ஒரே பூமி, ஒரே ஆரோக்கிய முறை: உலக நாடுகளுக்கு மோடி ஆலோசனை| Dinamalar

பொது செய்தி

இந்தியா

ஒரே பூமி, ஒரே ஆரோக்கிய முறை: உலக நாடுகளுக்கு மோடி ஆலோசனை

Updated : ஜூன் 15, 2021 | Added : ஜூன் 13, 2021 | கருத்துகள் (37)
Share
புதுடில்லி:''கொரோனா போன்ற பெருந்தொற்றுகளை எதிர்கொள்ள, 'ஒரே பூமி, ஒரே ஆரோக்கியம்' என்ற முறையை உலக நாடுகள் பின்பற்ற வேண்டும். கொரோனா தடுப்பூசிகளுக்கான காப்புரிமையை நீக்க வேண்டும்,'' என, பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தினார்.இந்தியா உறுதிபொருளாதாரத்தில் வளர்ந்த நாடுகளான அமெரிக்கா, பிரிட்டன், கனடா, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான் ஆகியவை அடங்கியது, ஜி - 7
PM Modi, G7 summit, Modi, ஒரே பூமி, ஒரே ஆரோக்கிய முறை, மோடி,ஆலோசனை

புதுடில்லி:''கொரோனா போன்ற பெருந்தொற்றுகளை எதிர்கொள்ள, 'ஒரே பூமி, ஒரே ஆரோக்கியம்' என்ற முறையை உலக நாடுகள் பின்பற்ற வேண்டும். கொரோனா தடுப்பூசிகளுக்கான காப்புரிமையை நீக்க வேண்டும்,'' என, பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தினார்.


இந்தியா உறுதி

பொருளாதாரத்தில் வளர்ந்த நாடுகளான அமெரிக்கா, பிரிட்டன், கனடா, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான் ஆகியவை அடங்கியது, ஜி - 7 அமைப்பு. இந்த அமைப்பின் உச்சி மாநாடு,
பிரிட்டனில் நடக்கிறது. இந்தியா, ஆஸ்திரேலியா, தென் கொரியா மற்றும் தென்னாப்ரிக்கா சிறப்பு அழைப்பாளர்களாக அழைக்கப்பட்டு இருந்தன.

ஜி - 7 நாடுகளின் தலைவர்கள் நேரடியாக பங்கேற்கும் அமைப்பின் மாநாட்டில், பிரதமர் நரேந்திர மோடி, 'வீடியோ கான்பரன்ஸ்' முறையில் பங்கேற்றார்.அப்போது அவர் பேசியதாவது: கொரோனா வைரஸ் பரவலின்போது, இந்தியாவுக்கு உதவிய அனைத்து நட்பு நாடுகளுக்கும் நன்றி. 'வசுதேவ குடும்பகம்' எனப்படும், உலகம் ஒரு குடும்பம் என்ற கொள்கையில், இந்தியா உறுதியாக உள்ளது.கொரோனா காலத்தில் உள்நாட்டில் உள்ள அனைத்து ஆதாரங்களையும் பயன்படுத்தி, வைரஸ் பரவலை தடுப்பதில் சிறப்பாக செயல்பட்டுள்ளோம்.

உள்நாட்டிலேயே தடுப்பூசியும் தயாரிக்கப்பட்டுள்ளது. பெருந்தொற்றை தடுப்பதில் எங்களுக்கு கிடைத்த அனுபவங்களை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ள தயாராக உள்ளோம்.கொரோனா தொற்று மட்டுமல்ல, எதிர்காலத்தில் இதுபோன்று அசாதாரண சூழ்நிலையை சந்திக்கநேரிட்டால், அதை எதிர்கொள்வதற்கு, உலக நாடுகள் ஒன்றாக செயல்பட வேண்டும்.'ஒரே பூமி, ஒரே ஆரோக்கியம்' என்பதே நம் செயல்பாடாக இருக்க வேண்டும். அப்போது தான், இதுபோன்ற பெருந்தொற்றுகளை வெற்றிகரமாக எதிர்கொள்ள முடியும்.


ஆதரவு

'கொரோனா தடுப்பூசிகளுக்கு, அறிவுசார் சொத்துரிமையில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும்' என, உலக வர்த்தக அமைப்பில், தென்னாப்ரிக்காவுடன் இணைந்து இந்தியா வலியுறுத்தி வருகிறது.அதற்கு, ஜி - 7 நாடுகளும், மற்ற உலக நாடுகளும் ஆதரவு தர வேண்டும்.அனைத்து நாடுகளில் உள்ள மக்களுக்கும் தடுப்பூசி கிடைப்பது அப்போது தான் சாத்தியமாகும்.இவ்வாறு அவர் பேசினார்.

பிரதமர் மோடியின், 'ஒரே பூமி, ஒரே ஆரோக்கியம்' என்ற கோஷத்துக்கு, ஜெர்மனி நிர்வாக தலைவர் ஏஞ்சலா மார்க்கெல் ஆதரவு தெரிவித்துஉள்ளார். தடுப்பூசிக்கு காப்புரிமையில் இருந்து விலக்கு அளிக்கும் இந்தியாவின் முயற்சிக்கு, ஆஸ்திரேலியா உட்பட பல நாடுகள் ஆதரவு தெரிவித்துள்ளன.


மாநாட்டின் முக்கிய அம்சங்கள்

*சீனாவின் சந்தை சாரா பொருளாதார சவால்களை ஒன்றிணைந்து எதிர்கொள்ள, ஜி - 7 மாநாட்டு தலைவர்கள் உறுதி எடுத்தனர்.

* சீன அரசு, ஜின்ஜியாங் மற்றும் ஹாங்காங்கில் மனித உரிமைகளை பாதுகாக்க, தலைவர்கள் வலியுறுத்தினர்

* வரி ஏய்ப்பை தடுக்க, பன்னாட்டு நிறுவனங்களுக்கு குறைந்தது, 15 சதவீத வரி விதிக்க ஒப்புதல் அளிக்கப்பட்டது

* ஏழை நாடுகளுக்கு நன்கொடையாக, 100 கோடி, 'டோஸ்' கொரோனா தடுப்பூசி வழங்குவதாக அறிவிக்கப்பட்டது

* 'வட அயர்லாந்து, பிரிட்டனின் அங்கமல்ல என, ஐரோப்பிய கூட்டமைப்பு கூறுவது
கண்டிக்கத்தக்கது' என, பிரிட்டன் தரப்பில் தெரிவிக்கப்பட்டது

* கொரோனா தடுப்பூசிக்கான அறிவுசார் சொத்துரிமையில் தற்காலிக விலக்கு அளிக்க,
பிரதமர் மோடி, ஜி - 7 நாடுகளுக்கு கோரிக்கை வைத்தார்

* இந்த சலுகையால், உலக நாடுகளுக்கு கொரோனா தடுப்பூசி தாராளமாக கிடைக்கும் என, தென்னாப்பிரிக்கா, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகள் வலியுறுத்தின.


இயற்கையான கூட்டாளி!மாநாட்டின் ஒரு பகுதியாக, 'தாராள சமுதாயம் மற்றும் தாராள பொருளாதரம்' என்ற
தலைப்பில் நடந்த விவாதத்தின்போது, மோடி பேசியதாவது:சில நாடுகளின் சர்வாதிகார போக்கை எதிர்ப்பது, பயங்கரவாதத்துக்கு எதிரான நடவடிக்கைகள், பொய் தகவல்களை
மறுப்பது, பொருளாதார சீர்திருத்தம் என, பல வகைகளில், ஜி - 7 நாடுகளின் இயற்கையான
கூட்டாளியாக இந்தியா உள்ளது.

