சொத்தை அமுக்க பார்த்தவரு டிரான்ஸ்பர்: போலீசுக்கு இனி தான் இருக்கு பரேடு| Dinamalar

சொத்தை அமுக்க பார்த்தவரு டிரான்ஸ்பர்: போலீசுக்கு இனி தான் இருக்கு 'பரேடு'

Updated : ஜூன் 15, 2021 | Added : ஜூன் 15, 2021
Share
வீட்டு மொட்டை மாடியில், 'வாக்கிங்' சென்று கொண்டிருந்தாள் சித்ரா.அங்கு வந்த மித்ரா, ''என்னக்கா, ஊரடங்கு அமலில் இருக்கறதால, வீட்டிலேயே 'வாக்கிங்' போறீங்களா,'' என, கேட்டபடி, ''கலெக்டரையும், கார்ப்பரேஷன் கமிஷனரையும் மாத்திட்டாங்களாமே,'' என, பேச்சை ஆரம்பித்தாள்.''ஆமாப்பா, மத்திய தேர்தல் ஆணையம் நியமிச்ச அதிகாரிங்கிறதுனால, கலெக்டரை எப்படியும்
  சொத்தை அமுக்க பார்த்தவரு டிரான்ஸ்பர்: போலீசுக்கு  இனி தான் இருக்கு 'பரேடு'

வீட்டு மொட்டை மாடியில், 'வாக்கிங்' சென்று கொண்டிருந்தாள் சித்ரா.அங்கு வந்த மித்ரா, ''என்னக்கா, ஊரடங்கு அமலில் இருக்கறதால, வீட்டிலேயே 'வாக்கிங்' போறீங்களா,'' என, கேட்டபடி, ''கலெக்டரையும், கார்ப்பரேஷன் கமிஷனரையும் மாத்திட்டாங்களாமே,'' என, பேச்சை ஆரம்பித்தாள்.

''ஆமாப்பா, மத்திய தேர்தல் ஆணையம் நியமிச்ச அதிகாரிங்கிறதுனால, கலெக்டரை எப்படியும் மாத்திடுவாங்கன்னு, எல்லா தரப்பிலும் எதிர்பார்த்துக்கிட்டு இருந்தாங்க. மாத்திட்டாங்க,''

''கார்ப்பரேஷன் கமிஷனரா இருந்த குமாரவேல் பாண்டியனை மாத்த மாட்டாங்கன்னு சொல்லிக்கிட்டு இருந்தாங்களே,''

''நம்ம மாவட்டத்துல இருக்கற, 10 தொகுதியிலும் அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்களே இருக்காங்க. அ.தி.மு.க., ஆட்சிக்காலத்துல நியமிச்சவருங்கிறதுனால மாத்திட்டாங்க. அவருக்கிருந்த அரசியல் செல்வாக்குல, கலெக்டர் பதவி கெடைச்சிடுச்சு,''

''இருந்தாலும், அஞ்சு நாள், 'வெயிட்டிங் லிஸ்ட்'டுல வச்சிருந்து, 'போஸ்டிங்' போட்டிருக்காங்க. அதனால, இலைக்கட்சி ஆட்சியில விதிமீறி நடந்த அதிகாரிகள் பலரும், அரண்டு போயிருக்காங்களாம்,''

''அதிருக்கட்டும்! போலீஸ் டிபார்ட்மென்ட்டுல எல்லா அதிகாரிகளையும் மாத்திட்டாங்களே,''

''ஆமாப்பா, மேற்கு மண்டல ஐ.ஜி.,யில இருந்து, கமிஷனர், துணை கமிஷனர், டி.எஸ்.பி., - உதவி கமிஷனருன்னு, ஒருத்தரை கூட விட்டு வைக்காம மாத்திட்டாங்க,''

''இலைக்கட்சி பிரமுகர்களுடன் தொடர்பு வச்சுக்கக் கூடாதுன்னு, பலரையும் கடலோர மாவட்டங்களுக்கும், தென் மாவட்டங்களுக்கும் துாக்கியடிச்சிருக்காங்களாம். அவுங்க மேல, அரசியல் முத்திரை குத்துனதுனால, டிரான்ஸ்பராகி போன அதிகாரிகள் பலரும் அதிருப்தியில இருக்காங்களாம்,''

''புதுசா வந்திருக்கிற அதிகாரிகளுக்கு ஏதாச்சும், 'அசைன்மென்ட்' கொடுத்திருக்காங்களா, என்ன?''

