சென்னை: 10ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழில் 'அனைவரும் தேர்ச்சி' என்று இருக்கும், மதிப்பெண்கள் இருக்காது என்பதே எங்கள் முதல்கட்ட பேச்சுவார்த்தையில் உள்ளது என தமிழக கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
தமிழகத்தில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளதால் 11-ம் வகுப்பு மாணவர் சேர்க்கை தொடங்கி உள்ளது. 9-ம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. கோவிட் காலத்தில் மாணவர் சேர்க்கை நடைபெறுவதால் விதிமுறைகளை மாணவர்கள் கண்டிப்பாக கடைப்பிடிக்க வேண்டும். தளர்வில்லாத 11 மாவட்டங்களில் இப்போதைக்கு மாணவர் சேர்க்கை இல்லை. தற்போதைய நிலையில் மாணவர்களை பள்ளிக்கு வரவழைத்து பாடம் நடத்தும் நிலை குறித்து யோசிக்கவில்லை. கல்வி தொலைக்காட்சி, வாட்ஸ் ஆப் வழியாக மாணவர்களுக்கு பாடம் நடத்தப்பட்டு வரும் முறை தொடரும்.

ஒரு வாரத்தில் மாணவர்களுக்கு பாடப்புத்தகங்கள் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். 10-ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழில் 'அனைவரும் தேர்ச்சி' என்று இருக்கும், மதிப்பெண்கள் இருக்காது என்பதே எங்கள் முதல்கட்ட பேச்சுவார்த்தையில் உள்ளது. தனியார் பள்ளிகள் 75% மட்டுமே கல்வி கட்டணம் வசூலிக்க வேண்டும். அந்த 75 சதவீத கட்டணத்தை 30 சதவீதம், 45 சதவீதம் என இரு தவணைகளாக வசூலிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதற்குமேல் ஏதேனும் தனியார் பள்ளிகள் கட்டணம் வசூலித்தால் எங்களுக்கு தகவல் தெரிவிக்கும்பட்சத்தில் நடவடிக்கை எடுப்போம். இவ்வாறு அவர் கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE