அறநிலையத்துறை கோயில் பணிகளில் முதலில் கவனம் செலுத்தட்டும்: பள்ளி நிர்வாகத்தை ஏற்று நடத்துவதற்கு ஹிந்து அமைப்புகள் கண்டனம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

அறநிலையத்துறை கோயில் பணிகளில் முதலில் கவனம் செலுத்தட்டும்: பள்ளி நிர்வாகத்தை ஏற்று நடத்துவதற்கு ஹிந்து அமைப்புகள் கண்டனம்

Added : ஜூன் 17, 2021
Share
மதுரை:காஞ்சி ஏகாம்பரநாதர் கோயிலுக்கு சொந்தமான இடம் சென்னை கீழப்பாக்கத்தில் உள்ளது. இந்நிலம் 99 ஆண்டுகள் குத்தகைக்கு எடுத்த நிலையில், குத்தகை காலம் முடிந்தபின் நீதிமன்றம் உத்தரவுபடி இடமும், அங்குள்ள சீதா கிங்ஸ்டன் பள்ளி கட்டடத்தையும் அறநிலையத்துறை கையகப்படுத்தியது. இப்பள்ளியை அறநிலையத்துறையே நடத்தும் என்று அமைச்சர் சேகர்பாபு கூறியதற்கு 'ஏற்கனவே கோயில்

மதுரை:காஞ்சி ஏகாம்பரநாதர் கோயிலுக்கு சொந்தமான இடம் சென்னை கீழப்பாக்கத்தில் உள்ளது. இந்நிலம் 99 ஆண்டுகள் குத்தகைக்கு எடுத்த நிலையில், குத்தகை காலம் முடிந்தபின் நீதிமன்றம் உத்தரவுபடி இடமும், அங்குள்ள சீதா கிங்ஸ்டன் பள்ளி கட்டடத்தையும் அறநிலையத்துறை கையகப்படுத்தியது.

இப்பள்ளியை அறநிலையத்துறையே நடத்தும் என்று அமைச்சர் சேகர்பாபு கூறியதற்கு 'ஏற்கனவே கோயில் நிர்வாகங்களுக்குகீழ் இயங்கும் பள்ளிகளின் தரம் உயராமல் அப்படியே இருக்கும்போது இது தேவை இல்லாதது. அறநிலையத்துறை கோயில் பணிகளில் முதலில் கவனம் செலுத்தட்டும்' என ஹிந்து அமைப்புகள், கல்வியாளர்கள் கண்டனம் தெரிவித்து உள்ளனர்.

இது திசை திருப்பும் முயற்சி

ஹிந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியன்: அறநிலையத்துறைக்கு கீழ் உள்ள கோயில்கள் பல இன்னும் சீரமைக்கப்படாத சூழலில் பள்ளி நிர்வாகத்தை எப்படி நடத்த போகிறார்கள். பள்ளியை தனியாரிடம் கொடுத்து வாடகையை வசூலித்தால் அறநிலையத் துறைக்கு வருவாய் கிடைக்கும். பள்ளியை நடத்த வேண்டியது அறநிலையத்துறையின் வேலை அல்ல.

கும்பாபிேஷகம், திருப்பணிகள் செய்வதுதான் அதன் முக்கிய பணி. அறநிலையத்துறையின் பணிகள் என்னென்ன என்பது குறித்து நீதிமன்றமே வரையறைத்துள்ளது. வாடகை தராத இடங்களில் முதலில் வசூலிக்கட்டும். பல ஆண்டுகளாக குறைந்த வாடகைக்கு இருப்பவர்களே முறையாக வாடகை செலுத்துவதில்லை. தி.மு.க., தேர்தல் அறிக்கையில் சொல்லப்பட்ட விஷயங்கள் சிலவற்றை நிதி பற்றாக்குறையால் அவர்களால் உடனடியாக செய்ய முடியவில்லை. அதை திசை திருப்பவே இதுபோன்ற அறிவிப்புகளை தி.மு.க.,வினர் வெளியிட்டு வருகிறார்கள்.

அறநிலையத்துறைக்கு இதுவா வேலை

ஹிந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன்சம்பத்: விளம்பரத்திற்காக அறநிலையத்துறை இதுபோன்ற அறிவிப்பை வெளியிட்டுள்ளது. 99 ஆண்டுகள் குத்தகைக்கு எடுத்தவர்கள், தொடர்ந்து அப்பள்ளியை நடத்த முடியவில்லை. அந்த சுமையை அறநிலையத்துறை தலையில் இறக்கிவைத்துவிட்டனர். அறநிலையத்துறைக்கு இதுவா வேலை.

பள்ளி நிர்வாகத்தை நடத்த இப்போது என்ன அவசியம் வந்தது. ஆக்கிரமிப்பில் உள்ள கோயில் நிலங்களை மீட்க முதலில் நடவடிக்கை எடுக்கட்டும். காஞ்சி ஏகாம்பரநாதர் கோயில் இடத்தை குத்தகை முடிந்து மீட்டதுபோல், சிவன்கோயில் இடத்தை 99 ஆண்டுகள் குத்தகைக்கு எடுத்துள்ள லயோலா கல்லுாரியிடமிருந்தும் மீட்க வேண்டும். அதை மீட்க அறநிலையத்துறை என்ன நடவடிக்கை போகிறது.

ஊழலுக்கு வழிவகுக்கும்

ஆலயபாதுகாப்பு இயக்க மாநில செய்தி தொடர்பாளர் சுந்தரவடிவேல்: பள்ளி நடத்துவது போன்ற சமூக சார்ந்த வேலையை செய்வது அரசின் பணி. அறநிலையத்துறை பணி அல்ல. இத்துறை பள்ளி, கல்லுாரிகள் வெற்றிகரமாக செயல்பட்டதாக இதுவரை எந்த தகவலும் இல்லை. இச்சூழலில் சீதா கிங்ஸ்டன் பள்ளியை ஏற்று நடத்துவது ஊழலுக்கு வழிவகுக்கும்.

அந்த பள்ளியை பள்ளிக்கல்வித்துறை வசம் ஒப்படைத்து, அருகில் உள்ள அரசு பள்ளி நிர்வாகத்தோடு இணைத்துவிடலாம். அறநிலையத்துறை கோயில் தொடர்பான பணிகளில் மட்டுமே கவனம் செலுத்த வேண்டும். சொத்துக்கள், காணாமல் போன நகைகளை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும். கோயில் தேர்கள், குளங்கள், நந்தவனம் சிதலமடைந்துள்ளன. அதை புனரமைக்க வேண்டும். நிர்வாக சீர்கேடுகளை களைய கமிஷன் ஒன்றை அமைக்க வேண்டும்.

கோயில் நிர்வாகத்தை கவனிக்கட்டும்

சுதேசி விழிப்புணர்வு இயக்க மாநில அமைப்பாளர் ஆதிசேஷன்: கோயில்களை நிர்வகிப்பது மட்டும்தான் அறநிலையத்துறையின் வேலை. கோயில்களை பாதுகாப்பது, சொத்துக்களை பராமரிப்பதுதான் அத்துறைக்கு முக்கியமானது. இச்சூழலில் பள்ளி நிர்வாகத்தில் கவனம் செலுத்துவது என்பது குழப்பத்தை ஏற்படுத்தும்.

ஏற்கனவே அறநிலையத்துறை அதிகாரிகள், கோயில் நிர்வாக பணிகளில் கவனம் செலுத்தாமல் உள்ள நிலையில் பள்ளி நிர்வாகத்தில் எப்படி கவனம் செலுத்துவர். பள்ளிக்கு தேவையான வசதிகளை கோயில் வருவாயில் இருந்துதான் எடுத்து செலவழிக்க வேண்டியிருக்கும். கோயில் இடத்தில் ஷாப்பிங் மால் இருந்தால், அதை அறநிலையத்துறை ஏற்று நடத்துமா. இப்படி ஒவ்வொரு இடத்தில் உள்ளதை அறநிலையத்துறையே ஏற்று நடத்தினால், அத்துறை உருவாக்கப்பட்டதற்கான அறம் கேள்விக்குறியாகிவிடும். எனவே பள்ளி நிர்வாகத்தை தனியாரிடம் குத்தகை அடிப்படையில் ஒப்படைத்துவிடலாம்.

மாற்று ஏற்பாடு

சங்கர் கணேஷ், ஹிந்து முன்னணி மதுரை கோட்ட செயலாளர், திண்டுக்கல்: தமிழகத்தில் பல கோயில்களில் நிலம் காணாமல் போய்விட்டது. அதனை உடனடியாக மீட்க வேண்டும். பல ஆண்டுகளாக கோயில் ஆக்கிரமிப்புகளை அகற்றுதல், வேத பாட சாலைகளை உருவாக்குதல், பக்தர்களுக்கு தேவையான வசதிகள் என பல்வேறு விஷயங்கள் உள்ளன. ஹிந்து அறநிலையத்துறை அதில்தான் கவனம் செலுத்த வேண்டும்.

