யாருக்கு முன்னுரிமை அளிப்பது?| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

யாருக்கு முன்னுரிமை அளிப்பது?

Added : ஜூன் 16, 2021
Share
அவிநாசி : அவிநாசி பேரூராட்சியில், இரண்டிரண்டு வார்டு மக்களுக்கு தடுப்பூசி செலுத்தி கொள்ளும் வகையில், சுகாதாரத் துறையினர் திட்டமிட்டனர். அதன்படி, முதலாம் மற்றும் 18 வது வார்டு மக்களுக்கு அவிநாசி ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியில் தடுப்பூசி செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டது.இதையறிந்த மக்கள், பள்ளி முன் திரண்டனர். ஆனால், அங்கு வந்த தி.மு.க., நிர்வாகிகள், 'முதலாம் மற்றும்

அவிநாசி : அவிநாசி பேரூராட்சியில், இரண்டிரண்டு வார்டு மக்களுக்கு தடுப்பூசி செலுத்தி கொள்ளும் வகையில், சுகாதாரத் துறையினர் திட்டமிட்டனர்.

அதன்படி, முதலாம் மற்றும் 18 வது வார்டு மக்களுக்கு அவிநாசி ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியில் தடுப்பூசி செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டது.இதையறிந்த மக்கள், பள்ளி முன் திரண்டனர். ஆனால், அங்கு வந்த தி.மு.க., நிர்வாகிகள், 'முதலாம் மற்றும் 18ம் வார்டு மக்களுக்கு மட்டுமே தடுப்பூசி போடப்படும். மற்ற வார்டு மக்கள், அந்தந்த தேதியில் வாருங்கள்,' என்றார்.இதையறிந்த அ.தி.மு.க., - பா.ஜ., நிர்வாகிகள், சுகாதாரத்துறை அலுவர்களிடம் 'அனைத்து வார்டு மக்களுக்கும் தடுப்பூசி போட வேண்டும்,' என்றனர்.

இரு தரப்பினரையும் போலீசார் சமாதானப்படுத்திய பின், முகாம் துவங்கியது. சுகாதாரத் துறையினர் கூறியதாவது:ஊரக பகுதிகளில், அந்தந்த ஊராட்சி நிர்வாகத்தினர் பொறுப்பில் தடுப்பூசி செலுத்தும் பணி, ஒப்படைக்கப்படுகிறது. பேரூராட்சியில், வார்டு வாரியாக தடுப்பூசி செலுத்த திட்டமிடப்பட்டு பணியை துவக்கினோம். ஆனால், அனைத்து வார்டுகளையும் சேர்ந்த மக்கள் குவிந்துவிட்டனர்.பேரூராட்சியில், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகம் இல்லாததால், பொறுப்பை யாரிடம் ஒப்படைப்பது என, தெரியவில்லை.

பணியை பொறுப்பேற்று நடத்த ஆளுங்கட்சியினர் முன்வந்தால், எதிர்க்கட்சியினர் எதிர்ப்பதும், எதிர்க்கட்சியினர் முன்வந்தால் ஆளுங்கட்சியினர் தடுப்பதுமாக உள்ளதால், திட்டமிட்டபடி பணியை செய்து முடிக்க முடியாத நிலையுள்ளது.இவ்வாறு, அவர்கள் புலம்பினர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X