இன்றைய ‛கிரைம் ரவுண்ட் அப்| Dinamalar

இன்றைய ‛கிரைம் ரவுண்ட் அப்'

Updated : ஜூன் 14, 2021 | Added : ஜூன் 14, 2021
Share
இந்திய நிகழ்வுகள்8 போலீசார் 'சஸ்பெண்ட்'மடிகேரி: கர்நாடகாவின் மடிகேரி நகரில், சமீபத்தில் ஊரடங்கு விதிகளை மீறி வெளியே சுற்றியதாக, மனநிலை பாதிக்கப்பட்ட ராய் டிசோசா, 50, என்பவரை போலீசார் சரமாரியாக தாக்கினர். இதில் படுகாயம் அடைந்த அவர் பலியானதால், தாக்குதல் நடத்திய எட்டு போலீசார் 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டு உள்ளனர்.சாக்கடையில் மூழ்கிய கார்மும்பை:
today, crime, round, up, இன்றைய, கிரைம், ரவுண்ட் அப்,


இந்திய நிகழ்வுகள்

8 போலீசார் 'சஸ்பெண்ட்'

மடிகேரி: கர்நாடகாவின் மடிகேரி நகரில், சமீபத்தில் ஊரடங்கு விதிகளை மீறி வெளியே சுற்றியதாக, மனநிலை பாதிக்கப்பட்ட ராய் டிசோசா, 50, என்பவரை போலீசார் சரமாரியாக தாக்கினர். இதில் படுகாயம் அடைந்த அவர் பலியானதால், தாக்குதல் நடத்திய எட்டு போலீசார் 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டு உள்ளனர்.

சாக்கடையில் மூழ்கிய கார்

மும்பை: மஹாராஷ்டிராவின் மும்பையில், கடந்த சில நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது. அங்குள்ள கட்கோபர் பகுதியில், குடியிருப்பு வளாகத்தில் நிறுத்தப்பட்டு இருந்த கார், தரையின் மேற்பகுதி உடைந்ததால், பாதாள சாக்கடைக்குள் முழுவதுமாக மூழ்கியது. இந்த 'வீடியோ' சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

எஸ்.ஐ., பலாத்காரம்

மும்பை: மஹாராஷ்டிராவில், மும்பை பெண் போலீஸ் எஸ்.ஐ., ஒருவரிடம், சமூக வலைதளம் வாயிலாக பழகிய அவுரங்காபாதைச் சேர்ந்த வங்கி அதிகாரி, திருமணம் செய்து கொள்வதாக கூறி, பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். பின், அவர்கள் இணைந்திருக்கும், 'வீடியோ'க்களை சமூக வலைதளங்களில் வெளியிடுவதாக மிரட்டியுள்ளார். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்

நடனமாடிய திருநங்கை கைது

போபால்: மத்திய பிரதேசத்தின் போபாலில், திருநங்கை நானு விஸ்வாஸ் கின்னார், 24, ஒரு மசூதியில் நடனமாடியதுடன், அதை சமூக வலைதளங்களில், 'வீடியோ'வாக வெளியிட்டுள்ளார். மத உணர்வுகளை புண்படுத்தியதாக வழக்கு பதிவு செய்த போலீசார், நானு விஸ்வாசை கைது செய்தனர்.

மகள் கொலை: தந்தை தற்கொலை

சம்பல்பூர்: ஒடிசாவின் சம்பல்பூர் மாவட்ட கிராமத்தின் கூலித் தொழிலாளி சுகு குஜூர், 54, கொரோனாவால் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டார். சமீபத்தில், இரவில் கத்தியை எடுத்து மனைவி மற்றும் நான்கு மகள்களை சரமாரியாக குத்திய பின், தற்கொலை செய்து கொண்டார். இதில், மனைவி, மூன்று மகள்கள் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்; 3 வயது மகள் பலியானார்


தமிழக நிகழ்வுகள்


latest tamil news


வீட்டில் சாராயம் மூவர் கைது

விருதுநகர்-விருதுநகரில் வீட்டில் கள்ளச்சாராயம் தயாரிக்க வைத்திருந்த 20 லிட்டர் ஊறலை அழித்த போலீசார் மூவரை கைது செய்தனர்.விருதுநகர் அண்ணாநகர் பகுதியில் குண சேகரன் என்பவரது வீட்டில் போலீசார் சோதனை நடத்தினர். அங்கிருந்த 20 சாராய ஊறலை கொட்டி அழித்தனர். சாராயம் காய்ச்சிய அதே பகுதி தன்ராஜ் சாராயம் வாங்க வந்த ரோசல்பட்டி கஸ்துாரிபாய் நகரை சேர்ந்த மகாலிங்கம் 45 ஆரோக்கியசாமியை 41 கைது செய்தனர்.

