தி.மு.க., அரசுடன் சுமுக உறவு: பிரதமர் மோடியின் விருப்பம்| Dinamalar

தி.மு.க., அரசுடன் சுமுக உறவு: பிரதமர் மோடியின் விருப்பம்

Updated : ஜூன் 16, 2021 | Added : ஜூன் 14, 2021 | கருத்துகள் (67)
Share
தமிழக முதல்வராக கடந்த மாதம் ஸ்டாலின் பதவியேற்றார். தேர்தல் பிரசாரத்தின் போது, பா.ஜ.,வுக்கு எதிராகவும், பிரதமர் மோடிக்கு எதிராகவும், ஸ்டாலின் கடும் விமர்சனங்களை முன்வைத்தார். ஆட்சியில் அமர்ந்த பின், சிறு பிரச்னைகள் ஏற்பட்டுள்ளன.இந்நிலையில், பிரதமர் மோடியை சந்திக்க, தமிழக முதல்வர் தரப்பில் நேரம் கேட்கப்பட்டது. இதன்படி, நாளை மறுதினம் காலை, இந்த சந்திப்பு நடக்க உள்ளது.
DMK, BJP, PM Modi, CM Stalin, Modi, Stalin

தமிழக முதல்வராக கடந்த மாதம் ஸ்டாலின் பதவியேற்றார். தேர்தல் பிரசாரத்தின் போது, பா.ஜ.,வுக்கு எதிராகவும், பிரதமர் மோடிக்கு எதிராகவும், ஸ்டாலின் கடும் விமர்சனங்களை முன்வைத்தார். ஆட்சியில் அமர்ந்த பின், சிறு பிரச்னைகள் ஏற்பட்டுள்ளன.

இந்நிலையில், பிரதமர் மோடியை சந்திக்க, தமிழக முதல்வர் தரப்பில் நேரம் கேட்கப்பட்டது. இதன்படி, நாளை மறுதினம் காலை, இந்த சந்திப்பு நடக்க உள்ளது. நாளை மாலை, சிறப்பு விமானத்தில் டில்லி வருகிறார் ஸ்டாலின். மூன்று நாட்கள் அவர் டில்லியில் தங்க உள்ளார்.


35 முக்கிய விஷயங்கள்


நாளை மறுதினம் காலை, லோக் கல்யாண் மார்க்கில் உள்ள பிரதமரின் இல்லத்தில், மோடியை சந்திக்கிறார் ஸ்டாலின்.இந்த சந்திப்பின் போது, ஸ்டாலின் என்னென்ன பிரச்னைகள் எழுப்புவார் என, 35 முக்கிய விஷயங்களை, பிரதமர் அலுவலகம் பட்டியலிட்டுள்ளது. இவை குறித்து பிரதமரிடம், அவரது முதன்மைச் செயலர், டாக்டர் பி.கே. மிஸ்ரா நாளை விளக்க உள்ளார்.

நிர்வாகம், அரசியல் மற்றும் தனிப்பட்ட முறையில் முக்கியத்துவம் வாய்ந்ததாக இந்த சந்திப்பு அமைய உள்ளது. ஒரு மணி நேர சந்திப்பின் போது, தமிழக தலைமைச் செயலர் இறையன்பு, மூத்த அமைச்சர் துரைமுருகன் ஆகியோர் உடனிருப்பர்.அதைத் தொடர்ந்து ஸ்டாலினுடன், பிரதமர் தனியாக பேசுவதற்காக 10 நிமிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. 'தமிழக அரசுடன் சுமுகமான உறவு இருக்க வேண்டும் என்பதே மோடியின் விருப்பம்' என, பா.ஜ., மூத்த தலைவர் ஒருவர் தெரிவித்தார்.


சிறப்பு கவுரவம்


அதை நிரூபிக்கும் வகையில், டில்லி தமிழ்நாடு இல்லத்தில் தங்கும் ஸ்டாலினை அழைத்து வருவதற்கு, தன் சிறப்பு பாதுகாப்பு படையின், 'புல்லட் புரூப்' காரை மோடி அனுப்புகிறார். இதுபோன்ற சிறப்பு கவுரவம், முன்னாள் முதல்வர்கள் கருணாநிதி, ஜெயலலிதாவைத் தொடர்ந்து, ஸ்டாலினுக்கு கிடைக்க உள்ளது. ஸ்டாலினின் பயணத்தை, தி.மு.க., மூத்த தலைவர் டி.ஆர். பாலு ஒருங்கிணைத்து வருகிறார். அவர் ஏற்கனவே டில்லியில் உள்ளார்.

மூத்த அமைச்சர் துரைமுருகன் இன்று டில்லி வருகிறார். தமிழக அரசின் டில்லி சிறப்பு பிரதிநிதியாக நியமிக்கப்பட்டுள்ள, முன்னாள் எம்.பி.,யான ஏ.கே.எஸ். விஜயனும், இன்று வருகிறார். ஸ்டாலினுக்கு, டில்லி விமான நிலையத்தில் பிரமாண்ட வரவேற்பு அளிக்க, தி.மு.க., திட்டமிட்டுள்ளது. இதற்காக சென்னையில், 'போஸ்டர்'கள் அச்சிடப்பட்டு, டில்லி அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. டில்லியின் முக்கிய சாலைகளில் இவை ஒட்டப்பட உள்ளன. இதைத் தவிர மூன்று இடங்களில், 'கட் அவுட்' வைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.

