உலக, நாடு, தமிழக நடப்புகள் பற்றி, வாசகர்கள் தினமலர் நாளிதழில் எழுதிய கடிதம் :
எஸ்.ராமகிருஷ்ணன், கே.கே.புதுார், கோவையிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்:
விவசாய தேவைக்காக ஒருவர், தன் நிலத்தில் கிணறு தோண்ட முடிவெடுத்தார். 30 அடி ஆழம் வெட்டினார்; தண்ணீர் வரும் அடையாளம் தெரியவில்லை.எனவே, பக்கத்தில் 40 அடி ஆழத்திற்கு இன்னொரு கிணற்றை தோண்டினார்; அதிலும் பலன் இல்லை. அடுத்த இடத்தில், 50 அடிக்கு கிணறு தோண்ட ஆரம்பித்தார்.
இக்கதையைப் போலத் தான் இருக்கிறது, தமிழக அரசு கொரோனாவை கட்டுப்படுத்த எடுக்கும் முயற்சிகள்!முதலில், சில மணி நேரங்கள் கடை திறப்புக்கு அனுமதி; பின், ஊரடங்கு; இரண்டு நாட்களுக்கு ஊரடங்கு விலக்கு; அடுத்து தளர்வுகள் அறிவிப்பு என, தமிழக அரசு விளையாடுகிறது.இப்போது மளிகை, காய்கறி, 'டாஸ்மாக்' கடைகளுக்கு அனுமதி என, வரிசைகட்டி உத்தரவுகள் வருகின்றன.இந்த குழப்பமான உத்தரவுகளால், மக்களின் நடமாட்டம் குறையவில்லை.

எப்போது ஊரடங்கு அறிவிப்பர் என தெரியாததால், மளிகை, காய்கறி பொருட்களை, மக்கள் வாங்கி குவிக்கின்றனர்.தமிழக அரசு தெளிவான, உறுதியான முடிவு எடுக்க வேண்டும். கொரோனா பரவல் குறைந்து வருவதால், மேலும் இரு வாரங்கள் முழு ஊரடங்கு என அறிவித்து, அதை முறையாக அமல்படுத்த வேண்டும்.இதனால், மக்கள் மிகவும் சிரமப்படுவர் என்பதில் சந்தேகமே இல்லை; ஆனால், அவர்கள் உயிருடன் இருப்பர்.