20 சவரன் நகை ரூ 16 லட்சம் கொள்ளை: போலீஸ் வலை

கிருஷ்ணகிரி-கிருஷ்ணகிரி அருகே, 16 லட்சம் ரூபாய், 20 சவரன் நகைகளை கொள்ளையடித்து சென்றவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம், தாசரப்பள்ளியைச் சேர்ந்தவர் கோவிந்தராஜ், 60; விவசாயி. இவருக்கு லோகேஷ்குமார், 32 என்ற மகனும், இரு மகள்களும் உள்ளனர்.லோகேஷ்குமார், தந்தையுடன் கோபித்து கொண்டு, எட்டு ஆண்டுகளாக ஓசூரில் மனைவி, குழந்தைகளுடன் வசித்து வருகிறார்.இரண்டாவது மகள் புவனேஸ்வரி, 28, விபத்தில் கணவன் இறந்து விட்ட நிலையில், தந்தை வீட்டில் வசித்து வருகிறார்.

புவனேஸ்வரி, வீட்டின் முன்புறம் பெட்டிக்கடை வைத்துள்ளார்.இந்நிலையில், போலீசில் கோவிந்தராஜ் அளித்த புகார்:கடந்த 12ம் தேதி, பெட்டிக்கடையில் வியாபாரம் செய்து கொண்டிருந்த புவனேஸ்வரியிடம், முகத்தில் கர்சீப் கட்டிய இருவர் பைக்கில் வந்து, கூல்டிரிங்ஸ் கேட்டுள்ளனர்.வீட்டிற்குள் சென்று கூல்டிரிங்ஸ் எடுத்த புவனேஸ்வரி மீது மயக்க பொடியை துாவியவுடன் மயங்கி விழுந்துள்ளார்.

அப்போது, வீட்டின் பீரோவை திறந்து, 20.5 சவரன் தங்க நகை, அரிசி, ராகி தொட்டிகளில் இருந்த, 16 லட்சம் ரூபாய் உள்ளிட்டவற்றை கொள்ளையடித்து சென்றுள்ளனர்.நிலம் விற்ற பணம், அதை வைக்கும் இடம் ஆகிய விபரங்கள், என் மகன் லோகேஷ்குமாருக்கு மட்டுமே தெரியும். அவர் ஆட்களை வைத்து கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டிருக்கலாம்.இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.புவனேஸ்வரியிடம் போலீசார் விசாரித்ததில், முன்னுக்கு பின் முரணாக பதிலளித்து உள்ளார். கிருஷ்ணகிரி தாலுகா போலீசார், தொடர்ந்து விசாரிக்கின்றனர்.

சிறுமிக்கு குழந்தை; சிறுவனுக்கு காப்பு

திருப்புத்துார்--திருப்புத்துார் அருகே, 17 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய, 17 வயது சிறுவனையும், சிறுமியின் தந்தையையும் போலீசார் கைது செய்தனர்.

சிவகங்கை மாவட்டம், திருப்புத்துார் பகுதி கிராமத்தைச் சேர்ந்த, 17 வயது சிறுமி, பிளஸ் 1 படிக்கிறார். பிளஸ் 2 படிக்கும், 17 வயது சிறுவனுடன் பழக்கம் ஏற்பட்டு, சிறுமி கர்ப்பமானார்.வயிற்று வலியால் அவதிப்பட்ட சிறுமியை, 'ஸ்கேன்' செய்தபோது குழந்தை முழுமையாக வளர்ச்சி அடைந்திருந்தது தெரிந்தது. சிறுமியின் தந்தை, அத்தை ஆகியோர், சிறுமியை திருப்புத்துார் தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர்.

அறுவை சிகிச்சை மூலம் குழந்தையை எடுத்தனர். குழந்தையை மருத்துவமனை பணியாளர் ஒருவர் மூலம், குழந்தை இல்லாத பெண் ஒருவரிடம் வளர்க்க கொடுத்துள்ளனர். தகவலறிந்த மாவட்ட குழந்தைகள் நல அலுவலர் சைமன் ஜார்ஜ், திருப்புத்துார் மகளிர் போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் புவனேஸ்வரி, தனியார் மருத்துவமனையில் விசாரித்தார்.

இதையடுத்து, சிறுவன், சிறுமியின் தந்தை, அத்தை, மருத்துவர், மருத்துவ பணியாளர், குழந்தையை வளர்த்தவர் என ஆறு பேர் மீது வழக்கு பதிவு செய்தனர். சிறுவன் மற்றும் சிறுமியின் தந்தை கைது செய்யப்பட்டுள்ளனர்.குழந்தை, மாவட்ட குழந்தைகள் நல காப்பகத்திலும், சிறுமி, மகளிர் காப்பகத்திலும் ஒப்படைக்கப்பட்டனர். மேலும் விசாரணை நடக்கிறது.

