டீ குடிக்க அனுமதி இல்லை.

மேலும், இனிப்பு, கார வகைகள் விற்கும் கடைகளும் காலை 8:00 மணி முதல் மதியம் 2:00 மணி வரை இயங்கலாம். இங்கும் பார்சல் முறை விற்பனை மட்டும் அனுமதிக்கப்படுகிறது.

நாளை முதல் இ சேவை மையங்களும், கட்டுமான நிறுவனங்களின் அலுவலகங்களும் 50 சதவீதம் பணியாளர்களுடன் இயங்க அனுமதி வழங்கப்படுகிறது. இவ்வாறு அந்த உத்தரவில் கூறப்பட்டு உள்ளது.

Advertisement
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X