மூணாறு :பெண் ஒருவர் முறத்தால் புலியை விரட்டியதை கேள்விப்பட்டுள்ளோம். அதேபோல் சற்று வித்தியாசமாக கேரளா மூணாறு அருகே வளர்ப்பு நாயை தாக்கிய சிறுத்தையை ராஜம்மா 65, என்பவர் கம்பால் அடித்து விரட்டிஉள்ளார்.
மூணாறு அருகே காந்தலுார் ஊராட்சி பாம்பன்பாறையில் கடந்த 15 ஆண்டுகளாக தனியே வசித்து வருபவர் ராஜம்மா. 'குக்கூ' என பெயரிட்டு ஆண் நாய் வளர்க்கிறார்.
நேற்று முன்தினம் இரவு வீட்டுக்கு வெளியே குக்கூ சத்தமாக குரைத்தது. வெளியே வந்த ராஜம்மா டார்ச்லைட் அடித்து பார்த்தார். விலங்கு ஒன்று நாயுடன் சண்டையிட்டது. அருகே சென்று அந்த விலங்கை கம்பால் தாக்கினார். அப்போது தான் அந்த விலங்கு சிறுத்தை என்பதை அறிந்தார்.இதற்கிடையே அடிபட்ட ஆக்ரோஷத்தில் சிறுத்தை அவரை தாக்க முயலவே தைரியத்தை வரவழைத்தவர் கம்பால் பலமாக சிறுத்தையை தாக்கினார். மேலும் வீட்டுக்கு வெளியே இருந்த மின்
விளக்கை ஆன் செய்யவே அதிகப்படியான வெளிச்சத்தில் மிரண்ட சிறுத்தை அங்கிருந்து ஓடியது. சிறுகாயமடைந்த நாயை மீட்டு அக்கம்பக்கத்தினர் உதவியுடன் சிகிச்சை அளித்தார்.---