190 கிலோ கஞ்சா பறிமுதல்; துப்பாக்கியுடன் மூவர் கைது

மதுரை-மதுரையில், ரவுடியின் கூட்டாளி உட்பட மூவர் கைது செய்யப்பட்டு, பிஸ்டல், ஐந்து தோட்டாக்கள், 190 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர்.

மதுரை அவனியாபுரம் பகுதியில், தனிப்படை போலீசார் சோதனையில், 'டூ - வீலரில்' வந்த இருவரிடம் விசாரித்தனர். அவர்கள் பூமிநாதன், 27; சகோதரர் சோலை, 34, என தெரிந்தது.பூமிநாதனிடம் இருந்து பிஸ்டல், ஐந்து தோட்டாக்கள், 1 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது. இவர்களை பின்தொடர்ந்து வந்த ஆட்டோவை, போலீசார் நிறுத்தியபோது அதில் இருந்த ஒருவர் தப்பி ஓடினார்.

ஆட்டோவில், 60 கிலோ கஞ்சா இருந்தது. ஆட்டோ டிரைவர் வில்லாபுரம் மாரிமுத்து, 42, என்பவரிடம் விசாரித்தபோது தப்பி ஓடியவர் காமராஜர்புரம் அருண்குமார் என தெரிந்தது.விசாரணையில், பூமிநாதனின் மாமா ரவுடி வெள்ளை காளிக்கு தெரிந்த சதீஷ், அவரது மைத்துனர் பிரகாஷ் மூலம் கஞ்சாவை மொத்தமாக வாங்கி விற்றது தெரிந்தது. அவனியாபுரம் திருப்பதி நகரில் வசிக்கும் அருண்குமார் மாமனார் முனியசாமி வீட்டில் சோதனையிட்டு, 130 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. பூமிநாதன், சோலை, மாரிமுத்து கைது செய்யப்பட்டனர்; மற்றவர்களை தேடி வருகின்றனர்.திருத்தப்பட்ட செய்தி... இதையே பயன்படுத்தவும்.

கார் கவிழ்ந்து விபத்து 2 பாதிரியார்கள் பலி

ஆம்பூர்-ஆம்பூர் அருகே, கார் பள்ளத்தில் கவிழ்ந்து, இரண்டு பாதிரியார்கள் உயிரிழந்தனர்.கர்நாடக மாநிலம், பெங்களூரைச் சேர்ந்தவர்கள் விக்டர் மோகன், 65; தாவீது, 60; சாம்சன்,60. அங்குள்ள கிறிஸ்துவ தேவாலயத்தில் பாதிரியார்கள்.மூவரும், துக்க நிகழ்ச்சியில் பங்கேற்க,'இன்னோவா' காரில், 11ம் தேதி சென்னை சென்றனர். நேற்று முன்தினம் இரவு, பெங்களூருக்கு காரில் கிளம்பினர். காரை சாம்சன் ஓட்டினார்.சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில், ராணிப்பேட்டை மாவட்டம், ஆம்பூர் அருகே வெங்கிலியில் நள்ளிரவு, 12:00 மணிக்கு வந்தபோது, பின்பக்க டயர் பஞ்சராகி, சாலை தடுப்பில் மோதி, எதிர்புற சாலையில் சென்று பள்ளத்தில் கவிழ்ந்தது.இதில் விக்டர் மோகன், தாவீது சம்பவ இடத்திலேயே இறந்தனர்.படுகாயமடைந்த சாம்சன், வேலுார் சி.எம்.சி., மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுஉள்ளார்.

வங்கியில் இருந்து பேசுவதாக அரசு அதிகாரியிடம் 'ஆட்டை'

பெரம்பூர் : பெரம்பூர் அரசு அதிகாரியிடம், வங்கியில் இருந்து பேசுவதாக கூறி, 1 லட்சம் ரூபாய் ஆட்டை போட்ட மர்மநபர் குறித்து, போலீசார் விசாரிக்கின்றனர்.