இந்தியாவில் ஜனநாயகம், கருத்து சுதந்திரம் பின்பற்றப்பட்டு வருகிறது. டிஜிட்டல் தொழில்நுட்பத்தால், ஆதார், நேரடி பண பலன் அளிப்பது என, சமூக மேம்பாட்டு நடவடிக்கைகள்
எடுக்கப்பட்டு வருகின்றன.தாராள சமூகத்துக்கு தொழில்நுட்பத்தால் சில அபாயமும் உள்ளது. தொழில்நுட்ப நிறுவனங்கள், சமூக வலைதளங்கள் ஆகியவை, பயனாளிகளின் சுதந்திரத்தை, தகவல்களை பாதுகாப்பதற்கு முக்கியத்துவம் தர வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.

'சமூக வலைதள பாதுகாப்பு தொடர்பான பிரதமரின் பேச்சுக்கு, ஜி - 7 நாடுகளின் தலைவர்கள் பாராட்டும், ஆதரவும் தெரிவித்துள்ளனர். ''இந்தோ - பசிபிக் பிராந்தியத்தில், சர்வதேச விதிகள் பின்பற்றப்படுவதை, அப்பிராந்திய நாடுகளுடன் இணைந்து செயல்படுத்த, இந்த நாடுகளின் தலைவர்கள் ஆதரவு தெரிவித்தனர்,'' என, நம் வெளியுறவு துறை கூடுதல் செயலர் பி.ஹரீஷ் தெரிவித்தார்.


சின்ன கூட்டம்: சீனா காட்டம்

உலகின் மிகப்பெரும் சக்தியாக மாறுவதற்கு சீனா முயற்சித்து வருகிறது. இதற்கு அமெரிக்கா எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. சீனாவின் வளர்ச்சிக்கு முட்டுக்கட்டை போடும் முயற்சியில் அமெரிக்கா ஈடுபட்டு வருகிறது.

ஜி - 7 மாநாட்டில், அதிகார மையமாக மாறும் சீனாவின் முயற்சிக்கு எதிராக விவாதிக்கப்பட்டது.
கொரோனா வைரஸ், சீனாவின் வூஹான் நகரில் உள்ள ஆய்வகத்திலிருந்து, வவ்வால் வாயிலாக, மனிதர்களுக்கு முதன் முதலாக பரவியதா என்பது குறித்து, ஜி - 7 நாடுகளின்
தலைவர்கள் விவாதித்தனர்.

மேலும், வர்த்தகம் தொடர்பான விஷயத்தில் சீனாவின் சவாலை சமாளிக்க தயாராக
இருப்பதாகவும், இந்த கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது.இது சீனாவுக்கு அதிருப்தியை
ஏற்படுத்தி உள்ளது. 'ஒரு சின்ன கூட்டம், உலக நாடுகளின் எதிர்காலத்தை தீர்மானிக்க
முடியாது' என, சீன வெளியுறவு துறை செய்தி தொடர்பாளர் கூறியுள்ளார்.சைக்கிள் பரிசு

பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன், சைக்கிளில் பயணம் செய்வதை மிகவும் விரும்புபவர். இந்நிலையில், பிரிட்டனில் நடக்கும், ஜி - 7 மாநாட்டில் நேரடியாக பங்கேற்றுள்ள அமெரிக்க அதிபர் ஜோ பைடன், பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சனை சந்தித்து பேசினார்.

அப்போது அவருக்கு, அமெரிக்காவின் பிலடெல்பியாவில் உள்ள ஒரு சிறிய நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட சைக்கிள் ஒன்றை, பைடன் பரிசாக வழங்கினார்.பிரிட்டனின் கொடியை நினைவுப்படுத்தும் வகையில், சைக்கிளில் நீல நிற பெயின்ட் அடிக்கப்பட்டுள்ளது.அதில் சிவப்பு, வெள்ளை நிறங்களில் அலங்காரங்கள் செய்யப்பட்டுள்ளன.

4.5 லட்சம் ரூபாய் மதிப்புள்ள இந்த சைக்கிளை பரிசாக வழங்கியதற்காக, பைடனுக்கு நன்றி தெரிவித்த ஜான்சன், அவருக்கு பிரிட்டனில், 19ம் நுாற்றாண்டில் நடந்த அடிமை ஒழிப்பு போராட்டம் தொடர்பான புகைப்படம் ஒன்றை வழங்கினார்.

Advertisement
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X