சென்னை: மக்கள் கோவிட்டில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றும், மக்கள் துணை இருந்தால் வரும் காலங்களில் படிப்படியாக ஊரடங்கு தளர்த்தப்பட்டு பள்ளி, கல்லூரிகள் விரைவில் திறக்க ஆவன செய்யப்படும் என முதல்வர் ஸ்டாலின் இன்று (ஜூன் 14) வெளியிட்டுள்ள வீடியோவில் கூறியுள்ளார்.

அவர் மேலும் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் கொரானா கட்டுக்குள் வந்துள்ளது. ஆனால் முழு அளவில் குறையவில்லை. மக்கள் ஒத்ழைப்பு அளித்தால் தான் நாம் ஒழிக்க முடியும். தொற்றால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை அரசு நடவடிக்கையால் 15 ஆயிரத்திற்கும் கீழ் குறைந்துள்ளது. மருத்துவமனைகளில் ஆக்சிஜன் வசதிகள் உள்ளது. மக்களுக்கு உடனடி சிகிச்சை கிடைக்க வழி செய்துள்ளோம். சங்கிலிப்பரவலை உடைக்க முழு ஊரடங்கு அறிவித்தோம். மக்கள் முறையாக கடைபிடித்ததால் ஒரளவுக்கு கட்டுப்பட்டுள்ளது.

மக்களின் எண்ணங்களையே அரசு செயல்படுத்துகிறது. மக்கள் ஒத்ழைத்ததால்தான் குறைந்துள்ளது. மக்கள் மிக எச்சரிக்கையாக இருக்க வேண்டும். அரசின் நடவடிக்கைகளுக்கு மக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். வாழ்வாதாரம் பாதிக்கக்கூடாது என்பதில் கவனமாக உள்ளது.
போலி மதுவை ஒழிக்கவே டாஸ்மாக் கடைகள்
தளர்வுகளுக்கான உண்மையான நோக்கத்தை மக்கள் உணர வேண்டும். வர்த்தகர்கள் விதிமுறைகளை பின்பற்றி செயல்பட வேண்டும். தேநீர் கடைகளில் மக்கள் கூட்டமாக கூட வேண்டாம். பல்வேறு விமர்சனங்கள் மத்தியில் பல்வேறு விமர்சனங்கள் மத்தியில் டாஸ்மாக் கடைகள் திறந்துள்ளோம். போலி மது, கள்ள மது போன்ற தீமைகள் தமிழ்நாட்டை சீரழித்து விடக்கூடாது என்ற நோக்கத்தில் தான் திறந்துள்ளோம். இங்கு முழு கட்டுப்பாடுகளை பின்பற்ற வேண்டும். கொரோனா கட்டுப்பாடு விதிமுறைகள் மீறப்படுமானால் எந்நேரமும் மதுக்கடைகளை மூடலாம் என எச்சரிக்கையாக தெரிவிக்கிறேன்.

விரைவில் பள்ளி, கல்லூரி
காவல் துறை கண்காணிப்பு இல்லாமல் மக்கள் கட்டுப்பாட்டோடு வாழ வேண்டும். இதுவே எனது விருப்பம். முழு ஊரடங்கிற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.பொது போக்குவரத்து துவங்கப்பட வேண்டும். பள்ளி, கல்லூரிகள் விரைவில் துவக்கப்பட வேண்டும். இவ்வாறு ஒன்று ஒன்றாக நடக்க வேண்டுமென்றால் மக்கள் துணை அவசியம். தொற்று பரவலை குறைப்பதில் மக்கள் பங்கு அவசியம். இதற்கு மக்கள் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.
இவ்வாறு ஸ்டாலின் கூறினார்.