அதை செய்வதை விட்டுவிட்டு காஞ்சி ஏகாம்பரநாதர் கோயிலுக்கு சொந்தமான இடத்தில் இருந்த பள்ளியை ஹிந்து அறநிலையத் துறை ஏற்று நடத்துவது என்பது தேவையற்றது. அப்பள்ளி மாணவர்களுக்கு மாற்று ஏற்பாட்டை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பூஜை நடக்காத கோயில்கள்

எஸ்.சி. பாலகிருஷ்ணன், ஹிந்து ஆலய பாதுகாப்பு இயக்க முன்னாள் மாநிலச் செயலாளர், தேனி: காஞ்சிபுரம் ஏகாம்பர நாதர் கோயில் இடத்தில் செயல்பட்ட சீதா கிங்ஸ்டன் பள்ளியை ஹிந்து அறநிலையத் துறை ஏற்று நடத்துவதாக அறிவித்துள்ளது வேதனையளிக்கிறது. பராமரிப்பு இல்லாத, பூஜை நடைபெறாத பல ஆயிரம் கோயில்களில் விளக்கேற்றி பூஜைகள் நடத்த அறநிலையத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும். இதை விட்டு பள்ளிகளை ஏற்று நடத்துவது, பெண்களை பூஜாரியாக நியமிப்பது, கோயில்கள் முன் பிரியாணி பொட்டலம் வழங்குவதை நிறுத்த வேண்டும்.

தேவையற்ற வேலை

எஸ்.எம்., பாலசுப்பிரமணியம், மாவட்ட செயலாளர், விஷ்வ ஹிந்து பரிஷத், சிவகங்கை: கோயில்கள் மூலம் வரும் வருவாய் முறையாக செலவிடப்படுகிறதா என்பதை கணக்கு பார்ப்பது மட்டுமே சட்டப்படி அறநிலையத்துறையின் பணி. அதை விடுத்து பள்ளிகளை நடத்துவதாக கூறுவது தி.மு.க., அமைச்சர் சேகர்பாபுவிற்கு தேவையற்ற வேலை.

வி.எச்.பி., கட்டுப்பாட்டில் உள்ள கிராம கோயில் பூஜாரிகள் அமைப்பு சார்பில் கடந்த சில ஆண்டாக அனைத்து ஜாதியையும் சேர்ந்த 6000 பேருக்கு அர்ச்சகருக்கான பயிற்சி அளித்துள்ளோம். ஆனால், தி.மு.க., மட்டுமே அனைத்து ஜாதியினரையும் அர்ச்சகராக்க முயற்சிப்பது போல், அறிவிப்பது வேடிக்கையாக உள்ளது. இந்த உத்தரவின் மூலம் கோயில்களுக்குள் தி.மு.க., மற்றும் திராவிட கட்சி ஆதரவாளர்களை பூஜாரிகள், அர்ச்சகராக கோயில்களுக்குள் நுழைய வைக்க தி.மு.க., சதி செய்கிறது.

இந்து அறநிலையத்துறை இடத்தில் செயல்படும் சென்னை லயோலா கல்லுாரி 99 ஆண்டு ஒப்பந்தம் முடிந்தும், அக்கல்லுாரி நிர்வாகத்தை காலி செய்ய வைக்க தி.மு.க.,விற்கு தைரியம் இருக்கிறதா. ஹிந்துக்களின் ஆகம விதியில் தலையிடும் தி.மு.க., அரசு மற்ற மத ஆகமவிதிகளில் தலையிட தைரியம் இருக்கிறதா.

எந்த வகையில் நியாயம்

சரவண கார்த்தி, மாநில அமைப்பாளர், விஸ்வ ஹிந்து பரிஷத் துறவியர் பேரவை, ஸ்ரீவில்லிபுத்துார்: தமிழகத்தில் அறநிலையத் துறைக்கு உட்பட்ட பல கோயில்கள் பாழடைந்து பல ஆண்டுகளாகியும் சீரமைக்கவில்லை. இந்நிலையில் அறநிலையத்துறை சார்பில் பள்ளியை ஏற்று நடத்துவது ஏற்புடையது அல்ல. கோயில்களை காப்பாற்றவும், கோயில் நிலங்களை மீட்கும் பணியில் மட்டும் தான் அறநிலையத்துறை அமைச்சர் கவனம் செலுத்த வேண்டும்.

பள்ளிக்கல்வி விவகாரங்களில் அறநிலையத்துறை தலையிடக்கூடாது. பள்ளியை அறநிலைய துறை ஏற்று நடத்துவது சரியான தீர்வு ஆகாது. பாழடைந்த கோயில்களை சீரமைப்பதில் கவனம் செலுத்தாத அறநிலையத்துறை பள்ளி விஷயத்தில் தலையிடுவது எந்த வகையில் நியாயம்.இவ்வாறு கூறினர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X