பெரம்பூர், ஜவஹர் நகரைச் சேர்ந்தவர் சத்யநாராயணன், 55. இவர், தலைமை செயலகத்தில் இணை செயலராக பணியாற்றி வருகிறார். நேற்று முன்தினம் அவரது மொபைல் போன் எண்ணுக்கு, மர்மநபர் தொடர்பு கொண்டு பேசினார்.அப்போது, சத்யநாராயணன் கணக்கு வைத்திருக்கும் குறிப்பிட்ட வங்கியின் விசாரணை பிரிவு அலுவலர் பேசுவதாக அறிமுகப் படுத்தி கொண்டார்.தொடர்ந்து, 'வாடிக்கையாளரின் வங்கி கணக்கு பாதுகாப்புக்காக, கூடுதல் விபரங்களை பதிவு செய்ய ஒத்துழைக்க வேண்டும்' எனக் கூறினார். அவரது பேச்சை, உண்மை என்று நம்பிய சத்யநாராயணன், மற்ற விபரங்களுடன், ரகசிய குறியீட்டு எண்ணையும் தெரிவித்துள்ளார்.
சில நிமிடத்திற்கு பின், அவரது கணக்கில் இருந்து, 1 லட்சம் ரூபாய் விடுவிக்கப்பட்டது குறித்த குறுந்தகவல், அவரின் மொபைல்போனுக்கு வந்தது.அப்போது தான் ஏமாற்றப்பட்டது சத்யநாராயணனுக்கு தெரியவந்தது. இது குறித்து பெரவள்ளூர் போலீசில் புகார் செய்தார்; போலீசார் விசாரிக்கின்றனர்.

20 கடைகளுக்கு நகராட்சி அபராதம்

திருத்தணி, : திருத்தணியில் சமூக விலகல் மற்றும் அனுமதியின்றி திறந்த, 20 கடைகளுக்கு அபராதம் விதித்து, நகராட்சி மற்றும் வருவாய் துறையினர் எச்சரித்தனர்.

கொரோனா தொற்று காரணமாக முழு ஊரடங்கில் இருந்து சில தளர்வுகளுடன் வரும், 21ம் தேதி வரை கடைகள் செயல்படலாம் என, அரசு அறிவித்துள்ளது.அந்த வகையில், திருத்தணி நகரத்தில் காய்கறி, மளிகை, பூ மற்றும் பழக் கடைகள் காலை, 6:00 மணி முதல் மாலை, 5:00 மணி வரை திறப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது.இந்நிலையில், திருத்தணி பஜாரில் மக்கள் அதிகளவில் கூட்டம் இருந்தன; சமூக விலகல் இல்லை என, திருத்தணி வருவாய் துறையினர் மற்றும் நகராட்சி அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து, திருத்தணி தாசில்தார் ஜெயராணி, வருவாய் ஆய்வாளர் உதயகுமார், நகராட்சி துப்புரவு ஆய்வாளர் மாரிமுத்து மற்றும் ஊழியர்கள், திருத்தணி பஜார், பூ மார்க்கெட் மற்றும் ம.பொ.சி.சாலையில் ஆய்வு செய்த போது சமூக விலகல் கடைப்பிடிக்காத, 10 கடைகளுக்கும், தலா, 500 ரூபாய் வீதம் அபராதம் விதிக்கப்பட்டது.இது தவிர மொபைல்போன், துணிக்கடை உட்பட, 10 கடைகளுக்கு, 500 ரூபாய் முதல், 5 ஆயிரம் ரூபாய் வரை, 20 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து எச்சரிக்கப்பட்டது.


உலக நிகழ்வுகள்

பீரங்கி தாக்குதல்: 13 பேர் பலி

பெய்ரூட்: மேற்காசியாவைச் சேர்ந்த சிரியாவில், துருக்கியின் கட்டுப்பாட்டில் உள்ள அப்ரின் நகரில் உள்ள அல் - ஷிபா மருத்துவமனையில் ராக்கெட் மற்றும் பீரங்கி குண்டு தாக்குதல் நடத்தப்பட்டது. இதில், 13 பேர் உயிரிழந்தனர். 27 பேர் படுகாயம் அடைந்தனர். இந்த தாக்குதலுக்கு, குர்திஷ் பயங்கர வாதிகள் மீது, துருக்கி குற்றஞ்சாட்டியுள்ளது.


latest tamil news


தீ விபத்தில் 11 பேர் உயிரிழப்பு

பீஜிங்: சீனாவின் வூபே மாகாணம், சியான் நகரில் உள்ள யன்வூ சந்தையில், 'காஸ்' சிலிண்டர்கள் வெடித்து பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதில், பல கட்டடங்கள் இடிந்து விழுந்தன. இந்த விபத்தில், 11 பேர் உயிரிழந்தனர். 37 பேர் படுகாயம் அடைந்தனர். விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

வீட்டில் 17 எலும்பு கூடுகள்

மெக்சிகோ சிட்டி: மெக்சிகோ நாட்டில், ஒரு பெண்ணை கத்தியால் குத்தி கொலை செய்த குற்றத்திற்காக, 72 வயது முதியவர் ஒருவர் கைது செய்யப்பட்டார். அவரிடம் நடத்திய விசாரணையில், ஏற்கனவே பலரை கொலை செய்திருப்பது தெரியவந்தது. இதையடுத்து, அவர் வீட்டை தோண்டியதில், 17 பேரின் எலும்பு கூடுகளை போலீசார் கண்டுபிடித்துள்ளனர்.

Advertisement
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X