''யெஸ், மித்து! ஒவ்வொரு அதிகாரிக்கும் சில ரகசிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருக்குதாம்; விசாரிச்சிக்கிட்டு இருக்காங்க. கொரோனா பிரச்னை முடிவுக்கு வந்ததும், ஏகப்பட்ட வேலை நடக்கப் போறதா, போலீஸ்காரங்க மத்தியில பேசிக்கிறாங்க,''

''நம்மூர்ல வேலைபார்த்த உதவி கமிஷனரை, ஆவண காப்பகத்துக்கு மாத்திட்டாங்களாமே,''

''அதுவா, ரேஸ்கோர்ஸ்ல பல கோடி ரூபாய் மதிப்புல சொத்துக்கு சொந்தமான ஒரு மூதாட்டி, கமிஷனரா டேவிட்சன் இருந்தப்ப, உதவி கேட்டு வந்திருக்காரு. உதவி கமிஷனர் அந்தஸ்துல ஒரு அதிகாரியை அனுப்பியிருக்காரு. டேவிட்சன், இட மாறுதலாகி போனதும், அந்த சொத்தையே அபகரிக்கப் பார்த்தாராம் அந்த உதவி கமிஷனர்,''

''சி.எம்., பாதுகாப்புக்கு வந்திருந்த டேவிட்சனை, மறுபடியும் சந்திச்ச மூதாட்டி, நடந்த சம்பவத்தை சொல்லி பொங்கிட்டாராம். சென்னைக்கு திரும்பி போனதும், முதல் வேலையா, அந்த அதிகாரியை, தென் மாவட்டத்துல இருக்கற, ஆவண காப்பகத்துக்கு மாத்திட்டாராம்,''

''ஓகோ...கொஞ்ச நாளா கஞ்சா சேல்ஸ் ஜாஸ்தியாகிடுச்சாமே,''

''ஆமாப்பா, ரீசன்ட்டா, 25 வியாபாரிகளை கைது செஞ்சிருக்காங்க. அதுல, கல்லுாரி படிப்பு முடிச்ச, பாதியில கைவிட்ட இளைஞர்களே அதிகமா இருந்திருக்காங்க; இளைஞர்களை குறி வச்சு, போதை பொருட்களை கடத்துற கும்பல், நம்மூருக்குள்ள பதுங்கி இருக்காம். ஆணி வேரை கண்டுபிடிக்கற முயற்சியில, போலீஸ் ஆபீசர்ஸ் இருக்காங்களாம்,'' என்ற சித்ரா, நடைபயிற்சியை முடித்து விட்டு, கீழிறங்கினாள்.

பின்தொடர்ந்து வந்த மித்ரா, ''கொரோனா பரவல் தடுக்க, கண்காணிப்பு அதிகாரிகளின் கிடுக்கிப்பிடியால், டாக்டர்கள் அரண்டு போயிட்டாங்களாமே,'' என, கிளறினாள்.

''ஆமா, மித்து! கவர்மென்ட் ஆஸ்பத்திரியிலும், இ.எஸ்.ஐ., ஆஸ்பத்திரியிலும் ஒரு இடம் பாக்கி இல்லாம, சுத்திப்பார்த்தாங்களாம். லிப்ட் இயங்காம இருந்தது; ஆர்.ஓ., பிளான்ட் யூஸ் பண்ணாம இருந்தது; டாய்லெட்டை சுத்தம் செய்யாம இருந்ததை பார்த்து கேள்விகளால் துளைச்சு எடுத்துட்டாங்களாம்,''

''சில டாக்டர்களுக்கு 'மெமோ' கொடுக்கச் சொன்னதுனால, அரண்டு போயிட்டாங்களாம். அதுக்கப்புறம் 'டெய்லி' வார்டுக்கு போயி, நோயாளிகளை 'செக்கப்' செஞ்சாங்களாம். அரசியல் அழுத்தத்துல, 'பெட்' வாங்குன நோயாளிகள் பலரையும், வீட்டுக்கு அனுப்பிட்டாங்களாம்,''

''அடடே, அப்படியா,'' என்ற மித்ரா, ''இலைக்கட்சிக்காரங்க பயந்துட்டு இருக்கற சமயத்துல, தாமரை கட்சி எம்.எல்.ஏ., வானதி, டில்லி வரைக்கும் போயி, சாதிச்சுக் காட்டுறாங்களாமே,'' என, சப்ஜெக்ட் மாறினாள்.