கடந்த 2017ல், சென்னை கோபாலபுரத்துக்கு, மறைந்த தி.மு.க., தலைவர் கருணாநிதியின் உடல்நிலை குறித்து விசாரிக்க, மோடி வந்தார். அப்போது ஸ்டாலினையும் அவர் சந்தித்தார். ஸ்டாலினுக்கு மிகப்பெரிய வரவேற்பு அளிக்க, பிரதமர் மோடி முடிவு செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது.தமிழகத்தைச் சேர்ந்த மூத்த ஐ.ஏ.எஸ்., அதிகாரியான அமுதா, பிரதமர் அலுவலகத்தில் கூடுதல் செயலராக உள்ளார். ஸ்டாலின் எழுப்ப வாய்ப்புள்ள பிரச்னைகள் குறித்த, -'புல்லட் பாயின்ட்'களை அவர் தொகுத்துள்ளார்.


அமைச்சர்களுடன் என்ன பேச்சு?


தமிழக முதல்வர் ஸ்டாலின், தன் பயணத்தின் போது, பல மத்திய அமைச்சர்களை சந்தித்து பேச உள்ளார். அவர் என்னென்ன பிரச்னைகள் குறித்து பேசலாம் என, அதிகாரிகள் பட்டியலிட்டுள்ளனர்.


உள்துறை அமைச்சர் அமித் ஷா


கொரோனா தடுப்பூசி இயக்க ஒருங்கிணைப்பாளராக உள்ளதால், தமிழகத்தின் தடுப்பூசி தேவை குறித்து பேசலாம். என்.ஐ.ஏ., எனப்படும் தேசிய புலனாய்வு அமைப்பு அலுவலகம் அமைக்க, சென்னையில் இடம் கேட்கப்பட்டது தொடர்பாக பேசலாம். தமிழக டி.ஜி.பி.,யாக உள்ள திரிபாதி, இம்மாதத்தில் ஓய்வு பெறுகிறார். புதிய டி.ஜி.பி., நியமனம் தொடர்பாக பேசப்படலாம்.


ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங்


தமிழகத்தில் ராணுவ தொழில்பாதை அமைப்பது குறித்து விவாதிக்கலாம். விமானக் கண்காட்சி தொடர்பாகவும் பேசப்படலாம். அண்டை நாடான இலங்கையில், சீனா துறைமுகம் அமைப்பதால் தமிழகத்துக்கு உள்ள பாதுகாப்பு பிரச்னை தொடர்பாக பேசப்படலாம்.


நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்


ஜி.எஸ்.டி., எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரியின் கீழ், நிலுவையில் உள்ள இழப்பீட்டு தொகையை விரைந்து அளிப்பது, கடன்கள் தள்ளுபடி குறித்து விவாதிக்கலாம்.


ரயில்வே மற்றும் வர்த்தக அமைச்சர் பியுஷ் கோயல்


ரயில்கள் வாயிலாக ஆக்சிஜன் அனுப்பி உதவியதற்காக, பியுஷ் கோயலுக்கு நன்றி தெரிவிப்பார். மத்திய அரசின் ஆதரவைப் பெறுவதற்காக, மோடியின் நம்பிக்கைக்கு உரிய பியுஷ் கோயலுடன், முதல்வர் ஸ்டாலினுக்கு நல்ல நட்பை ஏற்படுத்த, டி.ஆர்.பாலு முயற்சித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


யார் யாருடன் சந்திப்பு?


நாளை மாலை டில்லி வரும் ஸ்டாலின், 17, 18ம் தேதிகளில் பலரை சந்திக்க திட்டமிட்டுள்ளார். பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து, மாநிலத்தின் தேவைகள் குறித்து பேச உள்ளார். ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடுவையும் அவர் சந்திக்கிறார்; மத்திய அமைச்சர்கள் சிலரையும் சந்திக்கிறார். அரசியல் ரீதியில், காங்., தலைவர் சோனியா, முன்னாள் தலைவர் ராகுல், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பொதுச் செயலர் சீத்தாராம் யெச்சூரி ஆகியோரை சந்திக்க உள்ளார்.


கட்டுமானப் பணி ஆய்வு


லோக்சபாவில், குறைந்தபட்சம் 10 எம்.பி.,க்கள் உள்ள கட்சிகளுக்கு, டில்லியில் அலுவலகம் அமைக்க இடம் ஒதுக்கப்பட்டது. அதன்படி, 2013ல் தி.மு.க.,வுக்கு இடம் ஒதுக்கப்பட்டது. பா.ஜ., தலைமை அலுவலகத்துக்கு அருகில் உள்ள இந்த இடத்தில், தி.மு.க., அலுவலக கட்டுமானப் பணிகள் நடந்து வருகின்றன. வரும் 17ம் தேதி மாலை, 5:00 மணிக்கு கட்டுமானப் பணிகளை, ஸ்டாலின் பார்வையிட உள்ளார்.

- புதுடில்லி நிருபர் -

Advertisement
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X