மும்பை: 'பிரசாந்த் கிஷோரின் துணையின்றி கடந்த 2019 மக்களவைத் தேர்தலில் பா.ஜ., தனிப்பெரும் கட்சியாக 304 இடங்களில் வெற்றது; வரும் 2024 தேர்தலிலும் மகத்தான வெற்றி பெறும்' என, மத்திய அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே தெரிவித்துள்ளார்.
அண்மையில் முடிந்த ஐந்து மாநில சட்டசபை தேர்தலில் தமிழகம் மற்றும் மேற்கு வங்க மாநிலங்கள் முக்கியத்துவம் பெற்றன. இங்கு திமுக மற்றும் திரிணமூல் காங்கிரசுக்காக பிரச்சார வியூகதை பிரஷாந்த் கிஷோர் அமைத்தார். அந்த தேர்தலுக்குப் பின், அரசியல் வியூகப் பணியில் இருந்து விலகப் போவதாக பிரசாந்த கிஷோர் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் தற்போது பிரசாந்த் கிஷோர் மும்பையில் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவாரை அண்மையில் சந்தித்துப் பேசினார். இது, 'மிஷன் 2024' எனப்படும் அடுத்த நாடாளுமன்றத் தேர்தலை ஒட்டிய திட்டமிடல் என தகவல் வெளியானது. பா.ஜ.,வை எதிர்த்து 2024 நாடாளுமன்றத் தேர்தலில் வலிமையுடன் போராட எதிர்க் கட்சிகள் அனைத்தும் ஒன்றிணைப்பது பற்றியும் எதிர்க்கட்சிகளின் சார்பில் பிரதமர் வேட்பாளர் குறித்து இந்தச் சந்திப்பில் விவாதிக்கப்பட்டதாகவும் தகவல் வெளியாகின.
இதுகுறித்து இந்திய குடியரசுக் கட்சித் தலைவரும் மத்திய அமைச்சருமான ராம்தாஸ் அத்வாலே கூறுகையில், 'கடந்த 2019 மக்களவைத் தேர்தலில் பிரசாந்த் கிஷோரின் துணையின்றி தான் பா.ஜ., தனிப்பெரும் கட்சியாக 303 இடங்களில் வெற்றி பெற்றது. 2024 மக்களவைத் தேர்தலில் பிரதமர் மோடியின் தலைமைக்கே மக்கள் ஆதரவளிப்பார்கள். பாஜ தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி மீண்டும் வெற்றி பெற்று ஆட்சியமைக்கும். பிரதமராக மோடி மீண்டும் பதவியேற்பார்' என்றார்.