''ஆமாப்பா, தேசிய மகளிரணி செயலரா இருக்கறதுனால, மத்திய அரசோடு நெருக்கமான உறவு வச்சிருக்காங்க. கொஞ்ச நாளைக்கு முன்னாடி, சென்ட்ரல் மினிஸ்டர்ஸ் கட்கரி, நிர்மலா சீதாராமன், சந்தோஷ் கங்குவாரை சந்திச்சு, பேசி இருக்காங்க,''

''சிறு குறு தொழில்துறையினருக்கு உதவி செய்யணும்னு கோரிக்கை வச்ச அவரு, வட மாநில தொழிலாளருக்கு உதவி மையம் அமைக்கணும்னு சொல்லிட்டு வந்திருக்காராம்,'' என்றபடி, சமையலறைக்குள் நுழைந்தாள் சித்ரா.

''கார்ப்பரேஷன் நியூஸ் ஒன்னுமே சொல்லலையே,'' என, வம்புக்கிழுத்த மித்ராவுக்கு, பில்டர் காபி கோப்பையை நீட்டிய சித்ரா, ''நண்பர்களா வலம் வந்த இரு உதவி கமிஷனர்களுக்கு, 'நிர்வாக நலன்'ன்னு சொல்லி, இட மாறுதல் கொடுத்திருக்காங்க. ஆனா, 'பசை'யுள்ள பதவியில இருக்கற அதிகாரி, இருக்கையை விட்டுத்தர மறுத்துட்டாராம்,''

''கெஞ்சிப்பார்த்த நண்பனான அதிகாரி, மருத்துவ விடுப்புல போயிட்டாராம். அதனால, நண்பனின் பதவியையும், 'பசை'யுள்ள அதிகாரியையே சேர்த்து பார்க்கச் சொல்லிட்டாங்க. இப்போ, கமிஷனரையே மாத்திட்டாங்க,''

''எந்தெந்த பதவிக்கு, அரசாணைப்படி யாரை நியமிக்கணும்னு, கோப்புகளை துாசு தட்டுனா, இருக்கற பதவியும் போயிடுமோன்னு, கார்ப்பரேஷன் ஆபீசர்ஸ் பலரும் பயத்துல நடுங்கிட்டு இருக்காங்களாம்,''

''இதுக்கு இடையில, நகரமைப்பு பிரிவுல கரன்சியை எண்ணிக்கிட்டு இருந்த அதிகாரி, மீண்டும் பதவி கேட்டு, பழையவரிடம் மன்றாடி பார்த்திருக்காரு; சூரியக்கட்சி பிரமுகர்கள் மூலமாவும் அழுத்தம் கொடுத்திருக்காரு. ஆனா, உத்தரவு போட மாட்டேன்னு, கறாரா மறுத்துட்டாராம்,'' என்றபடி, வராண்டாவில் அமர்ந்து, நாளிதழ்களை புரட்ட ஆரம்பித்தாள் சித்ரா.

''அப்படியா,'' என்ற மித்ரா, ''தடுப்பூசி ஸ்டாக் இருக்கா, இல்லையா,'' என, 'ரூட்' மாறினாள்.

''அதுவா, ரெண்டு நாளா, மாற்றுத்திறனாளிகளுக்கும், அவரை சார்ந்தோருக்கும் தடுப்பூசி செலுத்துறாங்க. இதுல, விளாங்குறிச்சியில இருக்கற கவர்மென்ட் ஸ்கூல்ல நடக்குற முகாமுக்கு, தி.மு.க.,வை சேர்ந்த ரெண்டு பிரமுகர்கள் தவறாம வர்றாங்களாம். தடுப்பூசி டோக்கனுக்கு, 200 ரூபாய் வசூலிக்கிறாங்களாம். யாரையும் கட்டாயப்படுத்துறதில்லையாம். சிலர் பணம் கொடுத்து டோக்கன் வாங்கி, ஊசி போட்டுட்டு போறாங்களாம். வருவாய்த்துறையினர் கண்டுக்கறதில்லையாம்,''

''அக்கா, இதையெல்லாம் உளவுத்துறைக்காரங்கதான், அரசாங்கத்துக்கு 'ரிப்போர்ட்' கொடுக்கணும். அவுங்க, என்ன செய்றாங்கன்னே தெரியலை,'' என்றபடி, 'டிவி'யை 'ஆன்' செய்தாள் மித்ரா.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X